ல்லையில் இந்திய சீனப் படைகளுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சங்க பரிவாரத்தினரும் அவர்களது தொடர் தேசபக்த கூச்சல்களுக்குப் பலியானவர்களும் “சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இந்தியாவால் சீனப் பொருட்களை புறக்கணிக்க முடியுமா ? அது இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்திய சீனப் படைகளுக்கு இடையிலான மோதலைத் தொடர்ந்து இந்தியாவின் சில பகுதிகளில் சீனப் பொருட்களை உடைத்து சிலர் எதிர்ப்பை தெரிவித்தனர். ஓரிரு இடங்களில் சீன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதே காலகட்டத்தில்தான், ஒன் ப்ளஸ் எனும் சீன நிறுவனம் இந்தியாவில் “ஒன் ப்ளஸ் 8 – ப்ரோ” (One Plus 8 Pro) எனும் தனது புதிய திறன்பேசியை (Smart Phone) கடந்த ஜூன் 15 அன்று விற்பனைக்குக் கொண்டு வந்தது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்த இரண்டு நிமிடத்திற்குள்ளாக அனைத்து திறன்பேசிகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் திறன்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களின் மீதான மோகமும், அதற்கான சந்தையும் மிகப் பெருமளவில் இருக்கிறது. பல்வேறு வசதிகளையும் ஒப்பீட்டளவில் குறைந்த அல்லது நடுத்தர வர்க்கத்தினர் செலவழிக்கத் தக்க விலையில் சீன நிறுவனங்கள் தயாரிக்கும் திறன்பேசிகள், இந்திய திறன்பேசி சந்தையை கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 75% அளவிற்கு ஆக்கிரமித்துள்ளன.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதிக் காலாண்டில் இந்தியா இறக்குமதி செய்த சுமார் 3.25 கோடி திறன்பேசிகளில் சுமார் 76% திறன்பேசிகள் விவோ, சியோமி, ரியல்மி, ஓப்போ ஆகிய சீன நிறுவனங்களின் தயாரிப்பே ஆகும். இதற்கு அடுத்தபடியாக தென்கொரிய நிறுவனமான சாம்சங், 15.6% சந்தையை பிடித்துள்ளது.

சீனாவின் திறன்பேசிகளுக்கு இந்தியாதான் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகும். கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் சுமார் 15.25 கோடி திறன்பேசிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்கிறது பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம்.

படிக்க:
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
♦ பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்

வெறுமனே திறன்பேசி சந்தையில் மட்டுமல்ல, இந்தியாவிற்கு திறன் தொலைக்காட்சிகளை (Smart TV) அதிக அளவில் வழங்குவதிலும் சீனா முதலிடத்தில் இருக்கிறது. திறன் தொலைக்காட்சி சந்தையில் சுமார் 27%-த்தை சீனாவின் சியோமி நிறுவனம் தன் கையில் வைத்துள்ளது.

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 17% சீனாவில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த 2018- 19-ம் நிதியாண்டில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மட்டும் சுமார் 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே ஆகும்.

அடிப்படை மூலப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனாவிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையே இறக்குமதி செய்கிறது.
சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வதில், மின்சார இயந்திரங்கள் சுமார் 34%-மும், அணுசக்தி தொடர்பான இயந்திரங்கள் 18%-மும், அடிப்படை இரசாயனங்கள் 10%-மும், நகை மற்றும் ஆபரண கற்கள் 6%-மும் , இரும்பு மற்றும் எஃகு ஆகியவை 4%-மும் பங்களிப்பு செலுத்துகின்றன.

சீனப்பொருட்களை தவிர்ப்பது சாத்தியமா?

இந்தியாவிலிருக்கும் மின் நிலையங்களில் நான்கில் மூன்று நிலையங்கள் சீன உபகரணங்களையே பயன்படுத்துவதாக ‘ப்ரூக்கிங்ஸ்’ (Brookings) எனும் அமெரிக்க சிந்தனைக் குழாம் (Think Tank) தெரிவிக்கிறது.

