NRC -க்கு வழிவகுக்கும் அபாயகரமான தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) தமிழகத்தில் அமல்படுத்தாதே !

சட்டமன்றம் நோக்கிப் பேரணி…

நாள் : 6.01.2020, திங்கள் காலை 11 மணி.
பேரணி தொடங்குமிடம் : சேப்பாக்கம் (விருந்தினர் மாளிகை அருகில்), சென்னை.

அன்பார்ந்த நண்பர்களே!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) எதிர்த்து இன்று நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது என்ற அபாயத்தை புரிந்து கொண்ட உயர் கல்வி நிறுவன மாணவர்கள், அறிவுத் துறையினர் இன்று வீதியில் இறங்கி ரத்தம் சிந்தி போராடி வருகிறார்கள்.

இதுவரை போலீசு துப்பாக்கி சூட்டிற்கு 25 பேர் பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உறுதியாகப் போராடி வரும் மாணவர்களை போலீசும், சங்பரிவார் கும்பலும் சேர்ந்து கொண்டு தாக்குகின்றன. இவர்களே திட்டமிட்டு கலவரத்தை நடத்தி விட்டு போராடும் மக்களை பார்த்து வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என பச்சையாக பொய் சொல்கிறார்கள்.

காஷ்மீர், முத்தலாக், பாபர் மசூதி, போல் CAA – NRC – NPR-ஐ எளிதில் அமல்படுத்தி விடலாம் என இருமாப்பு கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு மாணவர்களும் மக்களும் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.

பிரதமர் மோடி NRC பற்றி நாங்கள் கலந்து பேசவில்லை என்கிறார். NPR மூலம் சேகரித்த தகவல்களை வைத்தே NRC முடிவு செய்வோம் என பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். பாரதத்தை, இந்துத்வாவை ஏற்பவர்கள்தான் இந்தியர்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறு கிறார். இந்துத்வாவையும், கார்ப்பரேட்டுகளையும் எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள், கம்யூனிஸ்டுகள், அறிவு ஜீவிகள், மாட்டுக்கறி உண்பவர்கள் என அனவரையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தேசத்துரோகிககள், அந்நிய கைக்கூலிகள் என்று பேசி வருகின்றனர். இவர்களையெல்லாம் NPR மூலம் சந்தேகத்துக்குரியவர்கள் எனச் சொல்லி நமது மூதாதையர்களின் பிறப்பிடம், வாழ்விடத்தை நம்மையே நிரூபிக்க சொல்வார்கள். இல்லையேல் குடியுரிமையை பறித்து அகதிகள் வதை முகாமில் அடைப்பார்கள்.

NPR-ல் தொகுப்பான அடையாளத் தரவுகள் பெறும் பொருட்டு பெயர், வயது, பாலினம் என வழக்கமாக கேட்கப்படும் 12 கேள்விகளோடு கூடுதலாக, பெற்றோர்கள் பிறப்பிடம், ஆதார் விபரங்கள், செல்போன் எண், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். இதை வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உள்ளூர் அளவிலும் பதிவேடுகள் தயாரிக்கும்போது சரிபார்க்கும் நடைமுறை கடைபிடிக்கப்படும். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் என யாரையும் தனியாகப் பிரித்து இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க சொல்வார்கள். ஆக, யார் இந்திய குடிமக்கள் என்பதை அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள்.

தேசிய மக்கள் தொகை பதிவேடும், சென்சஸ் கணக்கெடுப்பும் ஒன்று என பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடி. 1948 சென்சஸ் சட்டப்படி மேற்கொள்ளப்படுகிறது. அதன் விபரங்கள் ரகசியமானவை. வேறு எதற்கும் அதை பயன்படுத்தலாகாது. ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு 1955 குடியுரிமைச் சட்டத்தில் 2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் ”சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்லது சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தவர்கள்” என்ற திருத்தத்தை சேர்த்தார்கள். அதன்படி செய்யப்படும் NPR தகவல்களை NRC-யுடன் இணைத்து யாரையும் குடியுரிமையற்றவர்களாக்க முடியும். இது மிகவும் அபாயகரமானது.

