ல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய சீன எல்லைப் படையினருக்கு இடையே நடந்த மோதலை ஒட்டி, சீனாவை மையமாகக் கொண்ட டிக்டொக் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு. இது சீனாவுக்கு எதிரான இந்திய எச்சரிக்கை என்றும் சீனா எதிர்பார்க்காத விதத்தில் இந்தியா நடத்திய தாக்குதல் என்றும் ‘தேசபக்தர்கள்’ விதந்தோதுகின்றனர். பல ஊடகங்கள், இந்தியா சீனா போர் வந்தால், இந்தியாவுடன் அமெரிக்கா நிற்கும் என்றும் வரைபடத்தோடு விளக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய இந்திய சீன எல்லைத் தகராறின் பின்னணி என்ன என்பதை வரலாற்றுரீதியில் பார்க்கலாம்.

கடந்த ஜூன் 15 அன்று லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன இராணுவத்தினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மோதலில் சீன இராணுவத் தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவருகின்றன. ஆனாலும் இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

சீன இராணுவத்தினர் மூன்று இடங்களில் எல்லையை தாண்டி வந்ததாகவும், அங்கு கூடாரங்களையும், பாதுகாப்புச் சாவடிகளையும் அமைத்ததாகவும் வெளியேறும்படி பலமுறை கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை புறக்கணித்ததாகவும், அதனால்தான் கற்கள் மற்றும் கைகளால் தாக்குவது என்ற வகையில் மோதல் ஏற்பட்டது என்று இந்திய அரசு கூறுகிறது.

இது குறித்து இந்தியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேச்சுவார்த்தைக்காக அந்தப் பகுதியில் இருந்த சீன இராணுவத்தினர் மீது எல்லை விவகாரத்தில் இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி இந்திய இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தியதே இந்த மோதலுக்கான காரணம் என்று தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான அனுராக் ஸ்ரீவத்சவா பேசுகையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு குறித்த சீனத் தரப்பின் வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார். மேலும் இந்தியத் துருப்புகள் “உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை” (LAC) தாண்டவில்லை என்றும் அந்தப் பகுதியில் அதிக நேரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறினார். மேலும் இந்தியாவின் வழக்கமான பாரம்பரிய ரோந்து வழிமுறையை சீனா தடுத்ததன் காரணமாகவே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மோசமான இந்த மோதல் சம்பவம் நடந்த பின்னர் பல்வேறு மட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைக்குரிய பகுதியிலிருந்து இருதரப்பினரும் படைவிலக்கம் செய்வது என்று இருதரப்பிலும் முடிவு எட்டப்பட்டது.
அமைச்சகம் மற்றும் தூதரக அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போது கடந்த 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ நமது எல்லைக்குள் யாரும் ஊடுறுவவும் இல்லை, தற்போது அங்கு வேறு யாரும் இருக்கவோ நமது நிலைகளைக் கைப்பற்றவோ இல்லை” என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

படிக்க:
சாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
♦ சீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா ?

இந்த விவகாரங்களை முன் வைத்து கடந்த 15 நாட்களாக, வட இந்திய ஊடகங்கள், இந்திய – சீன மோதல் குறித்த விவாதங்கள், நேர்காணல்கள், கருத்துரைகள் என பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த மோதலின் பின்னணி என்ன என்பது குறித்தும் சீனா இந்திய நிலப்பரப்புகளை ஆக்கிரமித்ததா இல்லையா என்பது குறித்தும் முன்னாள் இராணுவ அதிகாரிகள், முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் உள்ளிட்டு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட இரண்டு அரசுகளும் நேர்மையாக செய்தி வெளியிட்டால் மட்டுமே இந்திய – சீன எல்லையில் உண்மையில் நடந்ததென்ன என்பது தெரியவரும்.

இந்த சம்பவம் குறித்து ப்ளாணட் லேப்ஸ் (Planet Labs) மற்றும் மாக்சார் (Maxar) ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செயற்கைக் கோள் படங்கள், தற்போது மோதல் நடந்த பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பே சீனக் கட்டுமானங்கள் மற்றும் வாகனங்களின் இருப்பை உறுதி செய்கின்றன. எனில் அந்த இடத்தை சில மாதங்களுக்கு முன்னரே சீனா கைப்பற்றியிருக்க வேண்டும் அல்லது “நமது எல்லைக்குள் சீனா நுழையவில்லை” என்ற மோடியின் கூற்றுப்படி பார்த்தால் சீனக் கட்டுமானங்கள் இருக்குமிடம் சீனாவினுடையதாக இருக்க வேண்டும்.

