privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துவிட்டு, விவசாயிகளை சந்தையின் தயவில் விட்டுவிடுகின்றன. சந்தைக்கு, காலி வயிறும் தெரியாது, வறுமையும் தெரியாது. லாபம் மட்டும்தான் தெரியும்.

-

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு, இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை திரும்பப் பெறும்படி வைத்த கோரிக்கையில் உறுதியாக நிற்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அரசு கொள்முதல் உறுதிசெய்யப்படாத பயிர்களை திறந்தவெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் என்பது, உறுதியான வருமானம் கொடுக்காத பயிர்களைப் பொறுத்தவரையில், நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவே இருக்குமென விவசாயிகள் அஞ்சுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், நெல்லும் கோதுமையும் 100% அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் விசயத்தில் இந்த நிலையில்லை. வருடா வருடம் அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து போதுமான அளவு கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதன்விளைவாக, சந்தை சக்திகளே விலைகளை தீர்மானிப்பதாக இருக்கிறது. பெரும்பாலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவானதாகவே சந்தை விலை இருக்கிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விலை இன்னும் குறைந்துவிடும்.

கடந்த ஜீலை மாதத்தில் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம், மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1,850 என நிர்ணயித்தது. ஆனால், அக்டோபர் மாதத்தில் உள்ளூர் மண்டிகளில் மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ரூ.800-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இதற்கு ஈரப்பதம் அதிகமாக இருப்பதுதான் காரணமென வர்த்தகர்கள் கூறுகிறார்கள். அதற்கடுத்த வாரங்களில் விலை சிறிது முன்னேற்றமடைந்தாலும் குறைந்தபட்ச ஆதாரவிலையான ரூ.1,850-க்கு அருகில் கூட வரவில்லை.

படிக்க :
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

பஞ்பாப் மாநில, வேளாண் துறை இயக்குனர், ராஜேஷ் வசிஷ்ட் கூறுகையில், “பிகார், ஆந்திரா, கிழக்கு உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து மக்காச்சோளம் பஞ்சாப் மாநிலத்திற்குள் கொண்டுவரப்படுவதால், பஞ்சாப் மாநில மண்டிகளில் விலை குறைந்திருக்கிறது. சென்ற ஆண்டு, வெள்ளம் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் அதிகம் வராததால், நல்ல விலை கிடைத்தது”.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோழி, கால்நடைப் பண்ணைகளுக்கு தேவையான தீவனங்களின் கிராக்கி குறைந்ததால், அதற்கு பரவலாக பயன்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தின் விலையும் சரிந்தது. இப்போது கோழி, கால்நடைப் பண்ணைத் தீவனங்களுக்கான கிராக்கி அதிகரிப்பதால், இனிவரும் காலத்தில் விலையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

18 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் விதைத்த விவசாயிகள், தங்கள் சாகுபடியை, விலை குறைந்த நேரங்களில் சேமித்து வைத்து, விலை உயரும்போது விற்கிறார்கள். ஆனால், அனைத்து விவசாயிகளுக்கும் இப்படி சேமித்து வைத்து விற்கும் அளவுக்கு வசதியில்லை. நிதிநிலை நெருக்கடி மற்றும் பெரிதாகி வரும் கடன் தொல்லைகள் காரணமாக, பெரும்பாலான விவசாயிகளின் உடனடியான அக்கறையெல்லாம் தாங்கள் சாகுபடி செய்த பயிரை விற்று, வரும் பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்த விளைச்சலுக்கு தயாராவதுதான்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள், ”விவசாயிகள் தங்கள் விளைச்சலை சேமித்து வைத்து, வேறு மண்டிகளுக்கு எடுத்துச்சென்று விற்று நல்ல வருமானம் பெறலாம்” என்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு அதற்குத் தேவையான எந்த வசதிகளும் இல்லை.

நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு ஒரு குவிண்டால் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.5,725 என நிர்ணயித்திருக்கிறது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம், உள்ளூர் மண்டிகளில் விவசாயிகள் பருத்தியை ஒரு குவிண்டாலுக்கு ரூபாய்.4,000-க்கு தான் விற்றிருக்கிறார்கள். பதிந்தா என்னும் இடத்தில் உள்ள இந்திய பருத்திக் கழகத்தின் வெளியே விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்திய பிறகே விலை உயர்த்தப்பட்டது.  10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பதிந்தா பகுதியில் பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8,000-க்கும் மேலாக விற்கப்பட்டது என விவசாயி ஒருவர் சொல்கிறார்.

