மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு; பட்டியல் சாதியினர் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி) மற்றும் பிற பின்தங்கிய வகுப்புகள் (ஓ.பி.சி) மாணவர்களுக்கும் பொதுப் பிரிவினருக்கும் இடையிலான கல்வி கடன்களை வழங்குவதில் பரந்த ஏற்றத்தாழ்வு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2016-2017 மற்றும் 2018-2019-க்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கல்வி கடன்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டம் குறித்து மக்களவையில் அறிக்கையை சமர்ப்பித்தது. மாணவர்களுக்கான கல்விக் கடன் உறுதி திட்டத்தின் மூலம் அரசு வங்கிகளிடமிருந்து கடன் பெற்று 4.7 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இந்தத் திட்டத்தில் 29 வங்கிகள் பங்கேற்கின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெற்றவர்களில், 67% பேர் – சுமார் 3.15 லட்சம் மாணவர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 23% பேர் ஓபிசியைச் சேர்ந்தவர்கள். எஸ்.சி மாணவர்களில் 7% மற்றும் எஸ்.டி மாணவர்கள் 3% மட்டுமே இத்திட்டத்தால் பயனடைந்திருக்கிறார்கள்.
ஒரு பொதுப் பிரிவு மாணவருக்கு வழங்கப்பட்ட சராசரி கடன் தொகை ரூ. 3.54 லட்சம். அதைத் தொடர்ந்து எஸ்.சி மாணவர்களுக்கு ரூ. 3.24 லட்சம், எஸ்.டி மாணவர்களுக்கு ரூ. 2.17 லட்சமும், ஓ.பி.சி மாணவர்களுக்கு ரூ. 2.91 லட்சமும் வழங்கப்பட்டுள்ளன.
வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், திட்டத்தின் கீழ் கடன்களாக கொடுக்கப்பட்ட மொத்த ரூ.137 கோடியே 97 லட்சத்தில், ரூ. 97 கோடியே 30 லட்சம் மட்டுமே பொதுப் பிரிவு மாணவர்களுக்கும், மிகக் குறைந்த அளவாக எஸ்.டி பிரிவினருக்கு 2.8% மற்றும் 6.7% எஸ்.சி பிரிவுக்கும் சென்றது.
மக்களவை எம்.பி. சு. வெங்கடேசன் (மதுரை) விடுத்த கேள்விக்கு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் வழங்கிய தரவில், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில் 80% ரூ. 4 லட்சம் அல்லது அதற்கும் குறைவான தொகையே எனத் தெரியவந்துள்ளது.
படிக்க:
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி
♦ தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க.. ?
இதுகுறித்து தி இந்து நாளிதழிடம் பேசிய சு. வெங்கடேசன், “இவை சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரால் பெறப்பட்ட கடன்கள். இங்கே வெளிப்படும் இவ்வளவு பெரிய இடைவெளி, சமூக நீதி கண்ணோட்டத்தில் ஒரு சிக்கல் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
கல்விக்கடன் திட்டம், இடஒதுக்கீடு திட்டங்களை ஒப்புக்கு நிறைவேற்றி வந்த பாஜக அரசு, இப்போது முற்றிலுமாக ஒழிக்கும் திட்டங்களை வகுத்து வருகிறது. இப்போது போராடாவிட்டால் எப்போதும் உரிமைகளை பெறமுடியாது போகலாம்.
அனிதா
நன்றி : தி வயர்.