Sunday, September 25, 2022
முகப்பு செய்தி இந்தியா பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !

பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !

அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம்.

-

“அவன் கைகளில் மூவர்ண கொடியை ஏந்தியிருந்தான்; அதற்குகூட அவர்கள் மரியாதை தரவில்லை. மூவர்ண கொடியோடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அவனை அவர்கள் கொன்றிருக்கிறார்கள்” கண்களில் வழிந்தோடும் கண்ணீரை மறைக்க, தலையை குனிந்து பேசுகிறார் காவி குண்டர்களால் கொல்லப்பட்ட 18 வயது அமீர் ஹஞ்சிலின் தந்தை சோஹைல் அகமது.

அமீர் ஹஞ்சிலின் தந்தை சோஹைல் அகமது.

பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 21-ம் தேதி புல்வார் சாரீப் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் அமீர். அப்போது, குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடந்தது. ஜீன்ஸ், ஸ்வெட்டர் அணிந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தி போராட்ட களத்தில் அமிர் காட்சியளிக்கும் வீடியோ உள்ள நிலையில், வன்முறை சம்பவத்தின்போது காணாமல் போனார்.

காணாமல் போன அமீர் பத்து நாட்களுக்குப் பிறகு, அருகில் இருந்த நீர்நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய தலை நசுக்கப்பட்டிருந்தது; அவருடைய நெஞ்சிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்தன.

“கையில் தேசிய கொடியை ஏந்தியவனை கொல்பவர்கள் எத்தகையவர்களாக இருப்பார்கள்?” எனக் கேட்கிற சோஹைல், “போராட்ட படங்களைப் பாருங்கள். அவன் பெருமையுடன் தேசிய கொடியை ஏந்தியுள்ளான். அவன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டான் என்பது அனைவரும் அறிந்ததே” என்கிறார்.

பத்தாவது படித்த அமீர், பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். டிசம்பர் 21-ம் தேதி பணிக்குச் சென்ற அவர், அன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடந்த நிலையில் அதில் பங்கேற்றிருக்கிறார்.

படிக்க :
உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?
♦ நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்

மதியம் வரை குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அவரை, அதன்பின் தொடர்பு கொள்ள இயலவில்லை. இரவு எட்டு மணியளவில் ஆங்காங்கே போராட்டத்தில் கலவரம் வெடித்ததாக வந்த செய்தியை அடுத்து, அவருடைய குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தேடியபோதும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில், பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் அமீர். அவரை கொன்றதாக நாகேஷ் சாம்ராட் (23), விகாஸ் குமார் (21) ஆகியோரை கைது செய்துள்ளது பீகார் போலீசு. இவர்கள் இந்து சமாஜ் சங்காதன் என்ற காவி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் போலீசு தெரிவித்துள்ளது.

சிவப்பு உடையில் கையில் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடும் அமீர்.

“அமீர் போராட்ட இடத்தை விட்டு வெளியேறியபோது, அவரை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்று அடித்து கொன்றுள்ளனர். உடல்கூராய்வு அறிக்கை செங்கல்லால் அவர் தாக்கப்பட்டும், கூரான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டதை கூறுகிறது.” என்கிறார் போலீசு அதிகாரி.

இந்த படுகொலை தொடர்புடையதாக கைதான மேலும் ஐவர், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் போலீசு கூறுகிறது.

அமீரைக் கொன்ற முதன்மை குற்றவாளிகளான சாம்ராட்டும், குமாரும் டிசம்பர் 21-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, அங்கு கலவரத்தை தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில், போலீசு இந்துக்களை டார்ச்சர் செய்வதாகவும் அனைத்து இந்துக்களும் புல்வார் சாரீப்புக்கு வரவேண்டும் எனவும் தான் ஒரு இந்து என்ற வகையில் அங்கே வந்துவிட்டதாகவும் பேசியிருக்கிறார்கள்.

“வெளியிலிருந்து வந்து இதுபோல கலவரங்கள் மூலம் வன்முறையை தூண்டுவது கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவருகிறது” என்கிறது போலீசு.

டிசம்பர் 21-ம் தேதி நடந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பேரணியாக சங்கத் மொகல்லா பகுதியில் சென்றபோது ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் தள் காவி குண்டர்களால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரத்தை போலீசு தடுக்க முயற்சிக்கவில்லை என நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

போலீசு ஏன் தடுக்கவில்லை என டெலிகிராப் நாளிதழ் நிருபர் கேட்டபோது, “எங்கள் பெயரை இழுக்க வேண்டாம். அங்கே நடந்த கலவரத்துக்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளனர் போலீசு அதிகாரிகள்.

காவி குண்டர்களின் திட்டமிட்ட வன்முறைக்கு பலியாகியிருக்கிறது ஒரு அப்பாவி உயிர். அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம். இன்னமும் இக்கொடுமையான சட்டம் முசுலீம்களுக்கு எதிரானது இல்லை என நம்பிக்கொண்டிருந்தால் நாமும் இந்தப் படுகொலைகளின் கூட்டாளிகள்தாம்.


கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க