இது குறித்து இந்திய இராணுவத்தின் முன்னாள் லெப்டிணன்ட் ஜெனரல் ஹெச்.எஸ். பனாக் கூறுகையில், இந்த மோதல் நடப்பதற்கு முன்னரே சுமார் 40 சதுர கிமீ பரப்பளவு சீன இராணுவத்தின் கைகளுக்குச் சென்று விட்டது என்றும், இப்பகுதியில் தற்போதைய மோதல் சம்பவம் நடப்பதற்கு முன்னரே தொடர்ச்சியாக பல மோதல்கள் நடந்து வந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே சில பல மோதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக மே இரண்டாம் வாரத்தில் கிட்டத்தட்ட 150 சீன – இந்திய இராணுவத்தினர் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.

சீன இராணுவத்தின் எல்லை அத்துமீறல்கள் இந்த மோதல் சம்பவத்தில் மட்டும் நடைபெற்ற விசயம் அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி 2020-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 170 முறை சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. இதில் லடாக் பகுதியில் மட்டும் சுமார் 130 முறை அத்துமீறி நுழைந்துள்ளது. மோடி ஜிங்பிங்-ஐ மாமல்லபுரத்தில் சந்தித்த 2019-ம் ஆண்டிலும் இதே போன்ற அத்துமீறல்கள் லடாக் பகுதியில் அதிகரித்துள்ளன. அதாவது, 2018-ம் ஆண்டில் 284-ஆக இருந்த அத்துமீறல்கலின் எண்ணிக்கை, 2019-ல் 497-ஆக அதிகரித்துள்ளது (75% அதிகரிப்பு). அப்போதும் மோடி அரசு சீனாவுடன் நல்லுறவையே பேணி வந்துள்ளது. மாமல்லபுரத்திற்கு சீன அதிபரை வரவழைத்து மோடி விருந்து வைத்தார்.

இங்கு இந்திய தரப்பில் ‘சீன அத்துமீறல்’ எனப்படுவது, இந்தியா குறிப்பிடும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் (LAC) தாண்டி சீன இராணுவத்தினர் வருவதையே குறிப்பிடுகிறது. இந்தியா குறிப்பிடும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை சீனாவும், சீனா குறிப்பிடும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியாவும் ஏற்றுக் கொள்வதில்லை.
அதனால்தான் இந்தியப் படையினருக்கும் சீனப் படையினருக்கும் இந்த எல்லைகளில் தொடர்ச்சியான அத்துமீறல்களும் மோதல்களும் நடக்கின்றன. இதுவே இந்தியா பாகிஸ்தானைப் பொருத்தவரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா இந்தியா மத்தியில் இதுவரை இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்பது எதுவும் வரையறுக்கப்படவில்லை.

இந்திய சீன எல்லைத் தகராறின் வரலாறு :

இப்படி தெளிவான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு சீன – இந்திய எல்லையில் வரையறுக்கப்படாததற்கான காரணம் வரலாற்றுரீதியானது. இதன் அடிப்படை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய ஆளும்வர்க்கத்திற்கு 1947-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட அதிகார மாற்றத்திலிருந்தே ( ‘சுதந்திரத்திலிருந்தே’ ) தொடங்குகிறது. அதிகார மாற்றம் நடந்த பின்னர், இந்திய தரகு முதலாளிகளின் கனவுகளைப் பிரதிபலிக்கும் முகமாகவே நேரு இருந்தார்.

அகண்ட பாரதம் என்பது வெறுமனே ஆர்.எஸ்.எஸ்.-ன் கனவு மட்டுமல்ல. காங்கிரசின் கனவாகவும் இருந்தது. குறிப்பாக 1947 அதிகார மாற்றம் நடந்த சமயத்தில் இந்தியாவிற்கு அருகாமை நாடுகளான நேபாளம், காஷ்மீர், பூட்டான், தற்போதைய வடகிழக்கு மாநிலங்கள், மியான்மர், வங்கதேசம், திபெத் ஆகியவற்றை ‘இந்தியாவாக்க’ பெரும் அவா கொண்டிருந்தது இந்திய ஆளும்வர்க்கம்.
அதன் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்ட இந்திய வரைபடத்தின் எல்லைகளை தன்னிச்சையாக மாற்றியமைத்தது முதல், சீனாவுடனான எல்லைக் கோடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் நேரு தவிர்த்தது, திபெத்தில் சீனாவுக்கு எதிராக கலகம் உண்டாக்க அமெரிக்காவிற்குத் துணைபுரிந்தது, சீனாவுடன் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு போரில் ஈடுபட்டது, அதில் படுதோல்வியைத் தழுவியது என ஒரு பெரும் வரலாறு நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு.

