கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி குஜராத்தின் மோர்பிநகர் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ளனர். இதில் ஒன்று முதல் பத்து வயதிற்குட்பட்ட 33 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
143 ஆண்டு பழமையான, 230 மீட்டர் நீளமுள்ள, இந்த தொங்கு பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ஒரு தனியார் ஒப்பந்ததாரரிடம் அதைப் புதுப்பிக்கும் பணி வழங்கப்பட்டது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அந்நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், திட்டமிட்டதற்கு முன்னதாகவே பாலம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியில் குஜராத்தி புத்தாண்டன்று பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் மிகவும் வருத்தமுற்றதாகக் கூறும் பிரதமர் மோடி, சூறாவளியாய் சுழன்று தேர்தல் பிரச்சாரங்களிலும் திட்டங்களைத் தொடங்கி வைப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். குஜராத்தில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ஆடம்பரமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மோடியை பிரமோட் செய்யும் வேலையும் சிறப்பாக நடந்தேறி வருகிறது.
படிக்க : குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !
அதற்கேற்ற வகையில் ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. ஆஜ் தக் (Aaj Tak) செய்தித் தொலைக்காட்சியை சேர்ந்த சுதீர் சௌதுரி (Sudhir Chaudhary) என்ற தொகுப்பாளர், பாலம் இடிந்து விழுந்ததற்கு மக்கள்தான் காரணம் என்று வாய் கூசாமல் பேசுகிறார். இதற்கு முன்னதாக இவர் மோடியின் எதிராளிகளை துவம்சம் செய்து, மோடியின் படுமோசமான முடிவுகளுக்கும்கூட சப்பைக்கட்டு கட்டி, மோடியை பிரமோஷன் செய்யும் வேலையை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோர்பிநகர் பாலத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்தைப் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வது அவசியம். ஓரேவா (Oreva) என்ற நிறுவனத்திடம் இந்தப் பணி மோர்பி நகராட்சியால் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் கடிகாரம் மற்றும் பைக்கு தயாரிக்கும் நிறுவனமாகும். எள்ளளவும் பாதுகாப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத அனில் அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டதைப் போலவே, ஓரேவா நிறுவனத்திற்கு இந்த பாலத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஓரேவா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் (Ajanta Manufacturing Private Limited) கையொப்பமிட்ட சமீபத்திய ஒப்பந்தத்தின்படி, பாலத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு, பாதுகாப்பு, டிக்கெட் வழங்குதல், சுத்தம் செய்தல் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தல் உள்ளிட்டவற்றை நிர்வகிப்பதற்கான முழுப் பொறுப்பையும் 15 ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பாலத்தை புனரமைக்க செலவிட்ட தொகையை பயணிகளிடமிருந்து கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும், 2037 வரை இந்த பாலத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.
ஆனால், ஓரேவா நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்திருந்தது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. 2008-ல் இருந்தே ஓரேவா நிறுவனத்தால் இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
ஓரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜெய்சுக் படேல் (Jayasukh Bhai Patel), இந்த பாலத்தை புதுப்பிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ரூ.20 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் 15-20 ஆண்டுகள் வரை எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்த நிறுவனம் வெறும் ரூ.28 லட்சத்தை மட்டுமே செலவழித்துள்ளது என்பதை குஜராத் அரசாங்கமே தற்போது கூறுகிறது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஓரேவா நிறுவன முதலாளியோ நகராட்சி அதிகாரிகளோ யாருமில்லை.
பாலம் இடிந்ததற்கு முழுமுதற் காரணம் அந்த ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல்தான். இதைப் பற்றி மோடி வாய்கூடத் திறக்கவில்லை. இந்த விபத்து நடந்த அடுத்த நாளே பிரதமர் மோடி ஆறுதல் தெரிவிப்பதற்காக மோர்பி மருத்துவமனைக்குச் சென்றார். அவரது மனம் கோணாமல் இருப்பதற்காக மருத்துவமனைக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 2016-ல் கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தபோது பேசிய பிரதமர் மோடி “தேர்தல் நேரத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் மூலம் கடவுள் மக்களுக்கு சேதி அனுப்பியிருக்கிறார். இந்த பாலம் இடிந்து விழுந்ததை போல், மேற்குவங்கமும் நாளை இடிந்து விழும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று பாலம் விபத்தின் மூலம் கடவுள் சேதி அனுப்பியிருக்கிறார்” என்று கூறினார். மேலும், “இது கடவுள் செயல் அல்ல; ஊழலின் விளைவு” என்றும் கூறினார். தற்போது மோர்பிநகர் பாலம் இடிந்து விழுந்துள்ளதற்கு இது பொருந்தாது போலும்!
குஜராத்தின் பாஜக அரசாங்கமும் மோடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். குஜராத் மாடல் அழுகி நாறுகிறது என்பதை இந்த சம்பவம் நமக்குத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது.
பொம்மி