சோசலிசம்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
பாட்டாளி வர்க்கத்தின் கலங்கரை விளக்கம்!! – மீள்பதிவு

து நவம்பர் புரட்சி நூற்றாண்டின் துவக்கம். 1917, நவம்பர் 7 – உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசு அமைந்த நாள்.

இது கலாச்சாரப் புரட்சியின் ஐம்பதாண்டு நிறைவு. மே, 1966-இல் தான் சோசலிசத்தை உள்ளிருந்தே கவிழ்க்கும் முதலாளித்துவ மீட்புக்கு எதிரான சீன கலாச்சாரப் புரட்சி தொடங்கியது.

இது நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாம் ஆண்டு. மே, 1967-இல்தான், திருத்தல்வாத கம்யூனிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சரண்டைவுப் பாதைக்கு எதிரான போர்க்குரலாக நக்சல்பாரி உழவர் எழுச்சி தொடங்கியது.

இது கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளின் 200-வது ஆண்டு தொடக்கம். முதலாளித்துவத்தின் மரணத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் முன்னறிவித்த பேராசான் மார்க்ஸின் பிறந்த நாள் மே 5, 1818.

ஐம்பதாம் ஆண்டு, நூறாம் ஆண்டு போன்றவை ஒருங்கே அமையப் பெறுவது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வுகளும், அவற்றுக்கு இடையிலான உறவும் தற்செயலானவைகள் அல்ல. அவ்வகையில் இந்நான்கு நிகழ்வுகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை.

1917 ரசிய சோசலிசப் புரட்சி என்பது முதலாளித்துவம் முயன்றாலும் மறக்கவே முடியாத கெட்ட கனவு. மனித சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாகக் கூறி வந்த முதலாளித்துவ வர்க்கத்தை, அதிகாரத்திலிருந்து அகற்றியது மட்டுமல்ல, அது சமூகத்துக்குத் தேவைப்படாத வர்க்கம் என்பதையும் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல் என்பதையும் நடைமுறையில் நிரூபித்தார் நவம்பர் புரட்சியின் நாயகன் தோழர் லெனின்.

இன்று சோசலிசம் தோற்றுவிட்டதாக முதலாளித்துவம் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது. இருப்பினும் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு – என ஒவ்வொரு துறையிலும் சோசலிசம் நிகழ்த்திய சாதனைகள் தொல்பொருட்களாகப் புதைந்து விடவில்லை. அவை பல்வேறு வடிவங்களில் உலகெங்குமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளாக உயிருடன் உலவுகின்றன.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

தொழிலாளிகளுக்கான பணி உத்திரவாதம், ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, பெண்களுக்கான உரிமைகள் – என சோசலிச ரசியா முன்னோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் முதலாளித்துவத்தின் மீது இடியென இறங்கியது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் பெற்றிருக்கும் பல உரிமைகள், அன்று தத்தம் நாடுகளில் சோசலிசப் புரட்சியைத் தடுக்கும் பொருட்டு முதலாளித்துவம் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகளே!

சோசலிசத்தின் தோல்வி குறித்து பெருங்கூச்சல் போடும் முதலாளி வர்க்கம், அதனைக் காட்டிலும் நெடிய வரலாறு கொண்ட தன்னுடைய தோல்வியைப் பேசுவதில்லை. சுதந்திரச் சந்தையின் இடத்தை ஏகபோகம் கைப்பற்றிக் கொண்டிருப்பதையும், ஜனநாயகம் மெல்ல மெல்ல பாசிசமாக உருமாறி வருவதையும், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் தவிப்பதையும், முதலாளித்துவத்தின் கருவறையிலேயே கிளர்ந்தெழும் மக்களின் போராட்டங்களையும் அது தனது தோல்வியாக கூறிக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்குள் சோசலிசம் தோற்றுவிட்டதாக தீர்ப்பு கூறுகிறது. மனித குலத்தின் வரலாற்றுடன் ஒப்பிடும்போது நூறு ஆண்டுகள் என்பது ஒரு நாளின் ஒரு மணித்துளி. பிறந்த முதல் ஐம்பது ஆண்டுகளில் வெற்றி மேல் வெற்றி ஈட்டிய சோசலிசம், பிந்தைய ஆண்டுகளில் சரிவையும் தோல்வியையும் சந்தித்தது உண்மைதான்.

ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை மனித உடலில் சோதித்துப் பார்த்து, அதன் விளைவுகள் – பக்க விளைவுகள் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்வதற்கே அறிவியலுக்கு, ஒரு மனிதனின் ஆயுட்காலமே தேவைப்படுகிறது. சோசலிசம் என்பது சமூக அறிவியல். இது மனித சமூகத்தின் வாழ்நிலை மீதான சோதனை; சிந்தனை மீதான சோதனை. சடப்பொருளின் மீதோ, தன்னிலை உணரவியலாத உயிர்ப்பொருளின் மீதோ நடத்தப்படும் இயற்கை விஞ்ஞான சோதனை அல்ல. சிந்திக்கின்ற மனிதர்கள் மீதான சோதனை. உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழிப்பது மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே சமூகத்தின் நினைவிலிருந்து அகற்றுவதற்கான சோதனை.

உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், சமூகத்தில் பரவியிருக்கும் முதலாளித்துவ வர்க்க சிந்தனை உடனே அகன்று விடுவதில்லை. அது கம்யூனிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் தலையெடுக்கிறது. மக்களுக்கு பதில் சொல்லும் கடமையிலிருந்து தவறிய அதிகாரத்துவப் போக்காக, திறமைக்கு முன்னுரிமையும் சலுகையும் அளித்து அதிகாரத்தில் அமர்த்த வேண்டுமென்றும் ‘’இலக்குதான் முக்கியம்; வழிமுறை முக்கியமல்ல’’ என்றும் கூறுகின்ற முதலாளித்துவ சிந்தனைப் போக்காக அது வெளிப்படுகிறது.

இத்தகைய போக்குகள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குள் தலையெடுக்குமானால், அதற்கு எதிராகப் போராட மக்களைக் களத்தில் இறக்க வேண்டும் – சோசலிச அரசே அமைந்தாலும் வர்க்கப் போராட்டம் தொடரத்தான் செய்யும் என்றார் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் தோழர் மாவோ. சொன்னது மட்டுமல்ல, , சோசலிசத்தின் கீழ் தொழிலாளி வர்க்கம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியின் அறைகூவலாக, ‘’தலைமையகத்தைத் தகர்த்தெறியுங்கள்’’ என்ற அறைகூவலையும் விடுத்தார்.

இருப்பினும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியை முதலாளித்துவப் பாதையாளர்கள் கைப்பற்றிக் கொள்வதை சீனத் தொழிலாளி வர்க்கத்தால் தடுக்கவியலவில்லை. இன்று முதலாளித்துவ மீட்புக்குப் பின்னர் சமூகத்தில் அதிகரித்து வரும் சீரழிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சோசலிசம் குறித்த ஏக்கத்தை சீனமக்களிடம் தோற்றுவித்து வருவதை சீன முதலாளி வர்க்கத்தாலும் தடுக்கவியலவில்லை.

முதலாளித்துவ மீட்புக்கு எதிராக சீனத்தில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய அதே காலத்தில், நாடாளுமன்ற நாற்காலி கம்யூனிஸ்டு இயக்கமாக மாறி விட்ட இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்திலும் ஒரு புரட்சி வெடித்தது. மே, 1967-இல் நக்சல்பரி கிராமத்தில் வெடித்தெழுந்த உழவர் புரட்சி, ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் உருவாக்கத்துக்கு வித்திட்டது. இடது விலகல் காரணமாக இ.பொ.க (மா-லெ) பின்னடைவைச் சந்தித்த போதிலும், இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்று அது விடுத்த அறைகூவல், இன்றைக்கு முன்னிலும் பொருத்தமானதாகியிருக்கிறது. ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். எனினும், அது ஆளும் அருகதை இழந்து தோற்றுவிட்டது. தன்னை அகற்றும் வலிமையை பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால், அது அதிகாரத்தில் நீடிக்கிறது.

உலக முதலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான். முதலாளித்துவத்தின் முடிவை, அதனை ஒழித்துக் கட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை முன்னறிந்து சொன்ன மார்க்சும் மார்க்சியமும் செத்துவிட்டதாக முதலாளித்துவம் பிரச்சாரம் செய்யாத நாளில்லை. மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.

“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்? சோசலிசம் என்பது மனிதனின் உள்ளுணர்விலேயே உறைந்திருக்கிறதா? ஒரு வேளை அது மனித மூளையின் அங்கமாக இருந்தால், அதனை சமாளித்து சுதந்திரச் சந்தையின் ஆதாயங்களை மனிதர்களுக்குப் புரிய வைப்பது எப்படி?” என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க முதலாளித்துவம். மூளையை அறுத்தெறிவதன் மூலம் சோசலிசக் கருத்தை வெல்ல முடியுமா என்று சிந்திக்கிறது.

சோசலிசம் பெறவிருக்கும் வெற்றியை இதைக்காட்டிலும் தெளிவாக யாரேனும் கூற இயலுமா? இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் மனித குலத்தின் சிந்தனையில் உயிர்வாழும் மார்க்ஸை அகற்ற முடியாத முதலாளித்துவத்தின் தோல்வியைத்தான் மேலும் தெளிவாக யாரேனும் விளக்க இயலுமா?

புதிய ஜனநாயகம், நவம்பர் 2016

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க