நீட் பற்றி நீட் ஆதரவாளர்களுள் சிலர் வைக்கும் கேள்விகள் ; அனைவருக்கும் சமூக நீதி என்கிறீர்கள், ஆனால் இதற்கு முன்பு இருந்த நுழைவுத்தேர்வு இல்லாத முறையிலும் கூட நாமக்கல் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பள்ளிகள் தானே அதிகம் மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. அப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு தானே இருந்தனர் என்று கேட்கின்றனர்.

எனது பதில் இதோ, நமது சமூகத்தை பொதுவாக பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து மூன்று தரநிலையாக பிரிக்கலாம்.

படிக்க :
♦ கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா || ஃபரூக் அப்துல்லா
♦ கொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா

முதல் வகை : இவர்களால் தங்களது பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை அடைய எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய முடியும். பணம் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால், தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அது தான் இவர்களது ஆசை. க்ரீமி லேயரின் முதல் தட்டு இவர்கள். இவர்களுக்கு நீட் போன்ற பரீட்சை இருப்பது சாதகம் போன்று தோன்றினாலும் நீட் இல்லாமல் போனாலும் கூட இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

இரண்டாவது வகை : இவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க என்ன செலவு வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். அதற்காக தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை இழக்கத்துணிவார்கள். ஒரு சொத்தை விற்றாவது படிக்க வைப்பார்கள். இவர்களது பிள்ளைகளும் எளிதில் அனைத்து வகை கல்வி சார்ந்த வசதிகளை பெற்று விடும். இவர்கள் மேல்தட்டில் க்ரீமி லேயருக்கு அடுத்த வகையினர் நிச்சயம் இவர்கள் நீட்டினால் பாதிப்புக்குள்ளாகும் படிநிலையில் வருவர்.

மூன்றாவது வகை : மிடில் க்ளாஸ் எனப்படும் சமுதாயம் இவர்களுக்கு கல்விக்கு ஒதுக்க தனியே பெரும் சொத்தோ செல்வமோ இருக்காது. ஆனாலும் இவர்கள் பிள்ளை நன்றாக படித்தால் அதற்காக கடன் வாங்கியாவது படிக்க வைப்பார்கள். இவர்களால் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு தொகையை சீராக ஒதுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைத்தோ அல்லது வங்கிகளில் வட்டிக்கு கடன் வாங்கி கல்விக்கு செலவு செய்வார்கள் நில்லுங்கள் இவர்களோடு கதை முடிந்து விடுவதில்லை.

நான்காவது படிநிலையில் ஒரு பெரும் கூட்டமே நமது நாட்டில் இருக்கிறது. இவர்களுக்கு கல்வி என்பது இலவசமாக கிடைத்தால் மட்டுமே உண்டு. அவர்களது சொந்த ஊரில் கிடைத்தாக வேண்டும். மேலும், கல்வியால் ஏற்படும் எந்த பொருள் செலவையும் இவர்களால் தாங்க இயலாது. கடன் யாரும் கொடுக்க மாட்டார்கள். வங்கிகள் இவர்களை மதிக்காது. இவர்களிடம் அடமானம் வைக்கவும் எதுவும் இருக்காது. இவர்கள் தான் நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள்.

இப்போது சொல்லுங்கள் நீட் என்பது நான் கூறிய இந்த படிநிலையில் யாரை பாதிக்கிறது என்று? பலரும் நான்காம் படிநிலை என்று கூறுவோம். ஆனால், கூர்ந்து நோக்கினால் தெரியும்.

நீட் என்பது முதல் தரத்தை தவிர மீதம் உள்ள மூன்று படிநிலைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு பரீட்சை. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் – மிடில் க்ளாஸ் சமுதாயம் தான். இரண்டாம் தர மக்கள் தங்களிடம் உள்ள பொருளை சொத்தை வித்தாவது கல்வியை அடைவார்கள்

நான்காம் தரத்தில் உள்ள மக்களுக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கே பிரச்சனை எனும் போது நீட் பற்றி பெரிய கவலை எல்லாம் இருக்காது. ஆனால் மூன்றாம் படிநிலையான மிடில் க்ளாஸ் மக்கள் தான். நீட் வந்ததில் இருந்து பெரும் பிரச்சினைக்கு உள்ளானவர்கள்.

