21.09.2020

பத்திரிகை செய்தி

கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் பாஜக மோடியின் சட்டங்களை முறியடிப்போம் !
விவசாயிகளை காக்க செப்.25 அன்று தமிழக வீதிகளை போராட்டக் களமாக்குவோம் !

பா.ஜ.க மோடி அரசு செப்டம்பர்.17 அன்று மக்களைவையில் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா {Farmer’s Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020}, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்களுக்கான (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு)  ஒப்பந்த மசோதா {Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020}, அத்தியாவசிய  பொருட்கள் (திருத்த) மசோதா 2020 {Essential Commodities (Amendment) Bill, 2020} என மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இவ்வாரத்தில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றி உடனே நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தீவிரம் காட்டுகின்றது.

இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் என்ன பயிர் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன விலை என்பதை சட்டப்படியே தனியார் கொள்முதல் நிறுவனங்கள் முடிவு செய்யும். விவசாயிகளிடம் அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. அரிசி, பருப்பு எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் மீதான அரசின் விலைக் கண்காணிப்பு மற்றும் கட்டுபாடு நடைமுறையில் விலக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் எந்த அளவிலும் பதுக்கி  விலையேற்றி மக்களை கொள்ளையடிக்க வழி செய்யும். அரசு கொள்முதல்  நிறுத்தப்படுவதால் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும்.

படிக்க :
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

இந்தியாவின் விவசாயம், உணவு உற்பத்தி, விநியோகம் என அனைத்திலும் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களாகிய கார்கில், மாண்சான்டோ, வால்மார்ட், பெப்சி, அய்டிசி மற்றும் இந்திய கார்ப்பரேட்களான ரிலையன்ஸ், நெஸ்லே, பார்லி போன்றவற்றின் ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு போகும் நோக்கத்தில் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தத்தில் விவசாயிகளை அவர்களின் நிலங்களோடு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் அக்கிரமமானச் சட்டங்கள் இவை.

விற்பனை சந்தையில் கூட்டு பேர வலிமையற்ற சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், பகாசூர நிறுவனங்களுடன் விலை பேரம் பேசச் சொல்லும் மாபெரும் உரிமைகளை வழங்குவதாக இச்சட்டங்களை போற்றுகிறார்கள் சங்கிகள். தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியும் காஸ்மீரம் வரை சென்று தான் விளைவித்த பொருட்களை விற்கும் அளப்பெறும் வாய்ப்பினை ‘ஒரே தேசம், ஒரே சந்தை’ என்பதன் மூலம் பெற முடியும் என்கிறார்கள்.

ஆனால் பாஜ.க அரசுக்கு எதிராக பஞ்சாப், அரியானா விவசாயிகள்  வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவெங்கும் விவசாயிகள் போராட்டம் பரவுகிறது. மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்தின் சார்பாக மத்திய அமைச்சரைவையில் பதவி வகித்த கவுர் பாதல், இந்த சட்டங்களை கண்டித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் அடிமை அதிமுக கட்சியினரோ சட்டங்களை ஆதரித்து வெற்றி பெற செய்ததோடு, அவை விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என கதைவிடுகின்றனர். விவசாயத் துறையில், உணவு பாதுகாப்பில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு அப்பட்டமாக சேவகமும் செய்கின்றனர்.

மின்சார சட்டத் திருத்தத்தின் மூலமாக மின்சாரத்தை முழுமையான விற்பனைப் பொருளாக மாற்றி விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட போகின்றது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்ற சட்டங்கள் அடுத்து நிறைவேற்றப்பட உள்ளன. சுற்றுச்சூழல் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. தனித்தனி சட்டங்களை எதிர்ப்பதை தாண்டி இவற்றின் மூலமான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், நாட்டை மறுகாலனியாக்கும் காட் ஒப்பந்தம், பன்னாட்டு விவசாய ஒப்பந்தங்கள், உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து இந்தியா வெளியேறவும் போராட வேண்டியுள்ளது. கார்ப்பரேட் சுரண்டலுக்கான நடவடிக்கைகளை மூர்க்கமாக செயல்படுத்தும் காவி பாசிச ஆட்சி அதிகாரத்தை வீழ்த்த வேண்டும். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது என்பார்கள்; ஏழை குடியானவனின் வயிற்றில் அடிக்க சட்டங்கள் போடுகிறார்கள். இனியும் அனுமதிக்கக் கூடாது.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் வருகிற செப்.25 அன்று நாடு தழுவிய பந்த் நடத்த அனைவருக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் பந்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மக்கள் அதிகாரம் இதனை ஆதரிப்பதுடன், செப்டம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பது என முடிவு செய்துள்ளது. இச்சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வகையில் போராட்டங்கள் நடைபெற, விவசாயிகளும், தமிழக மக்களும் செப்.25 வெள்ளிக்கிழமை அன்று பெருமளவில் வீதிக்கு வந்து போராடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை