திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம்!
சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும்!
புஜதொமு அரங்குகூட்டம் !
திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் எனும் தலைப்பில் திருச்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக BHEL சமுதாய கூடத்தில் 22.10.19 அன்று அரங்குகூட்டம் நடைபெற்றது.
புஜதொமுவின் இணைப்புச் சங்கமான பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து அந்த அரங்கக் கூட்டத்தை நடத்தின.
இதற்கு முன்னதாக, அரங்குகூட்டத்தின் நோக்கத்தை விளக்கும் பிரசுரத்தின் வாயிலாக பேருந்து நிலையங்களிலும், கல்லூரிகளிலும், தொழிற்சாலைகளிலும் விரிவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இளம் மாணவர்கள், வெளியூர்களில் இருந்தும் பொருளாதார ஆய்வாளர், பேராசிரியர்களின் உரையை கேட்க பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – புஜதொமு அமைப்பின் பொதுச் செயலர் தோழர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், பேரா ச.அய்யம்பிள்ளை, தோழர் மா.சி. சுதேஷ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தோழர் உத்ராபதி, பொதுச் செயலர், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் – பு.ஜ.தொ.மு., திருச்சி தனது தலைமையுரையில், ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையை தீவிரமாக அமல்படுத்திவருவதால், இன்று மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். உழைப்பு சமூகமயம் இலாபம் தனியார்மயம் என்று உள்ளது. சோசலிசத்தில் உழைப்பும் சமூகமயம் இலாபமும் சமூகமயம் என இருக்கும் என்று சுருக்கமாக எடுத்து கூறினார்.
இந்திய பொருளாதார நெருக்கடிகளும் அதன் காரணங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேரா.ச.அய்யம்பிள்ளை, (செயற்குழு உறுப்பினர், CCCE) அவர்கள், ”இந்திய முதலாளிகளே முதலாளித்துவத்திற்கு எதிராக உள்ளனர் என ரகுராம்ராஜன் கூறிய கருத்தையும், சமுதாயம் முழுவதும் முதலாளிகள் சுரண்டிகொண்டே இருப்பார்கள் என்று மார்க்ஸ் கூறியதையும் விளக்கினார். GDP-க்கும் மக்கள் நலனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் GDP உயர உயர சாதாரண மக்கள் சொத்தை இழந்தவர்களாகின்றனர். முதலாளிகள் சொத்து மேலும் அதிகரிக்கிறது. இந்த முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை மாற்றாமல் நாம் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் மக்களுக்கு நலன் விளைவிக்காது” என்றார்.
பொருளாதார நெருக்கடிகளும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் உரையாற்றிய, பொருளாதார ஆய்வாளர், முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள், தனது உரையில், ”இந்த அரசுக்கு பொருளாதார அறிவு கிடையாது! முதலாளி வருமான வரி கட்டுவது அவனிடம் வேலை செய்யும் தொழிலாளியை விட குறைவாகத்தான் கட்டுகிறார்கள். இந்திய பட்ஜெட்டிலேயே பொய் சொல்லுகிறார்கள். இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த இந்திய பட்ஜெட்டில் ஒரு நம்பர் கூட கிடையாது. வரவு செலவு கணக்கே கிடையாது. உலக வர்த்தகக் கழகத்தின் பரிந்துரைப்படி இந்தியாவுக்கு எல்லை இருக்கலாம் ஆனால் இந்தியாவிற்குள் எல்லை இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நிபந்தனை. இதுபடிதான் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை கட்டாயமாக்கினார்கள். அம்பானி ஜியோ-வுக்கு இரண்டு இலட்சம் கோடி கடன் பொதுத்துறை வங்கிகளில் உள்ளது. நாளை நட்டமென்று தப்பி ஓடுனால் நஷ்டம் மக்களுக்குத்தான். இந்தியாவில் முதலீடுகள் கடந்த பத்து வருடங்களாக இல்லை. 100 கோடி மூலதனமிட்டாலும் 100 பேருக்கு கூட நிரந்தர வேலை கிடையாது. 45 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு வேலையின்மை. முதல் உலக போருக்கும் இரண்டாம் உலக போருக்கும் இடையில் வந்தவர்கள்தான் ஹிட்லர், முசொலினி. பாசிசத்திற்கு சரியான களம் அந்த நெருக்கடிதான். அதே நிலைதான் இன்று இந்தியாவுக்கு நடக்கிறது.