(“இமாலய சாகசம்” மின்னூலை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்)

1962 போருக்குப் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியம், ரசிய சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்கள் மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் நலன்களும் குடி கொண்டிருந்தன. அவையே அந்தப் போரை பின் நின்று இயக்கின.
பனிப்போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, ரசிய நாடுகளுக்கு இடையிலான அந்தப் பொதுவான ‘நலன்’ குறித்தும், இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன் குறித்தும் போரில் அவை ஆற்றிய பங்கு குறித்தும் தமது “இமாலய சாகசம்”எனும் நூலில் ஆதாரப்பூர்வமாக விளக்கியிருக்கிறார் தோழர் சுனிதி குமார் கோஷ். நாடுகளுக்கு இடையே அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்ட கடிதங்கள், நேரு, படேல் உள்ளிட்டோர் எழுதிய கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலைப் படிப்பது வரலாற்றிரீதியாக இந்திய சீன எல்லைப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள உதவும். (“இமாலய சாகசம்” மின்னூலை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்)

1962-ம் ஆண்டு இருந்த நிலைமைகள் வேறு; 2020-ல் தற்போது இருக்கும் நிலைமைகள் வேறு. அன்று இருந்தது மாவோவின் கம்யூனிச சீனா. ஆனால் இன்று இருப்பதோ இராணுவரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தனது விரிவாக்கக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சீனா. ஒரு ஏகாதிபத்தியமாக வளர்வதற்கான முயற்சியில் அது இருக்கிறது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு 1990-களில் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் மூலம் தனது வல்லாதிக்கத்தை இராணுவரீதியாகவும், ஐ.எம்.எஃப், உலகவங்கி ஆகியவற்றின் மூலம் பொருளாதாரரீதியாகவும் தக்க வைத்துக் கொண்டது அமெரிக்கா.

மாவோவிற்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவப் பாதையை நோக்கிச் சரிந்த சீனா, அங்கிருந்த சோசலிசக் கட்டமைப்பையும், சீன மக்களின் அயராத உழைப்பையும் பயன்படுத்திக்கொண்டு படுவேகமாக பொருளாதாரத்திலும், இராணுவரீதியிலும் வளர்ந்தது.

பெருவீத உற்பத்திக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்ட அதன் உட்கட்டமைப்பு, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உற்பத்திப் பின்னிலமாக சீனாவை உருவாக்கியது. மிகக் குறைந்த விலையில் அங்கு கிடைக்கப்பெறும் உழைப்புச் சக்தி, அமெரிக்க முதலாளிகளின் இலாபத்தை உறுதி செய்யும் அட்சய பாத்திரமாக விளங்கியது. இதன் காரணமாக உலகளாவிய உற்பத்திச் சங்கிலியில், சீனா ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்தது.

சீனாவை முடக்க இந்தியாவை பகடைக்காயாக்கும் அமெரிக்கா :

சீனாவின் இந்த வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் தனது அடியாளாக இந்தியாவை நிலைநிறுத்துவத்ற்கு இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களைப் போட்டது அமெரிக்கா.

குறிப்பாக, அமெரிக்காவுடன் 2015-ம் ஆண்டு போடப்பட்ட டில்லி நட்புறவு அறைகூவல் ஒப்பந்தம், மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவத்தின் அத்துமீறல்களையும் ஆதிக்கத்தையும் அங்கீகரித்து அவர்களுடன் இணைந்து செயல்படும் ஒப்பந்தங்களாகிய LEMOA – 2016, CCSA-2018 ஆகியவை கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் இறையாண்மையை அழித்து இந்தியாவை வெளியுறவுரீதியில் அமெரிக்காவின் தொங்குசதையாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டவைகளாகும்.

