கேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் ! ஒரு அனுபவம் !

மீனவர்கள், அரசு ஊழியர்களை விடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் கேரளாவில் நிவாரணம் செய்வதாக டிவிட் போட்டார் மோடி. அத்தகைய அழுகுணி வேலைகள், விளம்பரங்களை கேரள மக்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்தம்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 10

கேரளா ஆலப்புழா மாவட்டம் சங்கனாசேரியில் உள்ள NSS இந்து கல்லூரிக்கு எதிரில் மாலை 7 மணியளவில் நடந்து சென்றோம். காலம் ஆகஸ்டு மாதத்தின் நான்காம் வாரம். அந்த ஏரியாவில் கண்ணில் பட்ட சில இடங்களில் காக்கி டவுசர் அணிந்த ஒரு சில இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். என்னவென்று கண்களை சற்று உயர்த்தி மேல பார்த்ததும் ஆ.எஸ்.எஸ் அலுவலகம்.

சேவாபாரதியின் அலுவலகம்

வெள்ள நிவாரணப் பணிக்காக அங்கயே முகாம் அமைத்து அமர்ந்திருந்தார்கள். வெளியில் நின்றிருந்த லாரியில் இருந்து சில மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அருகில் காக்கி டவுசர் அணிந்த ஒருவர் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.

அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரோ, சற்று தொலைவில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவரை கை காமித்து விட்டார். அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

மேலும் கீழும் உற்றுப் பார்த்து விட்டு, கொஞ்சம் வெயிட் பன்னுங்க… வரேன்னு சொல்லிட்டு விட்டு போனவர், கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து…… நீங்க உள்ள வாங்க என்று அழைத்து சென்று வேறு ஒருவரை காட்டி விட்டு சென்றார். அவர் பெயர் ஹரிதாஸ். அவர் நம்மை கண்களால் ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்.

யூனியன் மினிஸ்டர் அல்போன்ஸ் கண்ணாந்தனம்.

எங்களைப் பற்றி ஹரிதாஸ் விசாரிக்க ஆரம்பித்தார். எங்கள் மலையாளம் அவருக்கு புரியவில்லை, அவரின் தமிழ் எங்களுக்கு புரியவில்லை. எனவே தமிழ் தெரிந்த ஒருவரின் பெயரை சொல்லி அழைத்தார்கள்… அவர் வருவதற்கு கொஞ்சம் தாமதமானதால் இப்போதைக்கு நாங்க பதில் சொல்லுற நிலைமையில இல்ல.. நீங்க கெளம்புங்க என்று அரைகுறை தமிழில் நம்மை விரட்டினார் அவருடன் இருந்த மற்றொருவர்.

அந்த நேரம் மத்திய இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணாந்தனம்- இவர் கேரளாவின் சி.பி.எம். ஆதரவால் 2006 முதல் 2011 வரை கஞ்சிராபள்ளி-யில் எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் தற்போது பாஜக-வின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்ஜியசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மின்னணு, தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம், மற்றும் சுற்றுலாத்துறைக்கான மத்திய துணை அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.-  இவர் வருகையால் நம்மை மறந்து பிசியாகினர்.

நமக்கு தமிழில் தகவல்களை சொல்லி உதவிய சுயம் சேவக் (வலது)

நாங்கள் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த போது ஒருவர் வந்து, “நீங்க தான் தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கிங்களா?” எனக் கேட்டு விட்டு “அதிகம் சொல்ல முடியாது.. குறைந்த பட்சம் சொல்லுறோம்”… என்று அழைத்துச் சென்று நாற்காலியில் அமர்த்தினார். அவர் எங்களை பற்றிய அறிமுகத்தை அதிகம் கேட்டுக் கொண்டே விஷயத்திற்கு வந்தார்….

“ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டத்துல கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. தொடர்ந்து இந்த பகுதியில தான் வேலைகள், நிவாரண உதவிகள் செஞ்சிட்டு இருக்கோம். ஒரு நாளைக்கு 17,000 பேருக்கு எங்கள் சார்பாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உணவு மற்றும் தண்ணீர், உடைகள் ஆகியவைகளை வழங்குகிறோம். இதற்காக வெளி மாநிலத்துல இருந்து பல உதவிகளை பெறுகிறோம். அவர்களும் எங்களுக்கு வழங்குகிறார்கள். நேற்று முதல் தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. அந்த பகுதிகளுக்கு சென்று வீட்டை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறோம்.” என்று சொல்லி முடிப்பதற்குள்… ஒருவர் எங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அவரால் சரிவர போட்டோ எடுக்க முடியாததால் இளைஞர் ஒருவரை அழைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதுமட்டுமில்லாமல், ”உன்னோட செல்போன்லயும் எடுத்துக்கொள்” என்று சொல்லி விட்டு போனார்.

