மூகச் செயற்பாட்டாளரும் தொழிற்சங்கவாதியுமான தோழர் இலினா சென் கேன்சர் நோயால் நேற்று (10-08-2020) மரணமடைந்தார். இவர் பிரபல மருத்துவரும், சமூகச் செயற்பாட்டாளருமான பினாயக் சென்னின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வாழ்நாள் முழுவதும் சட்டீஸ்கரின் பழங்குடி மக்களின் நலனுக்காகவும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் களப்பணியாற்றினார், இலினா சென்.

சட்டீஸ்கரில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கப் பணியை மேற்கொண்டார். குறிப்பாக சுரங்கங்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடியதோடு பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார்.

சட்டீஸ்கரின் இயற்கை வளங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் திட்டத்திற்காக அப்பாவி பழங்குடி மக்களைக் கொன்று குவித்த சல்வா ஜூடும், கோயா கமாண்டோஸ் ஆகிய அரசு தரப்பு கொலைகார கூலிப்படைகளுக்கு எதிராக தனது கணவருடன் சேர்ந்து குரல் கொடுத்தார். தனது கணவருடன் இணைந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய, பழங்குடியினர் பகுதிகளில் ஜன ஸ்வஸ்த்யா சஹ்யோக் (மக்கள் ஆரோக்கிய உதவி) எனும் குறைந்த செலவிலான, சமூக மருத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியாகப் பணிபுரிந்தார்.

அவரது கணவர் பினாயக் சென், பழங்குடியின மக்கள் உரிமைக்காகவும், அவர்களது சுகாதார நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவந்தார். குறிப்பாக, சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் முற்போக்கு ஜனநாயக அமைப்பினால் வறிய மக்களுக்காக நடத்தப்படும் சங்கர் குகா நியோகி மருத்துவமனையை உருவாக்குவதிலிருந்து, அதனை தொடர்ந்து நடத்துவதிலும் உறுதுணையாக இருந்தார். இவரை மாவோயிஸ்ட் என குற்றம் சுமத்தி, இரண்டாண்டுகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்து கொடுமைப்படுத்தியது சட்டீஸ்கர் அரசு.

தோழர் இலினா சென்னின் மறைவு இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளுக்கும் சட்டீஸ்கர் மக்களுக்கும் பேரிழப்பாகும். இலினா சென்னின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! கார்ப்பரேட் காவிப் பாசிசத்திற்கு எதிராக நம் தோளை உயர்த்துவோம் !

வினவு