அடுத்ததாக BECA (Basic Exchange and Cooperation Agreement for Geo-Spatial Cooperation) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா தயாராக உள்ளது. இது குடிமக்களையும், இராணுவரீதியில் முக்கியமுள்ள இடங்களையும் விண்வெளி, செயற்கைக் கோள் மூலம் துல்லியமாகக் கண்காணிப்பது மற்றும் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தமாகும்.

இம்மாதிரியான அமெரிக்கக் கண்காணிப்பு திட்டத்துக்கு மோடி கையெழுத்திட்டு வந்தது குறித்து வாய் திறக்காத சங்கிகள்தான் இன்று சீனச் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக கூக்குரலிடுகின்றனர்.

சீனாவின் கிழக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் தமது அடியாட்களை வைத்து தென் சீனக் கடலிலும் – இந்தோ – பசிபிக் கடல் பகுதியிலும் சீனாவை முடக்கும் வகையில், க்வாட் (QUAD) எனும் நான்கு நாடுகள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இந்த நான்கு நாடுகளும் கூட்டாக இராணுவப் பயிற்சி மேற்கொள்வது – தென் சீனக் கடற்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கூட்டாக செயல்படுவதற்கான திட்டமாகும்.

தற்போது நடந்த இந்த எல்லை மோதலை கையில் எடுத்துக் கொண்டு அமெரிக்க ஆளும் வர்க்கம் சீனாவுக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவி விடும் வேலையைத் துவக்கியிருக்கிறது.

அமெரிக்க அரசுச் செயலர் மைக் பாம்பியோ நேரடியாக சீனாவைக் குற்றம் சாட்டியுள்ளார். கோப்பன்ஹெகன் ஜனநாயக மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசுகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஹாங்காங், சிங்ஜியாங், திபெத் ஆகிய பகுதிகளில் செய்து வந்த ஒடுக்குமுறையை இந்தியாவிலும் செய்திருப்பதாகக் கூறீயுள்ளார். மேலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன இராணுவமும் அருகாமை நாடுகளுடன் ரவுடித்தனமாக நடந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஜூன் 25 அன்று ப்ரூசெல்ஸ் மாநாட்டில் பேசுகையில் ஐரோப்பாவில் இருந்து 25,000 துருப்புகளை ஆசியாவுக்கு நகர்த்த இந்த வாய்ப்பை தாம் பயன்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். அதாவது, இந்தியா போர் தொடுத்தால் (தொடுக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்) அமெரிக்கா ஆதரவளிப்பதாக சூக்குமமாகத் தெரிவித்துள்ளார். தனது உடனடியான அரசியல் இலக்குகளுக்கான பகடைக்காயாக இந்தியாவைப் பயன்படுத்த நினைக்கிறது அமெரிக்கா. அதன் மூலம் சீனா மீதான தமது பிடி இறுகியிருப்பதை அமெரிக்க மக்களிடம் காட்டி சரிந்த தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள நினைக்கிறது அமெரிக்க அரசு.

***

ஆசியாவில் அதிகரிக்கும் சீன மேலாதிக்கமும் இந்தியாவின் நிலையும் :

அமெரிக்காவுடனான தனது வர்த்தகப் போட்டியில், தனது பொருளாதார மற்றும் அரசியல்ரீதீயிலான மேலாதிக்கத்தை ஆசியாவில் நிலைநாட்டிக் கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்துவருகிறது சீன அரசு. அதன் ஒரு பகுதியாகவே, தனது வர்த்தகரீதியான கனவுத் திட்டமான “மண்டல மற்றும் சாலை முனைப்புத் திட்டத்தை” (Belt and Road Intiative) தொடங்கியிருக்கிறது. இந்த சாலைப் போக்குவரத்துத் திட்டம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காஷ்மீர் பகுதியான அக்ஷாய் சின் வழியாகவே கடக்கிறது.

