Friday, August 19, 2022
முகப்பு செய்தி உலகம் ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் !

ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் !

அசாஞ்சே சிறையில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக ஐநா-வின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சரின் நவம்பர் 1-ஆம் தேதி அறிக்கை சமர்பித்தார்.

-

ஜூலியன் அசாஞ்சே உடல்நிலையில் கவலைக்கிடம்; சிறையிலேயே இறக்க நேரிடலாம்: 60 மருத்துவர்கள் அறிக்கை !

யர் பாதுகாப்பு பிரிட்டீஷ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர், ஜூலியன் அசாஞ்சேவின் உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் சிறையிலேயே இறக்கும் நிலை ஏற்படும் என 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் திறந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

உளவு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 48 வயதான ஆஸ்திரேலியர் அசாஞ்சேவை ஒப்படைக்க கேட்டுக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. பிரிட்டன் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவருக்கு 175 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க குண்டுவீச்சுக்களை நடத்தியது குறித்த ரகசிய இராணுவ, அரசு ஆவணங்களை 2010-ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலம் வெளியிட்டார் அசாஞ்சே. தனது மனித உரிமை மீறல் வெளிச்சத்துக்கு வந்ததால், அமெரிக்கா சங்கடத்தை சந்தித்தது. இதற்காக அசாஞ்சே மீது உளவு சட்டம் பாய்ந்தது.

Julian-Assange
ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து செல்லப்படும் அசாஞ்சே.

இந்நிலையில், பிரிட்டீஷ் உள்துறை செயலாளர் பிரிதி பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையிலிருந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றுமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனில் அசாஞ்சே அக்டோபர் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானபோது நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சரின் நவம்பர் 1-ஆம் தேதி அறிக்கை சமர்பித்தார். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அசாஞ்சேவின் உடல்நிலை கவலையளிக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐநா உரிமைகள் நிபுணர், அசாஞ்சே தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆட்பட்டுள்ளதால் விரைவில் அவர் உயிர் இழக்க நேரிடும் என தெரிவித்தார்.

“ஜூலியன் அசாஞ்சேயின் உடல்நிலை மற்றும் மன நிலை குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்த மருத்துவர்களாகிய நாங்கள் இந்த திறந்த கடிதத்தை எழுதுகிறோம்” என மருத்துவர் குழு 16 பக்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதில், பிப்ரவரியில் விசாரணைக்கு வர உள்ள, ஒப்படைக்கக் கோரும் வழக்குக்கு வர அவருக்கு முழு உடல் தகுதி உள்ளதா எனவும் அவர்கள் தங்களுடைய கவலையை தெரிவித்துள்ளனர்.

படிக்க:
♦ ஜூலியன் அசாஞ்சே கைது : இந்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் !
♦ காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

“திரு. அசாஞ்சேவுக்கு நிபுணரைக் கொண்ட உடல் மற்றும் உளவியல் ரீதியிலான அவசர மதிப்பீடு தேவை. சுட்டிக்காட்டப்பட்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் முறையான உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்கள் உள்ள பல்கலைக்கழக கற்பித்தல் மருத்துவமனை (மூன்றால் நிலை பராமரிப்பு)யில் செய்யப்பட வேண்டும்.

இதுபோன்ற அவசர மதிப்பீடு மற்றும் சிகிச்சைகள் நடைபெறாவிட்டால், திரு. அசாஞ்சே சிறையில் இறக்க நேரிடலாம். எனவே, அவரது உடல்நிலை அவசர சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளது. இழப்பதற்கு நேரமில்லை” என மருத்துவர்கள் கடிதம் தெரிவிக்கிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிடன், இத்தாலி, ஜெர்மன், இலங்கை, போலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வந்த, அசாஞ்சே பலவீனமாகத் தெரிந்தார். லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் கேள்வி கேட்டபோதெல்லாம், அவர் குழப்பமடைந்தவராகவே காணப்பட்டார்.

அவர் பிறந்த தேதியைக்கூட நினைவுகூறுவதில் சிரமங்கள் இருந்ததாக தோன்றியது. விசாரணையின் முடிவில் மாவட்ட நீதிபதி வனேசா பாரைட்சர், நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதையே அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். பெல்மார்ஷ் சிறைச்சாலையில் உள்ள சூழல் குறித்தும் அவர் புகார் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈக்வடார் தூதரகத்திலிருந்து கட்டாயப்படுத்தி அவரை இழுத்துச் சென்றது பிரிட்டன் போலீசு. அதன்பின் இப்போதுதான் பொதுவெளிக்கு வந்திருக்கிறார்.

அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களை, போர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான், ஈரான் மக்களை கொன்று குவித்த ஆவணங்களை வெளியிட்ட அசாஞ்சேவுக்கு உதவ எந்த நாடும் தயாராக இல்லை. அரசுகளுக்கு எதிராக நிற்பவர்களுக்கு பாடம் புகட்டுவதை முரண்பாடுகளைக் கடந்த அனைத்து நாடுகளும் ஒன்றாகவே நிற்கின்றன.


அனிதா
நன்றி : தி கார்டியன்

  1. இந்த காலத்திற்கான சாக்ரடீஸாக பார்க்கிறேன்….. அறிவாளிகள்…. மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள்….. அரசின் குற்றங்களை பகிரங்க படுத்துவார்கள்….. கேள்வி கேட்க தூண்டுபவர்கள் என்ற வகையில் அரசுகளால் கொல்லப்படுகிறார்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க