privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் போலீசு அரங்கேற்றிய கொடூரத்திற்கு ஆதாரமாக, தற்போது அது குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

-

டந்த டிசம்பர் 15-ஆம் தேதி, ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லி போலீசு, காவி போலீசாக மாறி மாணவர்களை அடித்து உதைத்தது. டெல்லி போலீசின் வெறியாட்டத்தைக் காட்டும் வீடியோ காட்சிகள் அப்போதே வெளியாகின. நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக அடித்து ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோனது.

ஜாமியா பல்கலையில் டெல்லி போலீசு நடத்திய வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்தன. இந்நிலையில், அன்று நூலக அறையில் என்ன நடந்தது என்பதற்கான ஆதாரத்தை அளித்துள்ளது, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் மாணவர்கள் குழுவான ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு.

டிசம்பர் 15 அன்று காவல்துறையினர் தங்களைத் தாக்கியதாக மாணவர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் ஆரம்பம் முதலே குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், காவல்துறை இந்த கூற்றுக்களை மறுத்து வருகிறது. ஒரு சட்ட மாணவர் வன்முறையில் கண் இழந்தார். ஆரம்பத்தில் துப்பாக்கி சூடு எதுவும் நடத்தவில்லை என கூறிய டெல்லி போலீசு, பிறகு மூன்று தோட்டாக்கள் சுட்டதாக கூறியது.

இந்நிலையில் நூலகத்தில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், 2019 டிசம்பர் 15 அன்று, மாணவர்கள் நூலகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கும்போது முககவசம் அணிந்த காவல்துறையினர் உள்ளே நுழைந்து மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர்.

49 நொடிகள் நீடிக்கிறது அந்த வீடியோ. வீடியோ எடுக்கப்பட்டது மாலை 6:08 மணி, டெல்லி போலீசு வன்முறையில் இறங்கிய அதே நேரத்தைக் காட்டுகிறது.

படிக்க :
ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
♦ சென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

அந்த வன்முறைக்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசியிருந்த மாணவர்கள், ‘நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். கிரிமினல்கள் அல்ல. ஆனால், டெல்லி போலீசு நாங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை’ எனக் கூறியதும் நினைவு கூறத்தக்கது.

ஜாமியா ஒருங்கிணைப்பு குழுவால் வெளியிடப்பட்ட வீடியோ துணுக்கு, சமூக ஊடகங்களில் வைரலானது. இது காவல்துறை மாணவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறையையும்; அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதும் தெளிவாக நிரூபிக்கிறது என்று பலரும் கூறினர்.

காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசு நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.

“டெல்லி காவல்துறை மாணவர்களை எந்த அளவுக்கு மோசமாக தாக்குகிறது என்பதைப் பாருங்கள். ஒரு இளைஞர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்; ஆனால் ஒரு போலீஸ்காரர் அவரை தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சர் (அமித் ஷா) மற்றும் டெல்லி காவல்துறையினர் தாங்கள் நூலகத்திற்குள் நுழையவில்லை; அவர்களை அடிக்கவில்லை என்று பொய் சொன்னார்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா ட்விட்டரில் எழுதினார்.

படிக்க :
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
♦ டிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு !

“இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ஜாமியாவில் போலிஸ் நடவடிக்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால்… அரசாங்கத்தின் நோக்கம் அம்பலப்படுத்தப்படும்.” என எழுதியுள்ள சசி தரூர். அந்த வீடியோ “திகிலூட்டும்”படியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் உண்மை கண்டறியும் குழு அறிக்கை முன்னர் “அதிகபட்ச சேதத்தை” ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஜாமியா மாணவர்களை டெல்லி காவல்துறை தாக்கியது எனக் கூறியிருந்தது.

நேரடி சாட்சியங்கள், வீடியோ ஆதாரங்கள் வெளியான போதும், ஏவிவிட்ட உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி போலீசு மீது விசாரணை நடக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், இந்தத் திட்டமிட்ட வன்முறையை ஏவியது இந்த அரசுதான் என்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது இந்த வீடியோ.


கலைமதி
நன்றி :  தி வயர்.