டுமையான பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் வறுமை நிலை மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் என கொந்தளிப்பான நிலையில் இந்தியா 2020-ம் ஆண்டிற்குள் நுழைகிறது.

2020 – இந்தியா ஒரு வல்லரசாக மாறும் ஆண்டாக இருக்கும் என்று மில்லினியம் தொடங்கிய காலக்கட்டத்தில் சிலர் நம்பினர் என்பதை நினைவுகூர்வது தற்போது வினோதமாகத் தோன்றலாம்.

நாம் இப்போது 2020-ல் இருப்பதால், அது உண்மை இல்லை என்று நமக்குத் தெரியும். ஒரு வல்லரசாக இல்லாமல், உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வாழ்க்கைத் தரம் குறைவாக உள்ளது என்பதே நிதர்சனமாக உள்ளது.

ஒரு சொடுக்கில் அல்லது கண் அசைவில் ஏழை நாட்டை வல்லரசாக மாற்றிவிடுவோம் என ஏமாற்றிக்கொண்டிருந்த, அதிக எண்ணிக்கையிலான இந்திய உயரடுக்கினர் இறுகப்பற்றியிருந்த பகுத்தறிவற்ற களிப்பை இங்கே திரும்பிப் பார்ப்போம்.

ஏவுகணை மனிதன்

இதையெல்லாம் ஆரம்பித்தவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த நேரத்தில், கலாம் இந்தியாவின் ஏவுகணை திட்டம் மற்றும் போக்ரான்- II அணுசக்தி சோதனைகளுடன் தொடர்புடைய ஒரு அறிவியலாளர் மற்றும் நிர்வாகியாக இருந்தவர். பின்னர் அவர் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.

1998-ம் ஆண்டில், கலாம் மற்றுமொரு அரசாங்க அறிவியலாளர் ஒய்.எஸ். ராஜன் ஆகியோர் இந்தியா 2020 : எ விஷன் ஃபார் தி நியூ மில்லினியம் என்ற புத்தகத்தை இணைந்து எழுதினர்.

1998 -ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான அப்துல் கலாம் அவர்களின் பேட்டி.

புத்தகத்தில் ஒரு எளிய செய்தி இருந்தது: “2020-க்குள் அல்லது அதற்கு முன்பு ஒரு வளர்ந்த நாடாவது வெறும் ஒரு கனவு அல்ல. இது பல இந்தியர்களின் மனதில் வெறும் ஆர்வமாகக்கூட இருக்க தேவையில்லை. ஆனால், நாம் அனைவரும் எடுத்துக்கொண்டு சாதிக்கக்கூடிய ஒரு பணி இது”

புத்தகத்தின் பெரும்பகுதி நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புகளின் தொகுப்பாகும், இது எந்தவொரு பொருத்தமான தரவையும் விட அதிகமாக தேசபக்தியின் உணர்ச்சியால் முழுவதுமாக இயக்கப்பட்டதாக இருந்தது. பல வழிகளில், புத்தகத்தின் பாணி இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஸ்மார்ட்போன்களை மூழ்கடித்துக்கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான தேசபக்தி வாட்ஸ்அப் செய்திகளுக்கு ஒரு நீண்ட முன்னோடி வடிவமாகும்.

உதாரணமாக, கலாம் மற்றும் ராஜன், “நேரடி பொருளாதார நடவடிக்கைகளில் அதிகமான பெண்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்றும் – மிகவும் நம்பமுடியாத அளவிற்கு – “2007 – 2008 -க்குள் வறுமை முற்றிலுமாக அகற்றப்படுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன” என்றும் கருதினர்.

2008 முதல் 12 ஆண்டுகளில், இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது மட்டுமல்ல, இதுபோன்ற கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் அதிகமான பெண்கள் பணியிடங்களில் நுழைவதை விட, உண்மையில், இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18-ம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள எட்டு நாடுகளில் மட்டுமே இந்தியாவை விட பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி, பணியிடங்களுக்குச் செல்வதில், தெற்காசியாவிலேயே இந்திய பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கலாம் மற்றும் ராஜன் ஆகியோர் தங்களது சுதந்திரமான கணிப்புகளைச் செய்யும்போது, இந்திய ஆணாதிக்கத்தின் ஆழமான வேரூன்றிய வலிமையை மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

படிக்க:
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
♦ அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!

கூட்டு மாயை !

குழப்பத்தை விட, இந்த நம்பமுடியாத இலக்குகள் உண்மையில் அந்த நேரத்தில் பாராட்டுக்களைப் பெற்றன. “இந்த சிக்கலான காலங்களில், இந்தியா சூப்பர் பவர் தகுதியை அடைய இன்னும் இரண்டு தசாப்தங்களே தொலைவில் உள்ளன என்கிற கருதுகோளை, உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் தெளிவான தொகுப்புகளை கொண்டு ஆய்வு செய்திருப்பது அரிதான ஒன்றாகவே உள்ளது” என ‘இந்தியா 2020’க்கான அறிமுகத்தை டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியது.