இந்நிலையில் காஷ்மீரின் பிரிவு 370 சிறப்புத் தகுதியை நீக்கிவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரையும் (POK), சீன ஆக்கிரமிப்பு அக்ஷாய்சின்னையும் மீட்போம் என நாடாளுமன்றத்தில் அமித்ஷா சவடால் விட்டது சீனாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அச்சமயத்தில் தூதரகரீதியாக கண்டித்துள்ளது சீனா.
முந்தைய ஆண்டுகளைக்காட்டிலும் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில், லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதை வைத்துப் பார்க்கையில், சீனா அக்ஷாய் சின் பற்றிய அமித்ஷாவின் சவடாலையும், இந்தியாவின் அமெரிக்கச் சாய்வையும் தனது வர்த்தகப் போக்குவரத்துத் திட்டமான “மண்டல மற்றும் சாலை முனைப்புத் திட்டத்திற்கான” அச்சுறுத்தலாகக் கருதுவதாகவே அனுமானிக்க முடிகிறது. அதனால்தான் மோதலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளின்படி படைகளைப் பின்வாங்கிய பிறகும் கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது சீனா.

ஆனால் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சீன இராணுவம் வந்திருப்பதாக செயற்கைக்கோள் ஆதாரங்களும், இந்திய அமைச்சகங்களுமே கூறினாலும், நமது 56 இன்ச் பிரதமர் நரேந்திர மோடியும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பாஜக அமைச்சருமான வி.கே.சிங், “யாரும் நம் இடத்திற்குள் ஊடுறுவவில்லை” என்று பேசியிருக்கிறார்கள். இதுதான் மோடி அரசின் நிலை.

மோடி – அமித்ஷாவின் கவலை எல்லாம், பீகார் தேர்தல் வரவிருக்கும் சூழலில் எல்லையில் ஏற்பட்ட இந்த மோதலையும் உயிரிழப்புகளையும் தமக்கு எப்படிச் சாதகமாக்கிக் கொள்வது என்பதுதான். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கவலையும் அதுதான்.

ஒருபுறத்தில், மோடி அரசு 59 சீனச் செயலிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டதன் மூலம் சீனாவிற்குத் தனது சந்தையின் மதிப்பை உணர்த்தியுள்ளதாகவும் இது சீனாவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றும் அனைத்து ‘தேசிய’ ஊடகங்களும் பஜனை பாடுகின்றன.

மறுபுறத்தில் மோடி சீனாவிடம் சரணடைந்துவிட்டதாகக் கூறி, எல்லையில் பெரும்பகுதியை சீனாவிடம் மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் எல்லையை முறையாகக் கண்காணிக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

இதற்குப் பதிலடியாக, சீன தூதரகத்திலிருந்து 3,00,000 அமெரிக்க டாலர் பணத்தை ராஜீவ்காந்தி ட்ரஸ்ட் மூலம் காங்கிரஸ் பெற்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா. காங்கிரஸ் ஆட்சியில் சீனாவுக்கான அனுமதிக்கப்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை அளவை 33 முறை காங்கிரஸ் உயர்த்தியதாக குற்றம்சாட்டுகிறார் பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

மேலும் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீன ‘கம்யூனிஸ்ட்’ கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து என்.ஐ.ஏ மற்றும் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒரு வழக்கைப் பதிவு செய்தவரகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பாஜகவும் சீனக் ‘கம்யூனிஸ்ட்’ கட்சியோடு கொஞ்சிக் குலாவிய பல்வேறு சம்பவங்களுக்கு எதிராக மட்டும் வழக்கு தொடுக்கவில்லை.

இராணுவத்தினரின் உயிரிழப்பைப் பயன்படுத்தி தேசிய வெறியைத் தூண்டி அதை தமக்குச் சாதகமான வகையில் வாக்குகளாக மாற்ற முயற்சிக்கும் பாஜகவும் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினார்களே தவிர, எல்லையில் ‘அத்துமீறிய’ சீனாவின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இருதரப்பும் வாய் திறக்கவில்லை.

சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிய சங்க பரிவாரத்தினர், வீட்டில் உள்ள பழைய சீனப் பொருட்களையும் போன்களையும் உடைப்பதில் மும்முரம் காட்டினரே தவிர சீனாவிலிருந்து இறக்குமதியை தடை செய்யக் கூறி மோடியிடம் மனு கூட கொடுக்கவில்லை.

“பொதுவாகவே பாகிஸ்தான் எல்லையில் சிறு அசம்பாவிதம் நடந்தாலும், ’சவுண்டு’ விடும் மோடி, இப்போது ஏன் அமைதி காக்கிறார். போர் கூட நடத்த வேண்டாம். ஒரு பொருளாதாரத் தடையாவது விதிக்கலாமே?” என்பதுதான் தற்போது அப்பாவி ‘தேசபக்தர்களின்’ மனதை உறுத்திக் கொண்டிருக்கும் புதிர்.

