ஒரு RTI கேள்விக்கு பதில்வர 24 ஆண்டுகள் காத்திரு!

கவல் ஆணையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பாததால் சில மாநில தகவல் ஆணையங்கள் (State Information Commissions) முற்றிலுமாக செயலிழந்துள்ளன. சில ஆணையங்கள் தலைமை தகவல் ஆணையர் இல்லாமலோ குறைவான சக்திகளைக் கொண்டோ இயங்கி வருகின்றன. இதனால், கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 59,000 விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது சடார்க் நாக்ரிக் சங்கதான் (Satark Nagrik Sangathan) என்ற அரசு சாரா அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இயற்றப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நாடுமுழுவதும் உள்ள 29 தகவல் ஆணையங்களின் நிலைமைகளும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மணிப்பூர், தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தகவல் ஆணையர்கள் இல்லாமலேயே இயங்கி வருகின்றன. ஜார்க்கண்ட் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் மாநில தகவல் ஆணையர்கள் இல்லாமல் முற்றிலுமாக செயலிழந்துள்ளன. கடந்த ஆண்டும் இந்த இரண்டு மாநிலங்களில் இதே நிலையே நீடித்தது.

படிக்க : குஜராத் : மோடி ஆட்சியில் ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளரைக் கொன்ற பாஜக எம்பி !

பணியிடங்கள் காலியாக இருப்பதால் இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மத்திய தகவல் ஆணையத்திற்கும் கூட, மூன்று ஆணையர்கள் நீண்ட காலமாக நியமிக்கப்படவில்லை. மத்திய தகவல் ஆணையத்தில் மட்டும் 26,800 விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உணர்வதற்கு மகாராஷ்டிர மாநிலத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மகாராஷ்டிர மாநில தகவல் ஆணையம், தலைமை தகவல் ஆணையர் உட்பட வெறும் ஐந்து ஆணையர்களைக் கொண்டே இயங்கி வருகிறது. இக்காரணத்தால் மார்ச் 31, 2019 நிலவரப்படி கிட்டத்தட்ட 46,000 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. அதுவே மே 2021 நிலவரப்படி கிட்டத்தட்ட 75,000-ஆக அதிகரித்தது. ஜூன் 2022 நிலவரப்படி, கிட்டத்தட்ட 1,00,000 விண்ணப்பங்கள் – நிலுவையில் போடப்பட்ட விண்ணப்பங்கள் – மலைபோல் குவிந்துள்ளன.

மொத்தமாக 26 தகவல் ஆணையங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டில் 2,55,602 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. ஆனால் ஜூன் 30, 2022 நிலவரப்படி இது 3,14,323-ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அறிக்கை படி, 12 ஆணையங்கள் விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலான காலஅவகாசத்தை எடுத்துக் கொள்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால், தற்போதைய நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டால் மேற்கு வங்க மாநில தகவல் ஆணையம் ஒரு விண்ணப்பத்திற்கு பதிலளிக்க 24 ஆண்டு மற்றும் 3 மாதம் காலஅவகாசத்தை எடுத்துக் கொள்கிறது. அதாவது இன்று நீங்கள் கேள்வியெழுப்பினால் 24 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் கழித்தே தங்களுக்கு பதில் வந்துசேரும் – வராமலும் போகலாம்.

அதேபோல, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மாநில தகவல் ஆணையங்கள் 5 ஆண்டுகளுக்கு மேலான காலஅவகாசத்தையும், பீகார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலான காலஅவகாசத்தையும் எடுத்துக்கொள்கின்றன.

RTI சட்டத்தின் படி, பொது தகவல் அலுவலர்கள் (Public Information Officers) தகவல்களை அளிக்க காலதாமதப்படுத்தினால் அவர்களுக்கு தகவல் ஆணையர் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கலாம். ஆனால் 95 சதவித காலதாமதங்களுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படுவதில்லை.

000

அரசு நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய வெளிப்படைத்தன்மையை இந்த RTI சட்டம் வழங்கும் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்படி இல்லாமல் கடந்த ஆண்டுகளில் பல்வேறு தகவல்கள் மறுக்கப்பட்டு வந்தன. தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் பலர் காவி குண்டர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்த ஆண்டு குஜராத்தில் RTI-யில் கேள்வி கேட்டதற்கான 10 பேருக்கு கேள்வி கேட்கவே கூடாது என்று வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014 -2019 வரை 80 தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பெயரளவிற்கு வழங்கப்படும் ஜனநாயகத்தைக் கூட வழங்க மறுக்கிறது இந்த மோடி அரசு!


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க