சரி.. இதற்கு முன்பு இருந்த சமச்சீர் கல்வி முறை மற்றும் அதன் மூலம் மருத்துவர்கள் தேர்வான முறை எப்படி இருந்தது? அந்த முறையில் நான்கு தரத்தில் உள்ள மக்களின் பிள்ளைகளும் ஒரே சிலபஸ் பயின்றார்கள். அவர்கள் பயின்ற பள்ளிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்.

ஆனால், பயின்ற புத்தகங்கள் ஒன்று. அவர்கள் வாழும் இடங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஒருவர் சென்னையில் இருக்கலாம். மற்றொருவர் சிவகங்கை ; இன்னுமொருவர் கொடைக்கானல் அருகே உள்ள ஏதோ ஒரு மலைக்கிராமமாக கூட இருக்கலாம். ஆனால், அனைவரும் பனிரெண்டாம் வகுப்பு பயில அவர்களது ஊரிலேயே சமமான வாய்ப்புகள் கிடைத்தன.

பனிரெண்டாம் வகுப்பு அவர்கள் இடத்திலேயே பரீட்சை எழுதுவார்கள். பரீட்சை எழுதவென தனியே மெனக்கெட்டு எங்கும் செல்லத்தேவையில்லை. அவர்கள் ஊரிலேயே தேர்வு சென்டர் இருக்கும். பெரும்பாலும் அவர்களது பள்ளியிலேயே தேர்வு நடக்கும். தேர்வு முடிவுகள் வரும். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண் கொண்டு அவர்கள் மருத்துவராவது முடிவாகும்.

ஆனால், நீட் புகுத்தப்பட்ட பின் நிலைமை என்ன ? நீட் எனும் பரீட்சை என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தின் மூலம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சி.பி.எஸ்.சி. சிலபசில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட மீண்டும் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஸ்பெசல் கோச்சிங் சென்டரில் படித்தால் தான் நீட்டை க்ராக் செய்ய இயலும் என்ற நிலை இருக்கிறது. பிறகு என்.சி.இ.ஆர்.டி. சிலபசின் தேவை என்ன இருக்கிறது?

சரி.. என்.சி.இ.ஆர்.டி சிலபசில் பரீட்சை கேள்விகள் எடுக்கப்படுகின்றன என்றால், அதுதான் உலகிலேயே தலை சிறந்த பாடத்திட்ட முறையா என்றால் அதுவும் இல்லை. காரணம் அந்த சிலபசில் படித்த மாணவர்களால் கூட நேரே கோச்சிங் இல்லாமல் சிவில் சர்வீஸ் / பேங்கிங் ; ஏன் நமது டி.என்.பி.எஸ்.சி. வைக்கும் குரூப் 2 , 4 தேர்வுகளை சந்திக்க இயலாது எனும் போது இந்த நீட் தேர்வின் நோக்கம் தான் என்ன? என்.சி.இ.ஆர்.டி. சிலபசின் அவசியம் தான் என்ன?

சரி.. படிநிலையில் முதல் நிலையில் இருப்போர். தங்கள் பிள்ளைகளை ஒரு வருடமோ இரண்டு வருடமோ நீட் கோச்சிங் செய்ய வைக்க இயலும் அடுத்த நிலையில் உள்ள மக்கள் கூட சொத்தை வித்தாவது படிக்க வைக்க இயலும். மூன்று மற்றும் நான்காவது நிலை மக்களை யோசித்து பாருங்கள். இவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால், இவர்கள் நீட் கோச்சிங் மற்றும் இரண்டு வருடம் படிக்க வைப்பது பற்றி யோசிக்க முடியுமா?

மேலும், நீட் பரீட்சை என்பது அந்த மாணவன் எங்கு பயின்றானோ அங்கு நடப்பதில்லை. ஏதோ ஒரு இடத்தில்.. ஒரு நகரத்தில் பரீட்சை நடக்கும். இந்த பரீட்சை எழுத சென்றுவர தேவையான வசதிகள் மற்றும் பணம் கூட இல்லாத நான்காவது படிநிலை மக்களை யோசித்து பார்த்ததுண்டா?

அடுத்து ரிசல்ட் வருகிறது. பெர்சண்டைல்.. குவாலிஃபிகேசன்.. என்று ஒரு குழப்பு குழப்புவார்கள் பாருங்கள். நாம் நன்றாக பரீட்சை எழுதினோமா.. எழுதவில்லையா என்று எழுதியவனுக்கும் தெரியாது.