தொழில்நுட்பப் பொருட்களில் மட்டும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும்பட்சத்தில் கூட அதனை தடை செய்வது பற்றி ஓரளவு சிந்திக்கலாம். ஆனால் கிராமப்புற விவசாயத் தேவைகளுக்கான பல்வேறு பொருட்களுக்கும் சீனாவையே சார்ந்து நிற்கும் நிலை இருக்கிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்களில் முக்கிய உரமாகிய டி.ஏ.பி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் (Di Amonium Phosphate) தேவையில் சுமார் 45% சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் யூரியா உரத் தேவையில் 13% சீனாவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் தடங்கல்கள் ஏற்படுமானால் அவை உடனடியாக விவசாயத்தைப் பாதிப்பதோடு, விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்திற்கே இட்டுச் செல்லும்.

மருந்துத்துறை மொத்த வர்த்தகத்தில் சுமார் 69% பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளில் (Antibiotics) 90% சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒருவேளை சீனா இந்த மருந்துகள் வழங்கலை நிறுத்தினால், மருத்துவத் துறையில் கடுமையான பாதிப்புகள் உண்டாகும் என்று கூறுகிறார், ஜெய்ப்பூரில் இருக்கும் மருந்தக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியரான சந்தீப் நருலா.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுவதும் வர்த்தகம் மட்டுமல்லாமல், நிதியாதிக்கத்திலும் சீனா மேலோங்கி வருகிறது. இந்தியாவிலும் சீனாவின் நிதியாதிக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவிற்குள் வரத்து வங்கிய சீன முதலீடுகளின் வளர்ச்சி இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகப் பரிமாற்ற உறவின் தன்மையையே மாற்றியிருக்கிறது என்கிறது ‘ப்ரூக்கிங்ஸ்’ நிறுவனம். மேலும், மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சீனா செய்துள்ள மற்றும் திட்டமிட்டுள்ள முதலீட்டின் மொத்த மதிப்பு சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது இந்நிறுவனம்.

இந்த முதலீட்டில் பெரும்பான்மையானவை நிறுவனங்களை இணைத்துக் கொள்வதன் (Acquisation) மூலம் நடைபெற்றுள்ளது. சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா, இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. திறன்பேசி இணைய பரிவர்த்தனை செயலி நிறுவனமான பே-டி-எம்-இன் (Pay-TM) தாய் நிறுவனமான ஒன்-97 (One97) நிறுவனத்தின் 40% பங்குகளை அலிபாபா நிறுவனம் வைத்திருக்கிறது.

தொழில் ஆராய்ச்சி நிறுவனமான ‘க்ரிசில்’ (Crisil) நடத்திய ஆய்வில் , சீனாவுடனான வர்த்தகம் தடை செய்யப்படுமானால் இந்தியாவின் உற்பத்தித் துறை கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவிக்கிறது. உதாரணத்திற்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பயன்படுத்தப்படும் சுமார் 67% மின்னணுவியல் உட்பொருட்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு டொக்லாம் பகுதியில் இந்திய சீன இராணுவத்துக்கு இடையிலான மோதலாக இருக்கட்டும், காஷ்மீர் பகுதியில் பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்த தருணமாக இருக்கட்டும், இத்தகைய நிலைமைகள் சீனப் பொருட்களின் இறக்குமதியை பாதித்ததில்லை.

உலகளாவிய வழங்கல் சங்கிலியில் சீனா முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் இந்தியா அப்படிப்பட்ட அளவிலான உற்பத்தியில் ஈடுபடவில்லை. மோடியின் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சுருங்கியிருக்கிறது என்பதை உலகளாவிய வர்த்தகத் தரவுகள் தெரிவிக்கின்றன. வியட்நாம், வங்காளதேசம் போன்ற நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பை எடுத்துக் கொண்டுள்ளன.

சீனா, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 1949-ல் புரட்சியை நடத்தி முடித்து பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் யாரையும் சார்ந்து நில்லாமல், சுயேட்சையாக தனது பொருளாதாரத்தைக் கட்டமைத்திருக்கிறது. தோழர் மாவோ கட்டியமைத்த சோசலிச சீனாவிலிருந்து இன்று முதலாளித்துவ சீனாவாக அது சீரழிந்து போயிருந்தாலும், சோசலிசம் ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படைக் கட்டமைப்பையும், இயற்கை வளங்கள் மற்றும் மக்கள் வளத்தையும் கொண்டு இன்று ஒப்பீட்டளவில் யாருடைய நெருக்குதலுக்கும் அடிபணிய வேண்டிய அவசியமில்லாமல் இருக்கிறது.