அதற்குள் உள்ளே சென்ற அல்போன்ஸ் வெளியே வந்ததால் முழுக் கூட்டமும் அவரை காணச்சென்றது. வந்தவரோ அனைவருக்கும் நமஸ்காரம் சொல்லி கைகுலுக்கினார். எங்களுக்கும் கைகொடுத்தார். அவரிடம், நிவாரணப்பணிகள் பற்றி கேட்டபோது “அதைப் பற்றி பேச நேரமில்லை” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

நாங்களும் அருகில் இருந்தவர்களிடம் கிளம்புகிறோம் என்று சொல்லி விட்டு ஒரு அடி எடுத்து வைத்ததும், ஹரிதாஸ் ஓடிவந்து, இந்த தம்பிகளை போட்டோ பிடிச்சிட்டிங்களான்னு கேட்டுவிட்டு…. எங்களிடம் பார்வையை எங்களிடம் திருப்பி “ஒன்னுமில்ல தம்பி…. பைல் பன்னி வச்சிக்கிறதுக்கு தான் போட்டோ” என்றார். நாங்களும் வேறு வழியில்லாமல் சரி என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

நடக்க ஆரம்பித்த சில விநாடியில்…

“தம்பி..நில்லுங்க … நீங்க தமிழா? என்று ஒரு குரல் ஒலித்தது. திரும்பி பார்த்தால் அறுபது வயதைக் கடந்த ஒருவர் நம்மை நெருங்கி…….. இங்க இப்ப பார்த்திங்க இல்ல.. அவரு தான் யூனியன் மினிஸ்டர்…. உங்க ஊர்ல இந்த மாதிரி எந்த மினிஸ்டரயாவது சாதாரணமா வருவாரா? பார்க்க முடியுமா? அதெல்லாம் இங்க தான் முடியும். திராவிட கட்சிகள் தமிழநாட்ட குட்டி சுவராக்கிடுச்சி. நீங்க எல்லாம் நம்ம அர்னாப் கோஸ்வாமிய பாக்கனும். அவரை மட்டும் தான் பார்க்கனும். நம்ம பாரத பிரதமர் மோடிக்காக நீங்க எல்லாம் நெரயா பன்னனும்பா…

நீங்க மலையாளம் கத்துக்கிறது ரொம்ப நல்லது. இந்த பக்கம் அடிக்கடி வந்தா சமாளிக்க முடியும். மலையாளத்துல பாஜகவோட சேனல் ஒன்னு இருக்கு.. அதையும் அடிக்கடி பார்க்கனும்.” என்று தனது பிரச்சாரத்தை பரப்புவதிலேயே கவனம் செலுத்தினார். ஆக வெள்ளம் குறித்துப் பேசச் சென்றால் அவர்கள் அர்னாப் கோஸ்வாமியின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். பிறகு கிளம்பினோம்.

உண்மையில் கேரளாவில் எங்களுக்கு மொழியோ, இடங்களோ பிரச்சினையாக இருக்கவில்லை. புது இடம் என்பதால் வரும் பதட்டம் கூட சில மணித்துளிகளில் மறைந்துவிட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கேம்பானது எங்களது முன் முடிவுகளைத் தாண்டி, சூழலே அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. புகைப்படம் எடுப்பது, முறைத்து பார்ப்பது, நோட்டம் விடுவது போல் பார்ப்பது என திகிலூட்டுவதாக அமைந்திருந்தது. அப்போது தான் புரிந்துகொள்ள முடிந்தது உண்மையில் “பாசிஸ்ட்கள் தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை.”

*****

டவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவில் பாஜகவின் இந்துத்துவ அரசியல் எடுபடுவதில்லை என்பதால், சபரிமலை ஐய்யப்பனின் கோபமும், மாடு தின்னும் பாவத்தாலும் தான் இந்த பேரழிவு என ஒருபக்கம் தங்களின் வெறுப்பை கக்குகின்றனர் வட இந்திய சங்கிகள்.

இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ் உள்ளூர் தலைகள் எப்படியாவது நமது இருப்பை நிலைநாட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு நல்வாய்ப்பாக இந்த நிவாரணப் பணியை பார்கிறார்கள். அதனால் தான் தாங்கள் மட்டும் ஈடுபாட்டோடு வேலைகள செய்து வருகிறோம் என்பது போல ஒரு பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்க முயற்சி செய்கின்றனர்.

சேவாபாரதியின் நிவாரண வாகனம் ( இடம் – செங்கனூர் )

குறிப்பாக, சில இடங்களில் முகாம்களை அமைத்து அதன் மூலம் உதவி செய்வது ஒருபுறம், மற்றொருபுறம் நேரடியாக இந்துக்கள் யாரும் கம்யூனிஸ்ட் அரசுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சமூக வலைதளங்கலில் அறைகூவல் விடுவது என்று தீவிரமாக இருக்கிறார்கள். இந்தத் தீவிரம் பாதிக்கப்பட்ட மக்களை பாதுக்காக்க வேண்டும் என்பதல்ல….. தமிழகத்தில் 2015 வெள்ள நிவாரணப் பணிக்கு வந்த பொருட்களின் மீது ஜெயலலிதா தன் படத்தை ஒட்டி பெயர் வாங்கிய பார்முலாதான் இதுவும்.

சி.பி.எம் தோழர்கள் ஐம்பது பேர் ஒரு வாகனத்தில் நிவாரணப் பணிக்கு செல்கிறார்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ் சேவக்குகள் ஐம்பது பேரை ஐந்து வாகனங்களில் பிரித்து அனுப்புகிறார்கள். அதன் மூலம் நாங்கள் நிவாரணப் பணிகளை பிரம்மாண்டமாக செய்துவருகிறோம் என ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறர்கள்.

ஆர்.எஸ்.எஸ்-இன் சேவா பாரதிக்கு வட இந்தியாவில் இருந்து நிறைய பொருட்கள் வந்திருக்கின்றன. அவர்களிடன் வாகனங்களும் நிறைய இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்குவது அவர்களின் பிரதானமான பணியாக இருந்தது. அவற்றை பதிவு செய்வது, ஊடகங்களுக்கு அளிப்பது அனைத்தும் திட்டமிட்ட வகையில் செய்தனர். அவர்களது நிவாரண பொருள் வழங்கும் பணி அனைத்து இடங்களுக்கும் பெரும் ஊர்வலமாக சென்றது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சிலர் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியையும் செய்தனர். மக்களைப் பொறுத்த வரை அரசியல் ரீதியான கருத்துக்களையும் இந்த சேவைகளையும் பிரித்தே பார்க்கின்றனர். சி.பி.எம் மற்றும் மற்ற கட்சிகள், தன்னார்வலர்கள் யாரும் இத்தகைய விளம்பர நாட்டமில்லாமல் அமைதியாக பணி செய்து வந்தனர். சி.பி.எம் கட்சியினரின் தொண்டர் படை அதிகம் என்றால் பொருட்கள் வைத்திருப்பதில் சேவா பாரதி முந்தியது (நாம் இருந்த இடத்தில்) எனலாம்.

எனினும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு இந்த வெள்ள நிவாரண பணிகளை பயன்படுத்திக் கொண்டது. மீனவர்கள், அரசு ஊழியர்களை விடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் கேரளாவில் நிவாரணம் செய்வதாக டிவிட் போட்டார் மோடி. அத்தகைய அழுகுணி வேலைகள், விளம்பரங்களை கேரள மக்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்தம். மீனவர்கள் காப்பாற்றியது குறித்த நிறைய வீடியோக்கள் கேரள தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின. வரலாற்றை மறைத்து விட முடியுமா என்ன?

– வினவு களச் செய்தியாளர்கள்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. சிறப்பான பதிவு RSS தவிர வேறு எவரும் பணிசெய்யவில்லை என்பது பாசிச பயங்கரவாத மோடி அவர்களின் விளம்பர பதிவு.
    ஆனால் வினவின் பதிவுகள் ஜனநாயக ரீதியில் மிகவும் சிறப்பான வகையில் இருக்கிறது வாழ்த்துக்கள் 👌 RSS சங்கிகளை அம்பலப்படுதுவது இந்த காலத்தின் தேவையாகும்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க