மேலும் பதினோறாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லை என்று கூறுவதால் பல பெரிய பள்ளிகள் நேரே நீட் பரீட்சைக்கு தங்கள் மாணவர்களை தயார் செய்கிறார்கள். இதுவும் நீட்டுக்கு முன்னர் நாமக்கல் பள்ளிகள் என்ன செய்ததோ அதை ஒத்தே இருக்குமாறு இருக்கிறது.

நீட் தேர்வால் என்ன பயன் ? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஒரு வரை முறை உருவாக்கப்பட்டுள்ளது. மினிமம் க்வாலிஃபிகேசன் என்பது நீட் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

சரி.. அது ஓகே என்று ஏற்றுக்கொண்டால்.. அவர்களுக்கு மட்டும். அதாவது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் அந்த முறையை வைக்க வேண்டியது தானே. ஏற்கனவே வெளிநாடுகளில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு Foriegn medical graduate exam என்ற ஒன்று உள்ளது. அதைப்போல அவர்களுக்கும் அதே பரீட்சை வைத்து ரேங்கிங் போட்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கலாம். எதற்கு அரசுகளின் சீட்டுகளில் கை வைக்க வேண்டும் ?

நீட் வருவதற்கு முன் அரசு மருத்துவ கல்லூரிகள் அனைத்து தரப்பு மக்களும் நுழைவதற்காக தங்கள் வாயிற் கதவுகளை திறந்து வைத்திருந்தன. தற்போது முதல் இரண்டு படிநிலை மக்களே பெரும்பான்மை நுழைந்துள்ளனர். மிடில் க்ளாஸ் மக்களின் நுழைவு குறைந்துள்ளது. நான்காம் நிலை மக்கள் இனி மருத்துவராவது பகற்கனவாகிவிட்டது.

முந்தைய அ.இ.அ.தி.மு.க. அரசானது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% இட ஒதுக்கீட்டின் பலனால் அரசு பள்ளி மாணவர்கள் கடந்த முறை நிறைய பேர் எம்.பி.பி.எஸ். சீட் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.

ஆனாலும், நீட் பரீட்சைக்கு குவாலிஃபை ஆகக்கூட சிறந்த கோச்சிங் பெற வேண்டிய நிலை அனைத்து படிநிலை மக்களுக்கும் வருகிறது. இது அனைவராலும் முடிந்த காரியமில்லை.

சமூக நீதி என்பது அனைவருக்கும் கல்வி என்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும். அதாவது, அவர்கள் வாழும் இடத்திலேயே கல்வி கிடைக்க வேண்டும். அதே இடத்தில் பரீட்சை நடக்க வேண்டும். இது தான் சமூக நீதி. நீட் என்பது சமூக நீதியை கொல்வதாகும்.

படிக்க :
♦ கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

எனது கிளினிக்குக்கு வந்த மிக நன்றாக படிக்கும் மருத்துவராக ஆசைப்படும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளிடம் “நீ மருத்துவர் ஆவாய்” என்று நம்பிக்கை ஊட்டி வந்தேன். இப்போது நான் அவ்வாறு அவளிடம் கூறுவதில்லை. ஆனாலும், அவரது தந்தை ஒவ்வொரு முறை என்னிடம் வரும் போதும் தனது மகளும் மருத்துவர் ஆவார் என்றே கூறுகிறார். இவ்வாறு தான் அந்த நான்காம் படிநிலை இருக்கிறது. தனக்கு என்ன நேருகிறது என்றே அவர்களுக்கு தெரியாது. ஒன்று கூறுகிறேன்.

இன்று முதல் மற்றும் இரண்டாம் படிநிலையில் இருக்கும் மக்களே.. உங்கள் பாட்டனோ பூட்டனோ கண்டிப்பாக மூன்றாம் மற்றும் நான்காம் படிநிலையில் தான் இருந்திருப்பார்கள். நாளை உங்கள் கொள்ளுப்பேரனோ பேத்தியோ அடுத்த இரு பிரிவுகளுக்கு செல்ல மாட்டார்கள் என்ற எந்த உறுதியும் இல்லை. ஆகவே சமூக நீதிக்கு குரல் கொடுப்போம். எப்போதும் நீதி வெல்வதே எக்காலத்திற்கும் நல்லது.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.

முகநூலில் : DrFarook Abdulla

disclaimer