இந்தப் பாராட்டு, கலாமை தனது இலக்குகளை இன்னும் வியக்க வைக்கும் அளவில் ஊக்குவிக்கும் துரதிர்ஷ்டவசமான விளைவைக் கொண்டிருந்தது. 2008-ம் ஆண்டில், தனது புத்தகம் வெளியிடப்பட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, கலாம் இந்தியா 2012-ம் ஆண்டிலேயே வல்லரசு ஆகிவிடும் என்றார். “2020-ம் ஆண்டளவில் இந்தியா ஒரு வல்லரசாக மாற வேண்டும் என்று நான் கற்பனை செய்திருந்தாலும், இளைஞர்களின் அணுகுமுறையும் நம்பிக்கையும், அனைத்தையும் சரியான முறையில் வெல்லும் துடிப்பும், ஐந்தாண்டுகளுக்குள் நாட்டை உலகளாவிய தலைமையாகவும், சூப்பர் பவராகவும் மாற்றும்” என்று அப்போதைய முன்னாள் ஜனாதிபதி தனது தன்னம்பிக்கையை தானே பாராட்டும் வகையில் கூறினார்.

இந்தியா ஒரு முழுமையான வளர்ந்த தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் வல்லரசாக மாறுவதற்கு மிக அருகில் உள்ளது; கொள்கை மற்றும் அரசியலில் மிக உயர்ந்த மட்டங்களில் நுழைந்துள்ளது என்பன போன்ற – நடைமுறைக்கு எட்டாத – கற்பனைகள் உருவாக்கப்பட்டன. 2002-ம் ஆண்டில், பிரதமர் வாஜ்பாயி தனது சுதந்திர தின உரையில் அரசாங்கத்தின் நோக்கம் 2020-க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதே’ என்றார்.

வாஜ்பாயின் கீழ், திட்ட ஆணையம் 2002-ல் ‘இந்தியா விஷன் 2020’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நூலான, இந்தியா 2020 : புதிய மில்லினியத்திற்கான ஒரு பார்வை’ என்பதை அங்கீகரிப்பதாக இருந்தது.

தவறான நம்பிக்கை

திட்ட ஆணையம் அங்கீகரித்ததன் காரணத்தால் அது கலாமின் சூத்திரப்படி இந்தியாவை வல்லரசாக்கும் திட்டம் என்ற பொருளல்ல. எவ்வாறாயினும், இருபது ஆண்டுகளில் ஒரு ஏழை நாடு எவ்வளவு சாதிக்க முடியும் என்கிற பகுத்தறிவற்ற நம்பிக்கை (Pollyannaishly) தொடர்வதாகவே இருந்தது.

இந்தியா 2020-ஐ போலவே, இந்த அறிக்கை வாட்ஸ்-அப்பின் மொக்கையான தேசபக்தி தகவலைப் போல உள்ளது. இந்தியா முழுவதும் பயணம் செய்த மெக்காலே பிரபு, ‘ஒரு பிச்சைக்காரன்; ஒரு திருடன் கூட நாட்டில் இல்லை’ எனவும் காரணம் நாட்டின் ‘ஆன்மீக – கலாச்சார பாரம்பரியமே’ எனவும் சொன்னதாக வாட்சப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் மொக்கையான தேசபக்தி தகவல்களைப்போல உள்ளது இந்த அறிக்கை.

அறிக்கையின் உண்மையான கணிப்புகள் அதே வெகுளித்தனமான வகையில் தொடர்கின்றன. அறிக்கை நம்பிக்கையுடன் கூறுகிறது, “இந்தியா குறைந்த வருமானம் கொண்ட நாட்டிலிருந்து உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும்”. நிச்சயமாக அது நடக்கவில்லை. இன்றைய நிலவரப்படி, இந்தியா ஒரு உயர்-நடுத்தர வருமான நாடாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது (அதில் நுழைய நாட்டின் அதன் மூலதன வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும்). இந்தியாவின் பிரிட்டீஷ் ராஜ்ஜிய உடன்பிறப்புகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை போலவே, இந்தியாவும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு. இருப்பினும், இந்தியாவின் சிறிய தெற்கு அண்டை நாடான இலங்கை வல்லரசு தீர்க்கதரிசனங்களால் அறியப்படாமல் அமைதியாக 2019-ம் ஆண்டில் ஒரு உயர் நடுத்தர வருமான நாடாக மாறியது.

படிக்க:
NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !
♦ வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !

மேலும்: “புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான மகத்தான வாய்ப்புகளுடன் இணைந்து, வேலைவாய்ப்பின்மை 2020-க்குள் கிட்டத்தட்ட அகற்றப்படலாம்”. 2020-ம் ஆண்டில் இதைப் படிக்கும்போது, அத்தகைய “மகத்தான வாய்ப்புகள்” எதுவும் இல்லை என்பது நமக்குத் தெரியும். வியட்நாம் அல்லது வங்க தேசத்தை போலன்றி, இந்தியா வெகுஜன உற்பத்தித் தொழில்களை உருவாக்க முடியவில்லை. உண்மையில், அதிக மதிப்புள்ள நாணயத்தாள்களை மதிப்பிழக்கச் செய்த மோடி அரசாங்கத்தின் பேரழிவுகரமான நடவடிக்கையைத் தொடர்ந்து, 2017-18-ம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளைக் காட்டிலும் உச்சத்தில் இருந்தது.

