ருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல்  அளித்திருக்கிறார்.

கடந்த செப்டெம்பர் 15-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை அழிப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுகளின் முடிவுகள் வந்து விட்ட நிலையில் மருத்துவக் கல்விக்கு சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த சட்டம் எந்த வழியிலும் பயனளிக்கக் கூடாது என்ற வஞ்சகத்தோடு அந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நேற்றுவரையில் (29-10-2020) கவர்னர் இழுத்தடித்து வந்திருக்கிறார்.

படிக்க :
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !

இதனையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு அக்டோபர் மாதத்தின் இடையில் ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஆளுநர் இந்த மசோதா மீது முடிவெடுக்க தமக்கு 3 முதல் 4 வாரங்கள் வரை தேவைப்படும் என்று தெரிவித்து கடிதம் எழுதினார்.

சட்ட மசோதா வரைவை படித்து புரிந்து கொள்ள 4 வாரம் எடுக்கும் அளவுக்கு புரியாத மொழியில் எழுதப்பட்டதல்ல அந்த மசோதா. அதைப் படிக்க நேரம் கூட ஒதுக்க முடியாத அளவிற்கு கவர்னர் பதவியும் அவ்வளவு பணிச் சுமை நிறைந்ததல்ல. ஓய்வு பெற்ற ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும், தமக்குச் சாதகமான ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்குமாகவேதான் கவர்னர் பதவியை பாஜக ஒதுக்கி வைத்திருக்கிறது.

இதில் பன்வாரிலால் புரோகித் முதல் ரகத்தைச் சேர்ந்தவர் . இட ஒதுக்கீடு என்ற வார்த்தையைக் கேட்டாலே ஒவ்வாமை ஏற்படும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிக் கிடந்து வந்த புரோகித்துக்கு அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு என்றவுடன் வேப்பங்காயாக கசந்திருப்பது இயல்புதான். அதன் காரணமாகவே 45 நாட்களுக்கும் மேலாக இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார் பன்வாரிலால் புரோகித். இதற்கு தமிழகத்தை ஆளும் அடிமை எடப்பாடிக் கூட்டமும் அமைதி காத்து வந்தது

ஆளுநர் ஒப்புதல் அளிக்க இழுத்தடிப்பதை கண்டித்து கடந்த அக்டோபர் 24 அன்று ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தை திமுக அறிவித்தது. மேலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தில் அதிமுக அரசின் கூட்டுக் களவாணித்தனத்தை கண்டித்தன. இதன் காரணமாக நெருக்கடிக்கு உள்ளான அடிமை எடப்பாடி அரசு, தேர்தல் நெருங்கும் சூழலில், வேறு வழியில்லாமல் 7.5% உள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி நேற்று (29-10-2020) அரசாணை ஒன்றை வெளியிட்டது.

இதனிடையே கவர்னர் முடிவெடுக்கும் வரை மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான முடிவுகள் அறிவிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஆளுனர் மனசாட்சிப்படி நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என நேற்று (29-10-2020) கருத்து தெரிவித்திருந்தனர்.

இவையெல்லாம் சேர்த்து ஒரு புறரீதியான நெருக்குதல் தந்த நிலையில், பன்வாரிலால் வேறு வழியின்றி இன்று அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட உள் ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அரசுப் பள்ளியில் படித்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது எதிர்கட்சிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே ! எனினும் நெருங்கி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு அறுவடைக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் பாஜக – வுக்கும் அதிமுகவுக்கும் இருப்பதை இணைத்துப் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வு முறையே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவைப் பறித்து, பெரும் கார்ப்பரேட் கல்வி வியாபாரிகளின் பணப் பசிக்கு இரையளிக்கவல்ல பணக்கார மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை விற்பனைசெய்வதற்காகக் கொண்டுவரப்பட்டதே !

நீட் தேர்வை ஒழிப்போம் என்ற போராட்ட நிலையிலிருந்து நம்மை இட ஒதுக்கீடாவது கொடு என்று இறங்கச் செய்திருப்பதன் மூலம் இப்போதும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பல், மருத்துவக் கல்வியை ஏழைகளிடமிருந்து பறித்த தமது வெற்றியை தக்கவைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதிமுக உள்ளிட்ட தேர்தல் கட்சிகளைப் பொறுத்தவரையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தமது சாதனையாகக் காட்ட வேண்டுமானால் இந்த வெற்றி பயன்படலாமே ஒழிய, நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது மட்டும்தான் ஏழை மாணவர்களுக்கு விடிவைத் தரும் !


கர்ணன்

 

6 மறுமொழிகள்

  1. ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்த்த போதும் நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய பாஜக அரசு திமுக நடத்திய போராட்டத்தால் தான் இட ஒதுக்கீட்டுக்கு கவர்னர் மூலம் ஒப்புதல் கொடுத்தது என சொல்வது எப்படிப்பட்ட பச்சைப் பொய். தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட பெறாமல் அதாவது தமிழ்நாட்டின் தயவு கொஞ்சமும் தேவைப்படாமலேயே மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து நினைத்ததை செய்து வருகிறது பாஜக. அவர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரு பொருட்டே அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் மனிதாபிமானிகள் சிலர் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த சட்டத்தை ஆளுநர் அனுமதித்திருக்கிறார். பிளஸ் 2 மார்க் அடிப்படையில் எம்பிபிஎஸ் சேர்க்கை நடந்தபோது அரசு பள்ளி மாணவர்கள் மிக மிக குறைவாகவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு கருணாநிதி கும்பல் செய்த நன்மை இது. இப்போது இந்த சட்டம் அமல் ஆனால் முன்பு இருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் அதிமுக அரசு அடிமை அரசாக இருந்தாலும் பாராட்டத்தக்கது. மாமனிதர் எம்ஜிஆர் காலந்தொட்டே இந்த மாநிலத்தின் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பற்றி அதிமுக கவலைப்பட்டு வந்திருக்கிறது. மாநில நிர்வாகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்க மாட்டார்கள். இவர்களுக்கு கப்பம் கட்டும் தனியார் பள்ளி முதலாளிகள் கோபித்துக் கொள்வார்களே. திமுக செய்த சாதனை எல்லாம் சமச்சீர்கல்வி மாதிரியான குப்பைகளை கொண்டு வந்ததும் மாநில கல்வித் துறையை ஊழல் மயம் ஆக்கியதும் தான். வினவு ஒரு சமூக விரோதிகளின் கூடாரம் என்பது இந்த கட்டுரை மூலம் தெரிகிறது.

  2. //மாமனிதர் எம்ஜிஆர்//
    வேல் யாத்திரைக்கு தயாராயிட்டீங்க போலிருக்கு பெரியசுவாமி

  3. வாழும் வள்ளுவம் என்று சொன்னால்தான் தப்பு. மாமனிதர் என எம்ஜிஆரை சொல்வதில் தப்பில்லை.

  4. பாஜாகா வென்றது ! பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது . சமூக போராளிகளான நாம் இதை எதிர்க்க வேண்டும் . சாதி அடிப்படையியேயே நாம் சமூக நீதி பெற முடியும்

Leave a Reply to Madaiyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க