இந்த நெருக்கடியை முன்வைத்து, முதலாவதாக, இதனால் உருவாகும் லும்பன் கும்பல்கள் நாம் முன்வைக்கும் தீர்வை விட அவர்கள் சொல்லும் பாசிச தீர்வை நோக்கி செல்வார்கள். அதன் மூலம் அவர்களின் பாசிச கொள்கைகளை தீவிரபடுத்துவார்கள். இரண்டாவதாக, இந்த நெருக்கடியை காரணம் காட்டி எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் இனி விற்பார்கள். மேலும் மேலும் தனியாருக்கு கொடுத்து முடிந்த வரை கொள்ளை அடிப்பார்கள்” என்பதை எடுத்துரைத்தார்.
திவாலாகும் இந்திய பொருளாதாரம் சோசலிசமே மாற்று ! என்ற தலைப்பில் உரையாற்றிய, தோழர்.மா.சி.சுதேஷ்குமார், (மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு.), ”தொழிலாளி வர்க்கம் தினந்தோறும் தனது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். மீனவர்கள் 12 மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க உரிமை இல்லை. விவசாயி தற்கொலை செய்கிறான். நெசவாளிக்கு நூல் இல்லை. இவ்வாறாக உழைக்கும் வர்க்கம் மரணக் குழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த முதலாளி வர்க்கம்தான். நல்ல கல்வி நல்ல வேலை நல்ல சம்பளம் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. வாழ்க்கை மிகவும் வெறுத்து போனபிறகுதான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்துவிட்டான் MRF ஆலைத் தொழிலாளி முரளி. நாம் அவருக்காக இரக்கப்படகூடாது. நமக்கு வர்க்க கோபம் வர வேண்டும். அவன் இறப்புக்கு காரணமான முதலாளித்துவத்துக்கு சவக்குழித் தோண்ட வேண்டும்” என்று உணர்த்தினார்.
படிக்க:
♦ அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
♦ தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
மேலும், ”அன்று ஐரோப்பாவை ஆட்டியது ஒரு பூதம். அந்த பூதத்தைதான் இன்று உலகம் முழுவதும் தேடுகிறது. அது என்னதான் என்று! முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு மாற்று சோசலிச பொருளாதாரமே! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஓட்டை வாங்கி முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பு தேவையா? அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே என்ற சோசலிசம் வேண்டுமா?
(பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்)
அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் என்பது இதுவரை சோசலிசத்தில்தான் நடந்துள்ளது” என்பதை விளக்கியவர், ”இந்த ஆண்டு பிப்ரவரியில் ட்ரம்ப் தலைமையில், அமெரிக்காவில் சோசலிசம் வரக்கூடாது என முதலாளிகளுடன் இணைந்து கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். ஏன் இந்த பயம்? உலகம் முழுவதும் உள்ள நெருக்கடி காரணமாக உழைக்கும் மக்கள் கம்யூனிசத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஒருநாள் பாட்டாளிவர்க்கம் இந்த முதலாளித்துவத்தை வீழ்த்தி கம்யூனிச சமூதாயத்தை படைக்கும்” என தனது உரையை நிறைவு செய்தார் அவர்.
ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலர், தோழர் மணலிதாஸ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியின் இடையே ம.க.இ.க. கலைக்குழுத் தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் உணர்வூட்டின.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு: 8903042388
எந்த நாட்டை என்று தெளிவாக சொல்லியிருக்கலாம்… சீனவா பாகிஸ்தானா இல்ல ரஷ்யாவா ? கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் இந்தியா ஒரு அந்நிய தேசம், சீனா பாக்கிஸ்தான் மற்றும் ரஷ்யாவை தான் அவர்களின் தாய் நாடாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். சீனா பாகிஸ்தானின் நலமே இவர்களின் நலன் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் தியாகிகள் கம்யூனிஸ்ட்கள்