ஒரு கட்டத்தில், இது இந்தியாவின் 2020 இலக்குகளை பட்டியலிடுகிறது, “இந்தக் குறிப்பு நிலைகளை அடைவது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் அவற்றை மிஞ்சும்”. நம்பிக்கை தவறாக இருந்தது. 2020-ம் ஆண்டில் இந்தியா எந்த திட்ட ஆணையத்தின் இலக்குகளையும் எட்டவில்லை.

எடுத்துக்காட்டாக, 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பெண் வயதுவந்தோரின் கல்வியறிவு விகிதம் 94% ஆக இருக்கும் என்று அறிக்கை கணித்தது. ஆனால் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இது 65% மட்டுமே. குழந்தை இறப்பு 1000 பிறப்புகளுக்கு 22.5 ஆக இருக்கும் என்று விஷன் 2020 கணித்துள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இது 33 ஆக உள்ளது, இது உலக சராசரியை விட அதிகம். வயதுக்கான எடையின் அடிப்படையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 8% மட்டுமே இருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உண்மையில், இது 32.7% என்ற கணிப்பை விட நான்கு மடங்கு அதிகமாகும் (2020-ம் ஆண்டில் இந்தியா உலகிலேயே மிகவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகங்களில் ஒன்றாகும்).

மீம்களில் நுழைந்த ‘சூப்பர் பவர்’!

சூப்பர் பவர் 2020 கணிப்புகள் பலனளிக்கவில்லை என்றாலும், அவை பயனுள்ள எதையும் விளைவிக்கவில்லை என்று அர்த்தமல்ல. முன்னறிவிப்பு மிகவும் மோசமாக இருந்ததன் விளைவாக, அதில் ஒரு முரண்பாட்டின் வளமான ஆதாரத்தைக் கண்டது இணையம்: மீம் உருவாக்குபவர்களுக்கு சரியான மூலப்பொருள் கிடைத்தது.

‘2020-க்குள் சூப்பர் பவர்’ மீம்கள் இரண்டு பதிப்புகள் வெளிவந்தன. ஒன்று சர்வதேச செய்தி பலகைகளான ரெடிட் மற்றும் 4சான் போன்றவற்றில் பரவி, சூப்பர் பவர் அந்தஸ்து குறித்த இந்தியாவின் உரிமை கோரல்களை கேலி செய்தது. திறந்த வெளியில் மலம் கழிக்கும் நெருக்கடியை வளர்ந்து வரும் ஒரு வல்லரசின் வழக்கத்திற்கு மாறாக அடிப்படை பிரச்சினையாக மீம்கள் காட்டின.

இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கள் நாடு வளர்ச்சியடையாத நிலையிலிருந்து வல்லரசாக மாறியதாக இந்தியர்கள் கேலி செய்தனர். டிசம்பர் 31, 2019 என்றும் ஜனவரி 1, 2020 என்றும் தேதியிட்டு முந்தைய படங்களையும் பிந்தைய படங்களாக வளர்ந்த நாடுகள் அல்லது கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களையும் பகிர்ந்தனர்.

விளைவுகள்

அசல் சூப்பர் பவர் 2020 கணிப்பு பொய்த்து போயிருந்தாலும், அதன் பதிப்புகள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன (அவை இப்போது மிகக் குறைவாகவே அவ்வப்போது எழுந்தாலும்கூட). 2019 மக்களவைத் தேர்தலின் போது, பாஜக தலைவர் அமித் ஷா, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக வாக்களித்தால் 2024-க்குள் இந்தியா ஒரு வல்லரசாக மாறும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தார். முன்னதாக 2018-ம் ஆண்டில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கலாமின் “விஷன் 2020”-ஐ மோடி நிறைவேற்றுவார் என்று கூறினார் . இருப்பினும், புத்திசாலித்தனமாக எந்த ஆண்டுக்குள் என அவர் குறிப்பிடவில்லை.

இவற்றில் சில வேடிக்கையானவை அல்லது அபத்தமானவை என்று தோன்றலாம். உண்மையில் அதில் சில அபத்தமானவைதான். ஆயினும்கூட, இந்த “சூப்பர் பவர் 2020” வணிகத்துடன் தொடர்புடைய உண்மையான விளைவுகளைகூட சொல்வதில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அபத்தமாக அடைய முடியாத இலக்குகளின் அடிப்படையில் திட்டங்களை வடிவமைத்து வந்ததாக தெரிகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் சில தசாப்தங்களில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகள் இந்தியாவை கடந்தன. இப்போது, பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென் போன்ற வல்லுநர்கள் தன் தெற்காசிய அண்டை நாடுகளான வங்க தேசம், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிடமிருந்தும் இந்தியா பின்னோக்கி போய்க் கொண்டிருப்பதாக எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில், இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, துயரமளிக்கும் விதமாக இன்னமும் தனது வல்லரசு கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.


கட்டுரை: சோயிப் டானியல்
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க