ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் ! – புதுச்சேரியில் தொழிற்பேட்டைப் பிரச்சாரம்

மோடி அரசின் ஆறாண்டு கால ஆட்சியில் நீம் (NEEM), FTE திட்டங்களை அமல்படுத்தி தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தர உரிமைகளை ஒழித்துக் கட்டியும், தற்போது; தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தி வருவதன் மூலமும் ஒட்டுமொத்த தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்து கார்ப்பரேட்டுக்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வருகிறது.

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, வறுமை, பசி, பட்டினிச் சாவுகள் என மக்கள் கொத்து கொத்தாக மடிகின்றனர். மறுபுறம், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், தலித் – இஸ்லாமியர் மீதான கும்பல் படுகொலைகள் என சமூகமே அமைதியற்று உள்ளது.

‘மயான அமைதி’யை நிலைநாட்டுவதற்காக, ஊபா, என்.ஐ.ஏ. என ஆள்தூக்கி பாசிச சட்டங்களையும், குடி உரிமையைப் பறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரை மக்கள் எதிர்ப்பையும் மீறி, ஜனநாயக விரோதமான முறையில் மக்கள் மீது திணித்து வருகிறது.

இவைகளை எதிர்த்து நாடெங்கிலும் பல்வேறு வகைகளில் நடத்தப்படும் மாணவர் – தொழிலாளர் – வணிகர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களை கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றும் வகையில், ஜனவரி 8 அகில இந்திய நிறுத்தத்தை அரசியல் எழுச்சிக்கான போராட்டமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, முக்கிய தொழிற்பேட்டையான திருபுவனை தொழிற்பேட்டை முழுவதும் வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி; தொழிலாளர்களை அணிதிரட்டும் வகையிலும்; அனைத்து நிறுவன தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள வைக்கும் வகையிலும், தொழிற்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொழிற்பேட்டையில் வேலை நிறுத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் நிறுவனங்களை இயக்க ஆலை நிர்வாகங்கள் முயற்சி செய்தன. ஆனால், நாம் வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு ஆலைத் தொழிற்சங்கத்தினரிடமும், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்தும் பேசியிருந்தோம். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படவில்லை. சில நிறுவனங்கள், தொழிலாளர்களை காலை 06.00 மணிக்கே வேன்களில் அழைத்து வந்து திருட்டுத்தனமாக இயக்கினர்.

இதற்கு முன்னர், இது போன்ற வேலை நிறுத்தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அனைத்து நிறுவனங்களையும் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் அனைத்து ஷிப்டுகளையும் முழு அளவில் இயக்கி வந்தனர். ஆனால், சென்ற 2018 வருடம் இதே நாளில் நடந்த வேலை நிறுத்தத்தில் பல நிறுவனங்கள், யாருக்கும் தெரியாமல் தொழிலாளர்களை அழைத்து வந்தும், கேட்டில் இன்று விடுமுறை என அறிவிப்புப் பலகையை வைத்தும் ஆலைகளை இயக்கியது.

ஆனால், இந்த வருடம் பல்வேறு மாற்றுக் கட்சி தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்துப் பேசி, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் அரங்கக் கூட்டம் நடத்தியதன் விளைவாகவும், இந்தப் பகுதியில் வேலை நிறுத்தத்தைப் பற்றி பிற சங்கங்களையும் பேச வைத்ததன் விளைவாகவும் ஏற்பட்ட நெருக்கடிகளின் காரணமாக பெரும்பான்மையான நிறுவனங்கள் இயங்கவில்லை.

எனினும், ஒரு சில ஆலைகளில் தொழிலாளர்களை திருட்டுத்தனமாக அடைத்து வைத்து இயக்குவதைக் கண்டிக்கின்ற வகையிலும், இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையிலும் திருபுவனை தொழிற்பேட்டைப் பகுதியில் பேரணியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதன் அடிப்படையில் நமது பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் சரவணன் தலைமையில், திருபுவனை அலுவலக வாயிலிலிருந்து பேரணி துவங்கியது. பிரைட் நிறுவனத்தின் வாயிலில் முழக்கமிட்டு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்தப் பகுதி போலிசு வந்தது. அனுமதி வாங்கவில்லை என்றும், தொழிற்பேட்டைக்கு வெளியில் அமைதியான முறையில் பேசிவிட்டு கலையுமாறு பேசியது போலிசு.