படிக்க :
பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்
♦ இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

இப்படித்தான் பாசிச ஹிட்லர் ஜெர்மனியில் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் யூதர்களின் குடியுரிமையைப் பறித்தான். மியான்மர் அரசு ரோஹிங்கியா முசுலீம்களை நாடற்றவர்களாக்கியது. அதுபோல் பா.ஜ.க அரசின் இந்த CAA – NRC – NPR ஆகியவை இஸ்லாமியர்கள், இந்துக்களில் உழைக்கும் மக்கள் ஆகியோரின் குடியுரிமையைப் பறித்து வதை முகாம்களில் அடைக்கும் இந்துராஷ்டிர திட்டமேயாகும். ஜெர்மனியில் “யூத இனப்படுகொலைகள், விஷவாயு கூடங்களிலிருந்து தொடங்கவில்லை. வெறுப்பான பேச்சுக்களின் வழியே வெகு காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது” என இனப்படுகொலை தடுப்பு நாளில் ஐ.நா. பொதுச்செயலாளர் பேசியுள்ளதை இதனுடன் இணைத்துப் பாருங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அசாமில் NRC அமல்படுத்தியதில் முன்னாள் ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமது குடும்பத்தினர், முன்னாள் இராணுவ அதிகாரி குடும்பத்தினர் குடியுரிமை மறுக்கப்பட்டு தடுப்பு முகாமில் இருக்கிறார்கள். மேலும் 19 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் . இதில் CAA மூலம் 10 இலட்சம் இந்துக்கள் மட்டும் குடியுரிமை பெற்று விடுவார்கள். மீதி 9 இலட்சம் முசுலீம்களை முதலில் தடுப்பு முகாமில் அடைப்பார்கள். இறுதியில் ஹிட்லரைப் போல் விஷவாயு செலுத்தி கொல்வார்களா?

பா.ஜ.க அரசின் இந்த அபாயகரமான திட்டங்களை மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள் அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எடப்பாடி அதிமுக அரசு, அடிமைத்தனத்துடன் பாராளுமன்றத்தில் CAA – வை ஆதரித்து வாக்களித்ததுள்ளது . ஒருவேளை அதிமுக, பா.ம.க இந்த CAA – வை எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டம் தோல்வி அடைந்திருக்கும்.

யார் அகதிகள் ? கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக சொந்த நாட்டில் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு ஓடுபவர்கள்தான். இத்தகைய மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதுதான் மனிதாபிமானம், இயற்கை நீதி. ஆளும் வர்க்கம் தனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ள உழைக்கும் மக்களை தேவையற்றவர்களாக ஆக்குகிறார்கள். அதற்காகத்தான் தீவிரவாத பீதியூட்டி, மத பாகுபாட்டைக்காட்டி குடியுரிமையைப் பறித்து மக்களை அடக்கி ஒடுக்க வருகிறது CAA – NRC – NPR.

இந்தியாவில் பிழைப்புத் தேடி குடும்பத்தோடு பல கோடி பேர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் வீடற்று சாலையோரங்களில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏது ஆவணம் ? ஏது நிலையான முகவரி ? நாடு முழுவதும் இன்று பல மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க இடையூறாக உள்ள பல லட்சம் ஏழை மக்கள் NPR மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டு தடுப்பு வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதிலும் அவர்கள் இஸ்லாமியர்கள், தலித்துகளாக இருந்தால் பா.ஜ.க அரசு – அதிகாரிகள், சங்பரிவார் கும்பல் எப்படி நடத்துவார்கள்? என யோசித்துப் பாருங்கள். பசு மாட்டை வைத்து கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்கள் குடியுரிமைச் சட்டத்தை வைத்தும் கொலை அரசியல் செய்யமாட்டார்களா?

NPR தகவல் சேகரிக்க அதிகாரிகள் உங்கள் வீடுகளுக்கு வரும்போது, “இது எங்கள் நாடு, எங்கள் ஊர், ரத்தம் சிந்தி கட்டமைத்தது நாங்கள், கட்டிக் காப்பது நாங்கள் ; நீ யார் எங்களின் குடியுரிமையை கேள்வி கேட்க?” என அடித்துத் துரத்த வேண்டும். இம்முறை விடக் கூடாது. காவி பாசிசத்திற்கு பாடை கட்டியாக வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் கட்டியமைக்க வேண்டும்.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடியோடு அழிக்கின்ற CAA – NRC – NPR-ஐ திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் பல தரப்பினர் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். தீராத பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகள் எரிபொருளாக போராட்டத்தை உந்தித் தள்ளுகின்றன. மக்கள் எதிர்ப்பின் காரணமாக பல மாநில கட்சிகள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு இந்தச் சட்டங்களை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. தமிழகத்திலும் இந்த நிலை வர வேண்டும்.

தமிழக மக்களே!

  • தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு யாரும் எந்த தகவலையும் தரக்கூடாது என உறுதியேற்போம் !
  • “தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்” என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.