ராஜஸ்தானில் தையல் கடை நடத்திவந்த கண்ணையா லால் என்பவரை, கடந்த ஜூன் 28 அன்று இசுலாமிய இளைஞர்களான முகமது ரியாஸ் அட்டாரி மற்றும் கௌஸ் முகம்மது இருவரும் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர்; முகமது நபியை தவறாகப் பேசிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் கண்ணையா லால் போட்ட பதிவுக்கு பழிவாங்கும் விதமாகவே அவரை கொலை செய்தோம் என அவர்கள் இருவரும் வீடியோ வெளியிட்டனர். அதில் நரேந்திர மோடிக்கும் நுபுர் சர்மாவுக்கும் கொலைமிரட்டல் விடுத்திருந்தனர்.

இக்கொலையாளிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள தவாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ. செய்தி வெளியிட்டது. பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன சிங் ரத்தோர், “காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தான் தாலிபான்  மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. இசுலாமியர்களை காங்கிரஸ் தொடர்ந்து சமாதானப்படுத்தி வருவதால் ஜிகாதிகள் இந்துக்களைக் கொலை செய்வதற்கும், பிரதமருக்கு மிரட்டல் விடுவதற்கும் துணிந்துவிட்டார்கள்” என்று இச்சம்பவம் பற்றிக் கூறினார்.

இந்துமதவெறி அமைப்புகள் பலவும் முசுலீம் எதிர்ப்பு கலவரத்திற்கு ஆயத்தமாகின. கண்ணையா லாலின் ஊர்வலத்தை நூற்றுக்கணக்கானோர் அணிதிரள நடத்தின இந்துத்துவ அமைப்புகள். இந்நிலையில், ஜூலை 1 அன்று வெளியான இந்தியா டுடே பத்திரிகையின் சிறப்புப் புலனாய்வு செய்தி கொலையாளிகள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதை அம்பலப்படுத்தியது.


படிக்க : கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில், காவியும் திராவிடமாடலும் கூட்டணி !


ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு செயலாளரான இர்ஷத் செயின் வாலாவிடம் இந்தியா டுடே நடத்திய விசாரணையில் இவ்விசயம் அம்பலமானது. அவ்விசாரணையில், பா.ஜ.க.வின் கட்சி ஊழியரான முகம்மது தாஹிர் உடன் முக்கியக் குற்றவாளியான ரியாஸ் அட்டாரி உதய்பூரில் நடக்கும் பா.ஜ.க-வின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று இர்ஷத் செயின் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பவன் கேரா, கொலையாளி ரியாஸ் ராஜஸ்தான் பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப் சந்த் கட்டாரியா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பார்; பா.ஜ.க கூட்டங்களில் ரியாஸ் கலந்து கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியிருக்கின்றன என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

ரியாஸ் பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கின்ற புகைப்படங்கள் அம்பலமானதை அடுத்து பா.ஜ.க.வினர் சுதாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு தலைவரான முகம்மது சாதிக் கான், “யார் வேண்டுமானாலும் எந்த தலைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அவர் பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கட்டாரியாவோ, “நான் நிச்சயமாக நிகழ்ச்சிக்குச் சென்றிருப்பேன், என்னுடன் புகைப்படத்தில் யார் நிற்க வேண்டும் என்பது என் கையிலோ அல்லது வேறு யாருடைய கையிலோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.

உண்மை என்னவென்றால் வெளிவந்த புகைப்படங்கள் எதுவும் கொலையாளி ரியாஸ் அட்டாரியின் முகநூல் பதிவிலிருந்து எடுக்கப்படவில்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் ரியாஸ் இருக்கின்ற புகைப்படத்தை பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர். வெளிவந்த புகைப்படங்கள் பா.ஜ.க தலைவர்களின் முகநூல் பக்கத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு செயலாளரான இர்ஷத் செயின்வாலா நவம்பர் 30 2018 அன்று தனது முகநூல் பதிவில் ரியாஸூடன் இருக்கின்ற புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார். பா.ஜ.க ஊழியரான முகம்மது தாஹிரும் பிப்ரவரி 3/2019, அக்டோபர் 27/2019, நவம்பர் 28/2019 மற்றும் ஆகஸ்ட் 10/2021 ஆகிய தேதிகளில் தனது முகநூல் பதிவில் ரியாஸூடன் இருக்கின்ற புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார்.  பிப்ரவரி 3/2019 அன்று தாஹிர் தனது பதிவில், இர்ஷத், ரியாஸ் மற்றும் பலர் இருக்கிற புகைப்படத்துடன் ரியாஸ் கட்சி ஊழியர் என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, கட்டாரியாவிற்கு ரியாஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார், ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ்.

***

உதய்பூர் கொலையாளிகள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி அம்பலமாகி நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கும் சூழலில், காஷ்மீரிலும் இதேபோல மற்றொரு சம்பவம் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்ட மக்கள் கடந்த ஜூலை 3 அன்று இரண்டு லக்ஷர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளான தலிப் உசேன் ஷா மற்றும் ஃபைசல் அகமது ஆகியோரை ஆயுதங்களுடன் பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவன் என்று காஷ்மீர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி தலிப் உசேன் ராஜௌரி மாவட்ட பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சமூக ஊடகப் பொறுப்பாளர் என்பது விசாரணையில் அம்பலமானது. தலிப் உசேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனின் மூலம், அவனது முகநூல் கணக்கில் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களுடன் தலீப் இருக்கும் புகைப்படங்கள் அம்பலமானது.

கடந்த மே 9 2022 அன்று ராஜௌரி மாவட்ட சமூக ஊடகப் பொறுப்பாளராக தலீப் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான ஆணை ஜம்மு-காஷ்மீர் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு அமைப்பால் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆணையின் நகலானது மூத்த பா.ஜ.க. தலைவர் அசோக் கவுல் மற்றும் சிறுபான்மை பிரிவின் தேசிய தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இச்செய்தி அம்பலமானவுடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்த்ததால் அந்த நபரின் பின்னணியை சரிபார்க்க முடியவில்லை என்றும், தலீப் வெறும் 18 நாட்களில் தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்றும் பா.ஜ.க சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் ஆ.எஸ்.பதானியா என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில், “இந்த கைதால் பா.ஜ.க உயர்மட்ட தலைவர்களைக் கொல்லும் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது” என்று சமாளித்தார்.

2017-ஆம் ஆண்டிலிருந்து தலீப் பா.ஜ.க-வில் இருப்பதாக அவனது குடும்பத்தினரும் கூறியிருக்கின்றனர். ஆன்லைன் உறுப்பினராகும்போது ஒருவரின் பின்னணியை சோதிக்க முடியாது என்பது யதார்த்த உண்மைதான் என்றாலும், பொறுப்பு கொடுக்கும்போது அவரது பின்னணி பற்றி ஏன் உறுதிப்படுத்தவில்லை? தேசிய தலைவர்கள்வரை தலீப் நியமனத்தை அங்கீகரித்திருப்பது எப்படி? மத்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் பா.ஜ.கவுக்கு அவரின் பின்னணி தெரியாது என்பதைக் குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.


படிக்க : 5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!


“இசுலாமியர்கள் சேர்ந்து இந்து ஒருவரை படுகொலை செய்துவிட்டார்கள்; அவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள்; இந்தியாவில் இந்துக்களைக் கொல்வதற்காக முசுலீம்கள் ஜிகாதிகளாக மாறியுள்ளார்கள்” போன்ற கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் நாடுமுழுக்க இசுலாமியர்களுக்கு எதிரான ஒரு பாசிச வேட்டையை நடத்த வேண்டும் என்ற திட்டத்தோடுதான் உதய்பூர் கண்ணையா படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு, ரத யாத்திரை, ராம ஜென்ம பூமி, மாலேகான் குண்டுவெடிப்பு என அனைத்தும் இசுலாமியர்களைப் படுகொலை செய்வதற்காக இந்துமதவெறிக் கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதுதான். அதன் தொடர்ச்சியே இதுவும். ஆனால் தற்போது அவர்கள் கையும் களவுமாக அம்பலப்பட்டுப் போய்விட்டார்கள்.

முசுலீம்களுக்கு எதிராகப் பொய்யையும் புளுகையும் வாரிவீசி மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பயங்கரவாத நடவடிக்கையை சாதாரண இந்து மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட இதுவொரு வாய்ப்பாகும்.


அப்பு