கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !

அணுக்கழிவுகளை நீண்ட நாள் சேமிப்பதற்கான (AFR facility) முன் அனுபவம் தங்களுக்கு இல்லை என்று இந்திய அணுமின் நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்திருகிறது.

கூடங்குளம்பாதுகாப்புக் காரணங்களுக்காக கூடங்குளம் அணுமின் நிலையங்களை மூடுமாறு இந்திய அணுசக்தி நிறுவனத்திற்கு (NPCIL ) உத்தரவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் குழு உச்சநீதி மன்றத்தை அணுகியிருக்கிறது. அணுக்கழிவை பாதுகாப்பாக சேமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் அவகாசம் கோரி 2018, பிப்ரவரி மாதம் இந்திய அணுசக்தி நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.  இதற்கெதிராகத்தான் பூவுலகின் நண்பர்கள் குழு இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறது.

அணுக்கழிவை சேமிப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு 2018, ஜூலை மாதம் வரை கால அவகாசத்தை 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்திருந்தது. ஆனால் இரசிய வகை அணுமின் நிலைய அணுக்கழிவுகளை நீண்ட நாள் சேமிப்பதற்கான (AFR facility) முன் அனுபவம் தங்களுக்கு இல்லை என்ற வெட்டிச்சாக்கை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணுமின் நிறுவனம் கண்டுபிடித்து முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்கழிவினை சேமிக்க பாதுகாப்பான இடமில்லாமல் தொடர்ந்து அணு மின் உலைகளை இயக்க அனுமதிப்பது மிகவும் அபாயகரமானது. மேலும் நீதிமன்றம் அளித்த வழிமுறைகளுக்கு எதிரானதும் கூட என்றார் வழக்கைத் தொடுத்த பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சுந்தராஜன்.

“ஐந்தாண்டுகளாக வாளாவிருந்துவிட்டு மீண்டுமொரு ஐந்தாண்டு கால அவகாசம் கேட்பதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாது. கூடங்குள மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்திய அணுமின் நிறுவனம் தவறிவிட்டது. அணுக்கழிவுகளை சேமிப்பதற்கு பாதுகாப்பான இடமில்லாத நிலையில் இரண்டு உலைகளின் எரிசக்தி தொட்டிகளும் நிரம்பிவிட்டதால் மென்மேலும் தொட்டியில் அணுக்கழிவை சேர்க்கும் இறுக்கிப் பிணைத்தல் (dense packing) எனும் ஆபத்தான முறையை NPCIL கையாள வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

பொதுவாக பராமரிப்பு வேலைகளுக்காக அணுஉலைகள் நிறுத்தப்பட்டு 45-60  நாட்களில் மீண்டும் இயங்க தொடங்குவது ஒரு உலகளாவிய நடைமுறை. ஆனால் கூடங்குளம் முதல் அணு உலைக்கோ நான்கு மாதங்களுக்கு மேல் பிடித்தது. இது மிகவும் ஆபத்தானது. மேலும் இதுவரைக்கும் இந்த பிரச்சினைகளைப் பற்றி இரசிய வல்லுனர்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று இந்திய அணுமின் நிறுவனம் கூறியுள்ளதை அவர் நினைவுப்படுத்தினார்.

அப்படியெனில் இதுகாறும் பாதுகாப்புக் கருதி அணு மின்னுலையை எதிர்த்தவர்களை பகுத்தறிவற்ற மூடர்கள் போல சித்தரித்த ஊடகங்கள், அறிவுசீவிகள் தங்களது முகங்களை எங்கு போய் இனி ஒளித்துக் கொள்வார்கள்? இந்திய-அமெரிக்க அணுசக்தி அடிமை சாசனத்தின் ஆதரவாளரும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் பாராட்டும் ஒரே அக்மார்க் முஸ்லிமுமான மறைந்த ‘அணு விஞ்ஞானி’ அப்துல் கலாம் நான்கு மணி நேரத்தில் தயாரித்த 40 பக்க அறிக்கையை வைத்து இனி என்ன செய்வார்கள்?

– வினவு செய்திப் பிரிவு

ஆதாரம்:
‘Shut down Kudankulam till spent fuel facility is ready’