அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
மக்கள் அதிகாரம் (makkalathikaram.com) என்ற இணையதளத்தில், “தடைகளைத் தகர்த்தெறிந்து மீண்டும் வெளிவருகிறது புதிய ஜனநாயகம்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இச்செய்தியை வெளியிட்ட குழுவினர் புதிய ஜனநாயகம் என்ற எமது இதழின் பெயரிலேயே, தாங்களும் ஒரு பத்திரிகையை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளனர்.
பிளவைச் சந்திக்கும் மா-லெ குழுக்கள் ஒரே பெயரில் பத்திரிகையை, அமைப்பை நடத்துவது பொதுவாக உள்ளதுதான். ஆனால், சிறிதும் நேர்மையின்றி பொய்யையும் அவதூறுகளையும் அள்ளிவீசும் இவர்களது நோக்கம் புரட்சிப்பணி அல்ல. மாறாக, சீர்குலைவு நோக்கமே.
அந்த அறிவிப்பில், எமது தோழமை அமைப்புகளின் அரசியல் தலைமை குறித்து பொய்களையும் அவதூறுகளையும் அள்ளிவீசியிருக்கின்றனர். இது குறித்து உண்மையை அறிந்துகொள்ள, “வலது திசைவிலகலிலிருந்து கட்சியை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியான அறிக்கையை வாசகர்கள் படித்துக்கொள்ள வேண்டுகிறோம்.
அடுத்ததாக, எமது இதழின் ஆசிரியர் சண்முகராசு, புதிய ஜனநாயகம் பத்திரிகையை கைப்பற்றிக் கொண்டதாகவும் அவரை ஆசிரியர் குழுவிலிருந்து நீக்குவதாகவும் அறிவித்துள்ளனர். முதலாவது கூற்று நகைச்சுவை. இரண்டாவது, எமது ஆசிரியரை நீக்குவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எமது ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தலைமறைவானார். செப்டம்பர் 30 வரை சகஜமாக எல்லா நிர்வாக வேலைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்த அவரது திடீர் தலைமறைவு, ஆசிரியர் குழு மற்றும் தோழமை அமைப்புகளுக்குமே அதிர்ச்சியான விசயம்தான். இதனால் ஆசிரியர் குழு நிலைகுலைந்து போனது.
கடந்த 2020 பிப்ரவரி 24-அன்று பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டு, புதிய ஜனநாயகம் தோழமை அமைப்புகளின், அரசியல்-அமைப்பு தலைமையின் மீது தாம் நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்த அவர், பிளவுவாதியாகவும் சீர்குலைவுவாதியாகவும் மாறினார்.
அதனைத் தொடர்ந்து, சதிக்குற்றச்சாட்டு காரணமாக எமது தோழமை அமைப்புகளிலிருந்து ஒரு கும்பல் வெளியேற்றப்பட்டது. தற்போது அவர்களும் எமது தோழமை அமைப்புகளின் பெயர்களை – மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் – பயன்படுத்தி அமைப்புகளை நடத்துகின்றனர்.
எமது ஆசிரியர் குழுவிலிருந்தும் அதன் அரசியலிருந்துமே துண்டித்துக் கொண்டு ஓடிப்போன நபரானவர், தற்போது “இடதுசாரி அரசியல் விமர்சகர்” என்ற பெயரில், சமூக ஊடகங்களில் அவ்வப்போது பேட்டி கொடுத்துவருகிறார். அந்நபருடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டுள்ள இக்கும்பல்தான் புதிய ஜனநாயகம் பெயரில் பத்திரிகையொன்றை தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவ்வமைப்பில் உள்ள பிரபலமானவர்கள் தி.மு.க.வுடன் கூடிக் குலாவுவதற்காகவும் ஓட்டுப் பொறுக்கி அரசியலில் சங்கமிப்பதற்காகவும் தமிழக புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் மத்தியில், நக்சல்பாரி பாரம்பரியம் கொண்ட எமது தோழமை அமைப்புகளுக்கு உள்ள செல்வாக்கை கேடாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
000
“எதிரிகள் யார், நண்பர்கள் யார், நட்பு மற்றும் பகை முரண்பாடு குறித்த வறட்டுப்பார்வையுடன் பல கட்டுரைகளை எழுதி புதிய ஜனநாயகம் இதழுக்கு இழிவைத் தேடித்தந்து வருகின்றனர்” என்று தங்களது செய்தியில் எம்மைப் பற்றிப் பழிதூற்றி இருக்கின்றனர்.
துணிவிருந்தால், எமது பத்திரிகை எந்த விசயம் குறித்து ‘வறட்டுபார்வை’யுடன் எழுதியுள்ளது என்று கோடிட்டுக் காட்டியிருக்கலாம். அவ்வாறு சுட்டிக்காட்டியிருப்பின் அவர்களுக்கும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்திற்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்பது அம்பலமாகியிருக்கும்.
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், “வாக்களி, வாக்களி” என பிரச்சாரம் செய்த இவர்கள் மா-லெ அமைப்பின் “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அடிப்படை நிலைப்பாட்டையே துறந்தோடியவர்கள். பா.ஜ.க.வை எதிர்ப்பது என்ற பெயரில், தி.மு.க.வின் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத போக்கைப் பற்றி கள்ளமௌனம் சாதிப்பவர்கள்.
இத்தகையைவர்கள் தி.மு.க.வை விமர்சனத்திற்கு உட்பட்டு அணுகுவதையும் பாசிச அபாயத்தை தேர்தல் பாதையில் போய் வீழ்த்தமுடியாது என்று நாம் அறுதியிட்டு எழுதுவதையுமே ‘வறட்டுப்பார்வை’ என்கிறார்கள். புதிய ஜனநாயகத்தின் பெயரை உச்சரிப்பதற்கு கூட இவர்களுக்கு நியாய உரிமையோ, அருகதையோ கிடையாது.
சீர்குலைவு – கலைப்புவாத நோக்கத்துடன், எமது இதழின் பெயரைப் பயன்படுத்தும் கும்பலை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முறியடிப்போம். மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தில் ஊன்றி நிற்கின்ற புதிய ஜனநாயகம் இதழுக்கு, வழக்கம்போல தங்கள் ஆதரவைத் தருமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
புதிய ஜனநாயகம்
ஆசிரியர் குழு