நமது ஆசானும் தலைவருமாகிய லெனினை நினைவிலேந்துவீர்; அவரை நேசிப்பீர்; அவரை கற்றறிவீர்.

லெனின் நமக்கு எப்படி போதித்தாரோ, அப்படியே, உள்நாட்டு – வெளிநாட்டு எதிர்களை எதிர்த்துப் போராடி, அவர்களைத் தோற்கடிப்பீர்.

லெனின் நமக்கு எப்படி போதித்தாரோ, அப்படியே, புதியதொரு வாழ்வை, புதிய வாழ்க்கை முறைகளை, புதிய கலாச்சாரத்தைக் கட்டியமைப்பீர்.

சிறிய காரியங்களைச் செய்ய ஒருபோதும் மறுக்காதீர்; ஏனெனில், சிறிய காரியங்களிலிருந்தே பெரிய காரியங்கள் கட்டியமைக்கப்படுகின்றன – இது லெனினுடைய முக்கிய ஆணைகளில் ஒன்று.

– ஸ்டாலின்

ரஷ்யப் பொதுவுடைமைக் கட்சியின் அமைப்பாளரும் தலைவருமான லெனின்

மார்க்சியவாதிகள் இரு பிரிவினராக உள்ளனர். இரு பிரிவினருமே மார்க்சியக் கொடியின் கீழ்தான் வேலை செய்கின்றனர். இரு பிரிவினரும் தம்மையே “உண்மையான” மார்க்சியவாதிகள் என்று கருதிக் கொள்கின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் எந்த விதத்திலும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. மேலும், அவர்களுக்கிடையில் மலைக்கும் மடுவுக்குமான பெருத்த வேறுபாடு உள்ளது. ஏனெனில், அவர்களது வேலைமுறைகள் ஒன்றுக் கொன்று நேரெதிரானவையாக உள்ளன.

முதல் பிரிவினர், வெளிப் பார்வைக்கு மார்க்சியத்தை ஏற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்; இவர்கள் மார்க்சியத்தின் பெயரில் ஒப்புக்கு சூளுரைப்பவர்களாக உள்ளனர். மார்க்சியத்தின் சாரத்தை கிரகித்துக் கொள்ள இயலாதவர்களாக அல்லது விருப்பமற்றவர்களாக அவர்கள் உள்ளனர்; மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த இயலாதவர்களாக அல்லது விருப்பமற்றவர்களாக அவர்கள் உள்ளனர். இதனால், மார்க்சியத்தின் உயிரோட்டமான – புரட்சிகரமான கோட்பாடுகளை, உயிரோட்டமற்ற – பொருளற்ற சூத்திரங்களாக அவர்கள் மாற்றி விடுகின்றனர்.

இவர்கள், தமது நடவடிக்கைக்ளுக்கு நடைமுறையை, நடைமுறை அனுபவத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொள்வதில்லை; மார்க்சின் மேற்கோள்களையே அடிப்படையாகக் கொள்கின்றனர். இவர்கள் உயிரோட்டமுள்ள யதார்த்த நிலையைப் பகுத்தாய்ந்து, தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும் வந்தடைவதில்லை; ஒப்புவமைகளிலிருந்தும் இணையான வரலாற்று நிகம்ச்சிகளிலிருந்தும் தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும் வந்தடைகின்றனர். இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான முரண்பாடே இவர்களைப் பீடித்துள்ள தலையாய நோயாகும். இதனால்தான் இவர்கள் என்றென்றும் விரக்தியுறுகின்றனர்.

விதிக்கு எதிராக அடிக்கடி நொந்து கொள்கின்றனர். விதியோ அவர்களை மீண்டும் மீண்டும் கைவிட்டு விடுகிறது; “ஏமாற்றி” விடுகிறது. ரஷ்யாவில் இவர்கள் பெயர் மென்ஷ்விக்குகள்; ஐரோப்பாவில் இவர்கள் பெயர் சந்தர்ப்பவாதிகள். இவர்களைப் பற்றி தோழர் டைஷ்கா (ஜோகி செஸ்), இலண்டனில் நடந்த கட்சியின் பேராயத்தில் மிகப் பொருத்தமாகவே வர்ணித்தார். இவர்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பற்றி நிற்பதற்கு பதிலாக, அதன் மீது படுத்துத் தூங்குகின்றனர் என்று அவர் வர்ணித்தார்.

இரண்டாவது பிரிவினர், இதற்கு நேர்மாறானவர்கள். இவர்களுக்குப் பிரச்சினையின் குவிமையம், வெளிப்பார்வைக்கு மார்க்சியத்தை ஏற்பதல்ல; மார்க்சியத்தை மெய்யாக்குவதும், அதை நடைமுறையில் பிரயோகிப்பதுமே இவர்களுக்கு குவிமையமானப் பிரச்சினையாக உள்ளது.

இவர்கள் தமது தலையாய கவனத்தை எதில் குவிக்கிறார்கள் என்றால், நிலைமைக்கு சாலப் பொருந்தும் வகையில் மார்க்சியத்தை நனவாக்கும் வழிவகைகளைத் தீர்மானிப்பதிலும், நிலைமை மாறுகையில் இந்த வழிவகைகளை மாற்றிக் கொள்வதிலும்தான். இவர்கள் தமக்கான வழிகாட்டுதல்களையும் திசைவழிகளையும், ஒப்புவமைகளிலிருந்தும் இணையான வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்தும் அல்லாமல் தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கற்றாய்வதிலிருந்துதான் வந்தடைகிறார்கள்.

மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள். நடைமுறை அனுபவத்தைக் கொண்டு தமது ஒவ்வொரு அடியையும் சோதிக்கிறார்கள்; தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்; இவற்றைக் கொண்டு, புதியதொரு வாழ்வை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இவர்களின் நடவடிக்கைகளில், சொல்லுக்கும் செயலுக்குமிடையில் முரண்பாடு ஏன் இல்லை என்பதற்கான உண்மைக் காரணத்தை இதுதான் விளக்குகிறது; இவர்களிடம், மார்க்சின் போதனைகள், ஏன் உயிரோட்டத்துடனும் புரட்சிகரமான ஆற்றலுடனும் இருக்கின்றன என்பதற்கான உண்மையான காரணத்தை இதுதான் விளக்குகிறது.

மார்க்சியவாதிகள், உலகைப் பற்றி கருத்துரைப்பதுடன் மனநிறைவு அடைந்து ஓய்ந்துவிட முடியாது; மேலும் முன்னேறிச் சென்று உலகை மாற்றியமைத்தாக வேண்டும். மார்க்சினுடைய இந்தக் கூற்று, இந்தப் பிரிவினருக்குத்தான் முழுமையாகப் பொருந்தக் கூடியதாகும். இந்தப் பிரிவினரின் பெயர்தான் போல்ஷ்விக்குகள், பொதுவுடைமையாளர்கள்.

இந்தப் பிரிவினரின் அமைப்பாளர்தான், தலைவர்தான் லெனின்.

(ஜோசப் ஸ்டாலின் எழுதிய “லெனின்” என்ற நூலிலிருந்து…)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க