இன்று அகில இந்திய வேலை நிறுத்தம் எனவும், தொழிலாளர் மத்தியில் பேச அனுமதி தேவை இல்லை எனவும், நாங்கள் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் பிரச்சாரம் செய்வதாகச் சொன்னோம். எனினும், தனக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி உடனடியாகக் கலையுமாறும், இல்லையெனில் கைது செய்வதாகவும் மிரட்டியது. தொழிலாளர்களிடம் நேரடியாகச் சென்று உங்கள் சங்கம் சொல்வதைக் கேட்டு அவர்கள் பின்னால் போக வேண்டாம் எனவும், மீறிப் போனால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் மிரட்டிப் பார்த்தது.

தொழிலாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல், அடுத்த பிரச்சாரத்திற்கு நகர்ந்தனர். தொடர்ச்சியாக, பிப்டிக் தொழிற்பேட்டை நுழைவாயிலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் வழியில் வந்த ஒரு தனியார் பள்ளியின் பேருந்தை மடக்கி வைத்துக் கொண்டு உடனடியாக கைது செய்வதாக அறிவித்து நம்மை, தொழிற்பேட்டை உள்ளே செல்ல விடாமல் தடுத்து அங்கேயே கைது செய்தது போலிசு.

கைது செய்து மண்டபத்தில் அடைத்த பிறகு, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து இந்தப் போராட்டத்தின் நோக்கத்தையும், அவசியத்தையும் விளக்கிப் பேசப்பட்டது. இதற்கிடையில், திருபுவனை அருகிலுள்ள மதகடிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டியூசி, விசிக, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் அதே மண்டபத்திற்குக் கொண்டு வந்தது போலீசு.

நமது புரட்சிகர பாடல்களுடன், பிற கட்சியினரின் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதற்கிடையில் போலிசின் வழக்கமான நடைமுறைகளை முடித்தவுடன், அனைவரையும் விடுவிப்பதாக முறையாக அறிவிக்காமல், அங்கு வெளியில் நின்றிருந்த தோழர்களிடம் அறிவித்து, கூட்டத்தை கலைக்க முற்பட்டது. நாம் இதை உணர்ந்து, போலிசின் நரித்தனத்தை அம்பலப்படுத்திப் பேசி முறையாக தோழர்கள் மத்தியில் அறிவித்து போராட்டம் முடிக்கப்பட்டது. இப்போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே, நம்மை தொழிற்பேட்டையிலிருந்து அப்புறப்படுத்தி பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்பதையே போலிசு குறியாகக் கொண்டிருந்தது. எனினும், தொடர்ச்சியாகப் போராடி பிரச்சாரங்களை கொண்டு சென்றதன் விளைவாக தொழிலாளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்பத்த முடிந்தது.

இது இந்தப் பகுதியில் நடத்தும் போராட்டங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மாறி உள்ளது. இதன் மூலம் அரசு பாசிசமயமாகி வரும் இன்றைய அரசியல் கால கட்டத்தில், தொழிற்சங்க கூட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

மேலும், மக்கள் போராட்டங்களை அரசியல் அதிகாரத்திற்கான எழுச்சிகளாக வளர்க்க வேண்டியதும் இன்றைய உடனடி அரசியல் கடமையாகும்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி, தொடர்புக்கு: 95977 89801.

***

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் !

“ஜனவரி 8, 2020 வேலைநிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம்!” என்கிற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் (மேற்கு )

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி அருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை உரையாற்றினார், மாநில குழு உறுப்பினர் தோழர் முகிலன் கண்டன உரையாற்றினார்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவள்ளூர் (கிழக்கு)

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கும்முடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கோவை

கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தோழர் தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர் சி.சரவணகுமார், கொவை மண்டல தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க இணைச்செயலாளர் தோழர் ஜெகநாதன், கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வேலூர்

வேலூர் மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் மாநில தலைவர் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓசூர்

ஓசூர் மாவட்ட ரயில் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அதன் உண்மையான உள்ளடகத்தில் இருந்து அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிலாளர் மத்தியில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க