“மற்ற தொழில்களில் எல்லாம் வருமானம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆனால், விவசாயத்தில் மட்டும் மிகுந்த உறுதியற்றநிலை இருக்கிறது. எங்கள் இடுபொருட்களுக்கான செலவுகள் உயர்ந்துவிட்டது. பருத்தி பிடுங்கும் வேலையாட்களுக்கான செலவும் இப்போது அதிகமாக உள்ளது. ஆனால், வருமானம் எங்கே? குறைந்தபட்ச ஆதார விலையும் போதுமானதாக இல்லை” என விவசாயிகள் புலம்புகிறார்கள்.

பாஸ்மதி அரிசி சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலையும் இதுதான். இது குறித்து தரன்தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜித் எனும் விவசாயி தி வயர் இணையதளத்திடம் பேசுகையில், “1509 ரக பாஸ்மதி அரிசி சென்ற ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,300 – ரூ.2,500 வரை விற்றது. ஆனால், இப்போது ரு.1,600-க்கும் குறைவாகத்தான் சந்தை விலை இருக்கிறது. அதேபோல், 1121 ரக பாஸ்மதி அரிசிக்கு சென்ற வருடம் ரூ.3,200 – 3,300 வரை விலை இருந்தது. ஆனால், இப்போது 2,500 – 2,700 ரூபாய்க்குள் தான் விலை இருக்கிறது.” என்று கூறினார். மேலும் தனியார் முகவர்களின் கூட்டமைப்பு, தந்திரமாக உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து பாஸ்மதியை வாங்கி, உள்ளூர் மண்டிகளில் விலைகளை குறைப்பதாகவும் கூறுகிறார் இந்திரஜித்.

ஊரக மற்றும் தொழிற்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் முனைவர் R.S.குமன் கூறுகையில், “மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. ஆனால் நெல், கோதுமை, சில அளவிலான பருத்தியை தவிர மற்ற பயிர்களுக்கு உறுதி செய்யப்பட்ட அரசு கொள்முதல் கிடையாது. இது விவசாயிகளை சந்தை சக்திகளின் பிடியில் விட்டுவிடுகிறது”.

“சந்தை என்பது கொடையாளன் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சந்தை லாபத்திற்காக மட்டுமே இயங்குகிறது. அதற்கு விவசாயிகளின் வருமானத்தின் மீதெல்லாம் அக்கறையில்லை. பொருளாதாரத்தின் அடிப்படை விதியாக தேவையும், வழங்கலும்தான் (Demand and Supply) இருக்கின்றன. அவைதான் சந்தை விலையை தீர்மானிக்கிறது. பல நேரங்களில் இது செயற்கையாக உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, வெங்காய விலை ரூ.80-ஐ தொட்டுவிட்டது. இதற்குக் காரணம், தேவை உயர்ந்தது அல்ல. வெங்காயத்தை பதுக்கி வைப்பதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட வழங்கல் நெருக்கடியும்தான் காரணம்.

படிக்க :
♦ முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!
♦ ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டாலும், அரசாங்கம் நெல், கோதுமை தவிர்த்த மற்ற பயிர்களுக்கு நல்ல வருமானத்தை உறுதி செய்யவில்லை என்றால் திறந்தவெளி சந்தையின் கொள்கைகளால் வழிநடத்தப்படும் இந்த சூழலில் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை எப்படி அரசாங்கத்தால் உறுதிசெய்ய முடியும்?

இதைத்தான் இந்த புதிய வேளாண் சட்டங்கள், வேளாண் உற்பத்தி சந்தை குழுவையும், குறைந்தபட்ச ஆதார விலையையும் பலவீனப்படுத்துவதன் மூலம் செய்கிறது. தனது உணவு தானிய இருப்பை குறைத்துக்கொள்ளுமாறு உலக வர்த்தகக் கழகம் இந்தியா மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இது நடந்தால், நெல், கோதுமையில் அரசு கொள்முதல் என்பது மிகப்பெரிய அளவில் சரிந்துவிடும்” என்கிறார்.

