PP Letter headகாவிரி உரிமைக்காக போராடினால் பொய் வழக்கு !
தொடரும் தமிழக போலீஸின் அடக்குமுறை !

பத்திரிகைச் செய்தி

19.06.2021

டந்த 13. 03. 2019 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் , மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி , திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன் , தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் வன்னியரசு உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் 21.06.2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் அழைப்பாணை கொடுத்துள்ளனர்.

இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா செயல்பட்டு வரும் இந்த சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திய பழைய வழக்குகளை தூசிதட்டி எடுப்பது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்த திமுக அரசு அவர்கள் குறிப்பிட்ட தலைவர்களை மட்டும் விடுவித்துவிட்டு மற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அப்படியே பராமரித்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் கொந்தளித்தது. பல லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்தார்கள்.

சென்னை வந்த மோடி மூத்திர சந்தில் செல்லுமாறு பணிய வைக்கப்பட்டார். திரும்பும் பக்கமெல்லாம் ஆர்ப்பாட்டம் மறியல் கருப்பு பலூன்கள் என ஒட்டுமொத்த தமிழகமே போர்க்களமாக காட்சியளித்தது என்றால் அது மிகையல்ல. அந்தப் போராட்டங்களில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகத்தான் வேறு வழியின்றி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது.

அதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கவே சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

காவிரி உரிமைக்கான போராட்டம் என்பது தமிழர்களின் போராட்டம். இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கீழ்க்கண்ட பிரிவுகளைக் கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருப்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் இந்த FIRஐ தாக்கல் செய்திருக்கிறார் . இந்திய தண்டனைச் சட்டம் 153, 153A (1)(a), 153A (1)(b), 501 (1)(b), 501(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட பிரிவுகளுக்கான விளக்கம் கீழே உள்ளது.

கலகத்தை விளைவிக்கும் கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரம் ஊட்டுதல்; சமய, இன ,மொழி வட்டார வகுப்பினர் சாதிகள் அல்லது சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை நிலவுவதற்கான குந்தகமான பொது அமைதியை குலைப்பது அல்லது அனேகமாகப் குலைக்க கூடியதுமான செய்கை செய்வது; பொது மக்களுக்கு அல்லது பொதுமக்களில் ஒரு பிரிவினருக்கு பயம் அல்லது பீதியை விளைவிப்பதன் மூலம் அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய அதனால் தூண்டப்படலாம் என்று பயம் அல்லது பீதியைப் விளைவிக்கும் உக்கிரத்துடன் அல்லது அது அனேகமாக விளைவிக்கின்ற ஒரு செயல்
வகுப்பு அல்லது சமூகம் எதனையும் சார்ந்து ஆட்களை வேறு வகுப்பு அல்லது சமூகத்துக்கு எதிராக குற்றம் எதனையும் செய்யத் தூண்டும் உட்கருத்துடன் அல்லது அனேகமாக தூண்டுகின்ற உரை ,வதந்தி அல்லது அறிக்கை எதனையும் வெளியிடுகின்ற செயல் ..

மேற்கூறிய சட்டப் பிரிவுகளுக்கான விளக்கமான அத்தனை தவறுகளையும் செய்தது மோடி அரசு. மோடி அரசின் நடவடிக்கைகளால் தான் இப்படிப்பட்ட போராட்டம் நடைபெற்றது. மேற்கண்ட சட்டப்பிரிவுகள் மோடி அரசின் மீது போடப்படவேண்டும். மாறாக காவிரி நதிநீர் உரிமைக்காக போராடியவர்கள் மீது இந்த பிரிவுகள் போடப்பட்டு இருக்கின்றன.

காவிரி உரிமை போராட்டம் மட்டுமல்ல தமிழின உரிமைக்காக கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் செய்த போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட போராட்டங்களின் விளைவாக தான் அதன் அறுவடையை தவிர்க்க இயலாமல் திமுக நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் ஈட்டியிருக்கிறது .

காவிரி நதிநீர் உரிமையை பறித்தது தவறு அல்ல; மாறாக அதற்கு எதிராக போராடியது தான் தவறு என்ற ஒரு நீதியை நமக்கு கற்றுக் கொடுக்கிறது அரசு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்காக தமிழ் உரிமைக்காக செய்யப்பட்ட அனைத்து போராட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் மக்களுக்காக போராடுபவர்களை வழக்காடு மன்றங்களுக்கு அலைய விடுவதன் மூலம் முடக்குவது என்ற கடந்த அரசின் யுத்தியையே இந்த அரசும் பின்பற்றுகிறது.

கார்ப்பரேட் – காவி பாசிசம் மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கும் பொழுது தன்மானமுள்ள எந்த மனிதனாலும் அமைதியாக இருக்க முடியாது. மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ள அமைப்புகளும் போராளிகளும் நிச்சயமாக அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் அதை யாரும் தவிர்க்க முடியாது.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடியோர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

போலீசின் பொய் வழக்குகளை எதிர்கொள்வோம்!
மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்!

தோழமையுடன்
தோழர் மருது ,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை