ஜூலியன் அசாஞ்சே கைது இதழியல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : இந்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

டந்த ஏழு ஆண்டுகளாக ஈக்வெடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இங்கிலாந்து போலீசால் கைது செய்யப்பட்டார். அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட காரணத்துக்காக அவர் மீது சதி வழக்கு பதிந்துள்ளது அமெரிக்கா. ஈக்வெடார் தூதரகம் தனது புகலிட ஆதரவை விளக்கிக் கொண்டதை அடுத்து, இங்கிலாந்து போலீசு அவரை கைது செய்துள்ளது. இந்தக் கைதை சர்வதேச அளவில் பலர் கண்டித்துள்ளனர்.

ஈக்வெடார் தூதரகத்தில் லண்டன் போலிசால் கைது செய்யப்படும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அசாஞ்சே-வின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம், மத்திய அரசின் முன்னாள் கூடுதல் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், எழுத்தாளர்கள் அருந்ததி ராய், கோபால கிருஷ்ண காந்தி, பத்திரிகையாளர் பி. சாய்நாத், வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் ஆகியோர் இணைந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அசாஞ்சே-வின் கைது இதழியலின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அவர்கள் கண்டித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட முழு அறிக்கை:

அமெரிக்காவின் தூண்டுதலின்பேரில் விக்கிலீக்ஸ் நிறுவனரும் ஆசிரியருமான ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருடைய கைதும், அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சியும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பதிப்பிக்கும் முயற்சியின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கசியவிடப்பட்ட தகவல்களை மிகப் பெரிய அளவில் பரிமாறப்பட்ட அல்லது மூலமாக இருந்ததாகக் கருதப்படும் அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பன்முக பங்களிப்பு இதனால் இழக்க வேண்டியிருக்கும். வீக்கிலீக்ஸின் ஆசிரியரான அசாஞ்சே முதன்மையாக ஒரு பத்திரிகையாளர். முன்னெப்போதும் இல்லாதவகையில் புதிய வகையிலான இதழியலில் அவர் இயங்கினார்.

விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஆசிரியர் இதழியல் சீற்றத்தின் பக்கம் நின்றார்கள். உலகம் முழுக்க நடக்கும் அநீதிகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரான சீற்றம் அது. ஆனால், எப்போது உண்மைத்தன்மை, ஆதாரம் மற்றும் துல்லியத்தன்மையை அவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை.

அசாஞ்சே தற்போது அமெரிக்காவின் கணினி மோசடி மற்றும் துஷ்பிரயோக சட்டத்தின் (Computer Fraud and Abuse Act – CFAA) கீழ் சதி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் பாம்பியோ, விக்கிலீக்ஸை அரசு சாரா புலனாய்வு அமைப்பு என ஏற்கனவே தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டால், புதிய அல்லது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் அசாஞ்சேவின் வாழ்வுக்கும் நலனுக்கும் ஆபத்தாக முடியக்கூடும்.

குற்ற விசாரணை மற்றும் மரண தண்டனை அளிக்கப்படக்கூடும் என்ற நிலை உள்ள நாடுகளைச் சேர்ந்தோர் புகலிடம் கோரும்போது அவர்களை சம்பந்தப்பட்ட அந்நாடுகளிடம் ஒப்படைக்கக்கூடாது என, அமெரிக்காவுக்கு இடையேயான மனித உரிமைகள் நீதிமன்றம், ஈக்வெடாருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும் அசாஞ்சே கைது செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

அசாஞ்சே மற்றும் செல்சியா மேனிங் இடையேயான சதி குற்றச்சாட்டு என தற்போது நீதிமன்றம் சொல்லியிருப்பது, “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்புடைய இரகசிய தகவல்களை கையகப்படுத்திய, பரிமாறிய மேனிங்-குக்கு உதவும் வகையில் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல்களை பகிரங்கமாக வெளியிட்டது சதியில் முதன்மையானது.”

படிக்க:
♦ கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !
♦ நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ? சிறப்புக் கட்டுரை

இந்த இடத்தில் ‘சதி’ என்பது உண்மையில் பாதுகாப்பான தொடர்புக்கான தொழில்நுட்பம் மூலம் என்ற வகையில் மேனிங்-ஐ பாதுகாப்பது மற்றும் பெரிய அளவிலான தகவல்களை பரிமாறிக் கொண்டதுமாகும். மூலத் தகவல் அளிப்பவர்களை பாதுகாப்பது இதழியலில் கட்டாய நெறியாகும். அதோடு, செல்சியா மேனிங் தந்த தகவல்கள் அமெரிக்க இராணுவம் இராக்கில் நிகழ்த்திய போர்க்குற்றங்களை வெளிக் கொண்டுவந்தவை. விக்கிலீக்ஸ்-ல் 2007-ம் ஆண்டு ‘இணையான கொலைகள் – Collateral Murder’ என்ற பெயரில் இந்த வீடியோ வெளியானது.

அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸ் மீது இரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா வைக்குமானால், அந்த சட்ட வழக்கு, பெண்டகன் பேப்பர்ஸ்-ஐ வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் எதிர்கொண்ட வழக்கிலிருந்து வேறுபட்டதல்ல. கணினி மோசடி மற்றும் துஷ்பிரயோக சட்டம்,  ‘சதி’ என்பது இரகசிய ஆவணங்களை வெளியிட்டவருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே விவாதங்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக்கொண்டதை குற்றமாக்குகிறது.

அசாஞ்சே மீது சதி குற்றம்சாட்டுவது அமெரிக்காவின் முதல் திருத்தம் உள்ளிட்ட அமலில் இருக்கும் சர்வதேச ஊடக பாதுகாப்பு சட்டங்களை புறக்கணிப்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு இதழியலின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். மேலும், அனைத்து இடங்களிலும் ஊடகங்களைத் தாக்க இது வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதழியல் தொழில்துறையை மவுனிக்க வைக்கும் வகையில், இந்தத் தாக்குதல் அனைத்து இடங்களிலும் புலனாய்வு இதழியல் மீது புது வகையான பயமுறுத்தலை உருவாக்கும்.

மூலங்களைப் பாதுகாத்தல், பதிப்பதற்கான சுதந்திரம் ஆகியவை இல்லாவிட்டால் கருத்து சுதந்திரமும் இல்லை; பத்திரிகையாளர்களும் அதிகாரத்தை நோக்கி உண்மையை பேச முடியாது. உடனடியாக அசாஞ்சே-வை விடுவிக்க நாங்கள் கோருகிறோம். இதழியல் நெறிமுறையைக் காப்பாற்றும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி தொடர்புடைய அதிகாரிகளைக் கோருகிறோம். இதன்மூலம் கருத்துரிமை, சுதந்திரம் மற்றும் அச்சமில்லா இதழியலின் மீது நடத்தப்பட்டிருக்கும் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் எழுப்பும்படி பத்திரிகையாளர்களையும் வாசகர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

கையொப்பமிட்டவர்கள்:

  1. என்.ராம், இந்து குழும வெளியீடுகளின் முன்னாள் ஆசிரியர்.
  2. அருந்ததி ராய், எழுத்தாளர்.
  3. இந்திரா ஜெய்சிங், இந்திய அரசின் முன்னாள் கூடுதல் வழக்கறிஞர்.
  4. கோபால கிருஷ்ண காந்தி, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் மற்றும் எழுத்தாளர்.
  5. பி. சாய்நாத், ஊரக இந்தியாவின் மக்கள் காப்பகத்தின் நிறுவன ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர்.
  6. ரொமிலா தாப்பர், வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர்.

கலைமதி
கலைமதி
நன்றி :
த வயர் 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க