பொருளாதார மந்தநிலை நீடித்திருக்கும் சூழலில் கொரோனா தாக்குதலும் சேர்ந்து இந்திய முதலாளிகளின் வருவாயை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மூலப் பொருட்களை சீனாவே பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது. மருந்துகளுக்கான மூலப் பொருட்கள், உரம், கச்சா எண்ணெய் என இந்தியாவின் அத்தியாவசியத் தேவைகளை சீனாவே குறைந்த விலையில் பூர்த்தி செய்கிறது.

அமெரிக்கா தன்னைவிட இளைத்த நாடுகளை தனது இராணுவ பலத்தின் மூலம் அடித்துப் பிடுங்கி தனது முதலாளிகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் பிராந்திய ரீதியில் தனக்கு அடியாளாக வேலை செய்வதற்கு என பல்வேறு நாடுகளை உருவாக்கி, ஒவ்வொரு பிராந்தியத்தையும் போர் அச்சுறுத்தலில் இருத்தி வைத்திருக்கிறது. இதன் மூலமாக ஆயுத விற்பனையிலும் பெரும் ஆதாயம் ஈட்டு வருகிறது. எனவே அமெரிக்க முதலாளிகளுக்கு போர் அவசியமாக இருக்கிறது.
இந்தியத் தரகு முதலாளிகளோ மலிவான விலையில் கிடைக்கும் மூலப் பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும் சீனாவை பெருமளவில் சார்ந்து நிற்கிறார்கள். எனவே இன்றைய சூழலில் இந்திய முதலாளிகளுக்கு போர் அபாயகரமானது.

தற்போது எல்லையில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து, சில இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் சீன நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி ஆணைகளை ரத்து செய்துள்ளன. இந்தியாவிற்குள் இறக்குமதியாகும் சீனப் பொருட்களை சுங்கச்சாவடியில் சோதனை முடித்து வெளியேற்றுவதை தாமதப்படுத்தியிருக்கின்றனர் சுங்கத் துறையினர் . இதற்குப் பதிலடியாக சீனாவும் தங்கள் நாட்டுக்கு உள்ளே வரும் இந்தியப் பொருட்களுக்கு சுங்கச் சாவடியில் கெடுபிடிகளை துவங்கியிருக்கிறது. டிக்டொக் உள்ளிட்ட செயலிகளுக்கு அனுமதி மறுப்பதை மட்டும் நேரடியாக செய்துவிட்டு, இது போன்ற வேலைகளையும் அனுமதித்துள்ளது மோடி அரசு

இந்திய சுங்கச்சாவடிகளில் சீனப் பொருட்கள் முடக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு உள்ளாகவே, தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் சுங்கச் சாவடிகளில் உள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என்று இந்திய முதலாளிகள் கோரிக்கை வைக்கத் துவங்கிவிட்டனர். இதுதான் இந்தியாவின் நிலைமை.

“சீனாவுடன் போருக்குப் போகலாம், வா” என ஆயுதங்களோடு அமெரிக்காவே வாசலில் வந்து தாம்பூலம் வைத்து அழைத்தாலும் இந்திய அரசு போரில் இறங்குவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனெனில் இன்றைய சூழலில் சீனாவுடன் ஒரு போர் தொடங்கினால், அதில் விழும் முதல் குண்டு இந்திய தரகு முதலாளிகளின் வர்த்தகத்தின் மீதானதாகத்தான் இருக்கும்.

குறைந்தபட்சம் பாலக்கோட்டின் பைன் மரங்களின் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ஒன்றை நடத்தி தனது ‘வீரத்தைக்’ காட்டி ‘தேசபக்தர்களை’ திருப்திப்படுத்துவதற்கு சீனா ஒன்றும் பாகிஸ்தான் அல்ல என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது மோடி அரசு. அதனால்தான் டிக்டொக் உள்ளிட்ட 59 ஆண்ட்ராய்ட் செயலிகளின் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதோடு திருப்தியடைந்து கொண்டார் நமது 56 இன்ச்.

நிலவும் முதலாளித்துவ சமூக அமைப்பில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே போர் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுவதாக இருந்தாலும் சரி, அவசியமற்ற நிலைமைகளில் போர்கள் நடந்தப்பட்டாலும் சரி, அவற்றின் பின்னணியில் மூலதனத்தின் நலன்தான் ஒளிந்திருக்கிறதே தவிர உழைக்கும் மக்களின் நலன் அல்ல.