இந்தியா 1947-ல் போலி சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை சுயசார்பு என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்துள்ளது. தனது தேவைகளுக்கான பொருட்களுக்காகவும், தொழில்நுட்பத்திற்காகவும் பிற ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. இதன் விளைவாகத் தான் இன்று “சீனப் பொருட்களை புறக்கணிப்போம்” என்ற முழக்கம் மோடியின் பக்தர்களால் வெற்று வார்த்தைகளாக முணுமுணுக்கப்படுகிறது.


– நந்தன்
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால். 

4 மறுமொழிகள்

 1. // இந்தியா 1947-ல் போலி சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை சுயசார்பு என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்துள்ளது//

  போலி சுதந்திரம் என்பது சரியான வார்த்தை , ஏனெனெறால் சோசியலிச புதை குழிக்குள் மாட்டி கொண்டது. உண்மையான மக்கள் சுதந்திரம் 1991 -இல் நரசிம்மராவ் மன்மோகனால் கிடைத்தது .
  அதே காலகட்டத்தில் சீனா கம்ம்யூனிச புதை குழியில் முழுவதுமாக மாட்டி இருந்தது . பஞ்சத்தில் மக்களை இழந்து நிலை குலைந்து இருந்தது .

  அப்படிப்பட்ட சைனா எப்படி இவ்வாறு வளர்ந்தது ? இந்தியா ஏன் இப்படி பின் தங்கியது ?
  மூளை சலவை செய்யப்பட்ட வினவு வாசகரின் கருத்தை அறிய விரும்புகிறேன்

  • ராமன் சார்,
   உங்களுடைய கேள்விகளெல்லாம் சரிதான்.
   ஆனால் அது என்ன ‘மூளை சலவை’ செய்யப்பட்ட வினவு வாசகரின் கருத்து?
   உங்களுடைய மூளை ‘முதலாளித்துவ’ புதைகுழிக்குள் மாட்டிக்கொண்டதை ஒப்புக்கொள்கிறீர்களோ!

   இன்றைய நிலைமைக்கு, இந்தியப்பொருளாதாரம் முதலாளித்துவப் புதைகுழிக்குள் மாட்டிக்கொண்டதுதான் சரியான காரணம். இதை மக்கள் உணராததும், இதை இத்துப்போன இந்திய அரசியல்வாதிகளும், வெகுஜன ஊடகங்களும் வெகுமக்கள் திரளுக்கு கொண்டு செல்லாததும்தான் இன்னோரு காரணம்.

   • // இன்றைய நிலைமைக்கு, இந்தியப்பொருளாதாரம் முதலாளித்துவப் புதைகுழிக்குள் மாட்டிக்கொண்டதுதான் சரியான காரணம்//

    அதாவது 1991 இற்கு பிறகு இந்தியா ஏழ்மையை நோக்கி செல்கிறது , மக்கள் வாழ்க்கை தரம் குறைந்து இருக்கிறது என்கிறீர் என கொள்ளலாமா !

    இதனால் தான் ” ‘மூளை சலவை’ செய்யப்பட்ட வினவு வாசகரின் கருத்து” என்று குறிப்பிட்டேன்.

 2. உலக சந்தையை கைப்பற்றியுள்ள சீனா, இதுநாள் வரை வல்லரசு என மாய்மாலம் செய்துவந்த அமெரிக்காவின் பல முக்கிய பங்கு பத்திரங்களை வாங்கியுள்ளது, மேலும் மருந்துகளும்
  சப்ளை கொரான ஆயுதத்திர்க்கு சந்தை விரிவாக்கம் அடைந்துள்ளது, சர்வாதிகார அடக்குமுறை சக்திகளுக்கும் வழிகாட்டியாக திகழ்கின்றனர்.முதலாளிகளின் திரைமறைவு நேரங்களுக்கு தலைமை பொறுப்பில் உள்ளனர்.ஆக கட்டுரை அருமை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க