BKU – Ekta Ugrahan என்னும் அமைப்பின் செயலாளர் சுக்தேவ் கோக்ரி, கூறுகையில், “விவசாயம் தனியார்களின் கைகளுக்கு செல்லும் போதெல்லாம், விவசாயிகள் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், விவசாயிகளிடம் பெரிய அளவில் நிலம் கையிருப்பில் இருந்தும், தங்கள் விளைச்சலுக்கு கட்டுபடியாகாத வருமானத்தால், தங்களையே நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அந்நிய நாடுகளில் 2% மக்கள்தான் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால், இங்கே இந்தியாவில் 60% மக்கள் விவசாயத்தை நம்பிதான் இருக்கிறார்கள். இந்தியாவில் சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளால் எப்படி வாழ முடியும்?” என கேட்கிறார்.

“சந்தை சக்திகளின் கருணையில் விவசாயம் விடப்படும் போது, விவசாயிகளின் நலன்கள் பெரிதும் சமரசப்படுத்தப்படுகிறது” என்று கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ கூறுகிறார்.

வேளாண் வல்லுநர், தேவேந்திர் சர்மா, “சுதந்திர சந்தை என்பது உலகில் எங்குமே வேலை செய்யவில்லை. இங்கே மட்டும் எப்படி அது வேலை செய்யும்? சுதந்திர வர்த்தகத்தின் பொருளாதாரம் முழுவதும், ஏழை மக்களை சுரண்டுவதோடுதான் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.

”அரசாங்கம் வேண்டுமென்றே விவசாயத்துறையை நிதிநிலை ரீதியாக நிலையற்றதாக்குவதே, இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கத்தான். இது பின்னர், விவசாயத்தில் ஈடுபடும் மக்களை குறைத்து, அவர்களை நகரங்களில் இருக்கும் தொழிற்கூடங்களிலும், சேவைத்துறையிலும் பணியாற்றும் மலிவு விலை தொழிலாளர்களாக மாற்றுகிறது”.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

இந்த கொள்கைகளின் விளைவு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அப்பட்டமாக அம்பலப்பட்டுவிட்டது. ஊரடங்கின் இரண்டாவது நாளே, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்கு புலம்பெயர்ந்தார்கள். இது இந்த பொருளாதார வடிவமைப்பு ஏழைகளுக்கு பயனற்றதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் மக்காச்சோளம் பயிரிடும் நிலப்பரப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசாங்கமும் விவசாயிகளை மக்காச்சோளம் விளைவிக்கச் சொல்லி வருகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலையில் அதை கொள்முதல் செய்வதையோ, தனியார் முகவர்களின் கொள்முதலை ஒழுங்கமைப்பதையோ செய்யாமல் ஏமாற்றுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும் என்ற உறுதியில்லாமல், ஏன் விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக மக்காச்சோளத்தை விளைவிக்கவேண்டும்?

மூத்த பத்திரிக்கையாளர், கமீர் சிங் கூறுகையில், “பொது விநியோக அமைப்பின் கீழ் அரசாங்கம் பருப்புவகைகளை விநியோகம் செய்கிறது. அதை ஏன் அந்த மாநில விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக்கூடாது?” என வினவுகிறார்.

இந்த ஒட்டுமொத்த சித்திரமும் நமக்கு காட்டுவது என்னவென்றால், குறைந்தபட்ச ஆதார விலையே சந்தை பொருளாதாரத்தை மையாக கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டாலும், அரசு கொள்முதலும், ஒழுக்குமுறை விற்பனைக்கூடங்களும் இல்லாத பட்சத்தில், விவசாயிகள் சந்தை சக்திகளின் பிடியில்தான் விடப்படுகிறார்கள். சந்தை சக்திகளிடம் பேரம் பேசும் திறன் விவசாயிகளிடம் இல்லை. சாகுபடி செய்ததை சேமித்து வைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதியுமில்லை. சேமித்து வைத்து விற்பனை செய்யும்வரை விவசாயிகளை கடன் தொல்லை விட்டுவைப்பதில்லை. சந்தை சக்திகளின் ஆதிக்கத்தால், கார்ப்ரேட் தரகர்களின் கை எப்போதும் ஓங்கியே இருக்கிறது. அவர்கள் தயவில்தான் விவசாயிகள் வாழவேண்டிய நிலையிருக்கிறது. பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய வேளாண் சட்டங்கள் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும் என்பதற்கு பஞ்சாப் மாநிலத்தின் விவசாயம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இந்த சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனிச்சாமி
செய்தி ஆதாரம் : The Wire