– நந்தன்

6 மறுமொழிகள்

  1. கம்யூனிஸ்ட்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும், இந்தியாவும் சீனாவும் எப்படி அண்டை நாடுகளாக இருந்தன ? இந்தியா சீனாவிற்கும் இடையில் திபெத் என்ற நாடு இருந்தது அதை ஆக்கிரமித்து, அதன் பிறகு இந்தியாவிற்கும் திபெத்க்கும் இருந்த ஒப்பந்தங்களை ஏற்க மாட்டோம் என்று சீனா கம்யூனிஸ்ட் பாசிஸ்ட்கள் அடாவடி செய்து இந்தியாவின் போர் தொடுத்தார்கள். அதற்கு உங்களை போன்ற அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் சீனாவிற்கு ஆதரவு.

    இந்தியா மக்கள் அனைவரும் உங்களின் முகத்தில் காரி துப்பினாலும் உங்களால் மாற முடியாது, சீனாவின் அடிமைகள் இந்தியா கம்யூனிஸ்ட்கள்.

    நேர்மை என்ற ஒன்று இருந்தால் எனது கேள்விக்கு பதில்லை சொல்லுங்கள்.

    • அடடே .. மணி மாம்ஸ் .. எப்டி இருக்கீங்க ? பாத்து நெம்ப நாளாச்சே …

      உள்ளூருலயே மக்களுக்கு சோறு போட வக்கில்லாத நேரு மாமா … பக்கத்து நாட்டுல போயி என்ன டீலிங் போட்டாரு ? அடுத்தவன் பர்சுக்குள்ள கைய விடுறது தப்பு இல்லையா மணி மாமா?

      நீங்க எவ்ளோ பெரிய ஜனநாயகவாதி நீங்க இப்படிலாம் பேசலாமா ? அவனவன் நாட்ட அவனவன் பாத்துப்பான்.. நம்ம நம்ம துருத்திய மட்டும் ஊதனும்…

      • நான் கேட்ட கேள்விக்கு உங்களை போன்றவர்களால் என்றுமே நேர்மையாக பதில் சொல்ல முடியாது.

        வரலாற்று ரீதியாக இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள் அல்ல, இரண்டு நாடுகளுக்கும் நடுவில் திபெத் என்ற நாடு இருந்தது, திபெத் வரலாறு கலாச்சாரம் பண்பாட்டு ரீதியாக இந்தியாவோடு இணைந்த நாடு. ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த நாட்டை சீனா 1950 களில் சீனா ஆக்கிரமித்தது அதற்கான மூல காரணம் திபெத் பகுதியில் இருக்கும் இயற்க்கை வளங்கள். அதற்காக பாசிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் இல்லாத புது கதைகளை உருவாக்கி திபெத் நாட்டை அபகரித்தார்கள்.

        அந்த அபகரிப்பிற்கு பிறகு தான் வரலாற்றில் முதல் முறையாக சீனா இந்தியாவின் அண்டை நாடானது.

        சீனா திபெத் நாட்டை கைப்பற்றுவதற்கு முன்பு தலாய் லாமாவிற்கு எதிராக கலவரத்தை தூண்டி விட்டார்கள், அந்த கலவரத்தை தான் இந்த கட்டுரையில் அப்படியே திருப்பி இந்தியா கலவரத்தை தூண்டியது என்ற சீனாவின் பொய்யை இங்கே சொல்லி இருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

        இந்தியா தென் கிழக்கு ஆசியா நாடுகளை (சோழர் காலத்தில்) ஆண்டது, அதன் அடிப்படையில் இந்தியாவும் தென் சீனா கடலை சொந்தம் கொண்டாடலாம். சீனா போலித்தனமான வரலாற்று ஆதாரங்களை கொடுப்பார்கள் ஆனால் இந்தியாவின் வரலாற்று அனைத்து நாடுகளிலும் பதிவு செய்ய பட்ட ஒன்று.

        கம்யூனிசமும் நேர்மையின்மையும் ஒன்று.

  2. MR.Nanthan don’t appear communism to other’s. Did you know about china communism? Are you writer? If you not know the ground politics in china, shut your mouth Mr.Nanthan. Communist peoples is clear beggars to live others swetting.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க