privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழ்நாடுசென்னையின் ஷாகீன் பாக் - தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

சென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

பாஜக காவி கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களின் போலீசுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என, அடிமை எடப்பாடி போலீசு நிரூபித்திருக்கிறது.

-

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், பற்றி பரவி வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் நடந்துவரும் தொடர் போராட்டங்களை முன் மாதிரியாகக் கொண்டு, பல இடங்களில் போராட்டங்கள் பரவி வருகின்றன. மேலும் இந்தியாவெங்கும் இசுலாமியர்கள் தங்கள் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அமைதியாக கூடி CAA, NRC, NPR –க்கு எதிர்ப்பு தெரிவிப்பதை செய்து வருகின்றனர்.

அதே போல நேற்று (14.02.2020) சென்னை வண்ணாரபேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்த இசுலாமியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைதி வழியில் திரண்டு போராடினர். அப்போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகையை முன்வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் விதமாக போலீசு அதிகாரி  தனது நரித்தனத்தை தொடங்கியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தனிமைப்படுத்தி இழுத்துச் செல்வது, அவர்களை கடுமையாக தாக்குவது என தனது சுயரூபத்தை காட்டத் துவங்கியது போலீசு. ஆண்கள் இவ்வாறு கைது செய்யப்படுவதைத் தொடர்ந்து, பெண்களும் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடையத் தொடங்கியது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். என அவர்கள் முழக்கமிடத் துவங்கினர்.

ஒரு சிலரை கைது செய்வதன் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சி.ஏ.ஏ. போராட்டங்களை நீர்த்துப் போக செய்ய போலீசு மேற்கொண்ட முயற்சி வீணாகிப் போனது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு தனது வக்கிரத் தாக்குதலை பெண்கள் மீதும் தொடுக்க ஆரம்பித்தது.

படிக்க :
ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

குறிப்பாக டெல்லி போலிசார் ஜாமியா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் மீது என்ன மாதிரியான பாலியல் வக்கிரத் தாக்குதலை அரங்கேற்றியதோ அதற்கு சற்றும் குறையாத வகையில், போராடும் பெண்களை மார்பகங்களில் தாக்குவது என கோரத்தாண்டவமாடியது. மேலும் ஆபாச வசவுகளையும் பொழிந்துள்ளது. போராடும் பெண்களில் பலரும் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை விடவும் போலீசின் ஆபாச வசவுகளால் கூனிப் போயுள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் வேறு வழியின்றி சென்னை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 120 பேரை விடுவித்துள்ளார்.

மேலும் போராட்டத்தின் போது போலீசார் தொடுத்த தாக்குதலில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 70 வயது முதியவர் ஒருவர் மரணித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசு தரப்போ  அதனை மறுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் ஷாகீன் பாக் என வண்ணாரபேட்டை போராட்டம் குறித்து சமூக வளைத்தளங்களில் பலரும் போராட்டத்தை ஆதரித்தும், போலிசை கண்டித்தும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் தமிழக போலீசு உத்திரப் பிரதேச ‘காவி போலீசைப்’ போல செயல்படுகிறது என்றும் கண்டனம் எழுப்பியுள்ளனர்.

உண்மைதான் இதுவரை உ.பி அரசின் ‘காவி போலிசு’ நடத்திய தாக்குதலில் 25-க்கும் மேற்பட்டவர்கள் செத்துப் போயுள்ளனர். அதேபோல டெல்லி ஜாமியா மற்றும் ஷாகீன் பாக் பகுதிகளில் காவி குண்டர்கள் நேரடி துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டபோது டெல்லி போலிசும் கை கட்டி வேடிக்கைதான் பார்த்திருந்தது. அந்த வகையில் எடப்பாடி அரசின் போலிசு நாங்கள் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளது.

இவை அனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான், இனி வெறும் மனுக்களால் இங்கு தீர்வு கிடைக்காது என்பதுதான் அது. தீர்வு போராட்டங்களில் தான் அடங்கி இருக்கிறது. அதனை முன்னெடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளாகிய நம் அனைவரது கடமையாகும். இதற்காக நாம் களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. வண்ணாரப் பேட்டையில் தொடங்கி சென்னை மிண்ட் பாலம் வரை கூட்டம் பெருகி நிற்கிறது. போராட்டம் தொடர்கிறது ! வாருங்கள் ! போராட்டத்தைக் கொண்டாடுவோம் !