03.11.2022

‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள் மற்றும்
ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்!

கண்டன அறிக்கை !

‘தி வயர்’ இணையதளத்தின் ஆசிரியர்களின் வீடுகளில் டெல்லி போலீஸ் சோதனை நடத்தி லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளார்கள். பாஜக ஐடி விங் பொறுப்பாளர்  அமித் மாளவியா  கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இது நடந்துள்ளது.

பாஜக ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவுடன் வைத்திருந்த தொடர்பு, அதில் அவர் பெற்றிருந்த சிறப்பு சலுகை பற்றியும் அதன் மூலம் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்துகளை நீக்கி வந்தது பற்றியும் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வந்தது தி வயர் இணையதளம்.

இந்த நிலையில் தி வயர் இணையதளத்தின் கருத்துக்கள் தவறானது என மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் பிறகு தி வயர் இணையதளம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. மேலும் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகளை இணைய பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது. தவறான செய்திகளை வழங்கிய தேவேஷ்குமார் என்ற தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் மீதும் புகார் கொடுத்திருந்தது.

படிக்க : மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி

இதை ஏற்றுக்கொள்ளாத அமித் மாளவியா டெல்லி போலீசுத்துறையில் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் 420 (மோசடி), 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்), 120பி (குற்ற சதி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டெல்லி குற்றப் பிரிவு போலீசு, தி வயர் நிறுவனர் – ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா மற்றும் துணை செய்தி ஆசிரியர் ஜான்வி சென் ஆகியோரின் வீடுகள் மற்றும் தி வயர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கையகப்படுத்தி சென்றுள்ளனர்.

தவறான செய்தி வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகும் தி வயர் இணையதளம் மீது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வன்மம் அடங்கவில்லை. ஏனென்றால் தொடர்ச்சியாக மோடி அரசின் தோல்விகள் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பித்தலாட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வரும் ஒரு இணையதளம் என்பதால்தான் இந்த நடவடிக்கை.

அன்றாட நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் பல்வேறு பொய் பித்தலாட்டங்களையும் பரப்பி அது எல்லாம் தவறு என தெரிந்தாலும் எந்த வகையிலும் அதற்காக பகிரங்க மன்னிப்பு கூறியதில்லை. தமிழகத்தில் தஞ்சாவூர் மைக்கேல் பட்டி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பி.ஜே.பி கும்பல் அது மதமாற்றத்தால்தான் தற்கொலை நிகழ்ந்தது என பல்வேறு பொய் செய்திகளையும் பரப்பினார்கள். அது தவறான செய்தி என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகும், ஏதாவது பகிரங்க மன்னிப்பு கேட்டார்களா? இன்று வரை இல்லை.

டெல்லி ஜே.என்.யு-வில் கன்னையாகுமார் போன்ற மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டார்கள் என பொய் செய்தி பரப்பினார்கள்.

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் அதிகமான தொகுதிகளை வெற்றி பெறுவதற்காக இந்து முஸ்லிம் கலவரத்தை திட்டமிட்டு நடத்தினார்கள். அதுவும் போலி செய்தியின் அடிப்படையில்தான்.

இதுபோல, அடுக்கிக்கொண்டே போகலாம் அவ்வளவு கிரிமினல் பித்தலாட்டத்தனங்களை செய்துள்ளார்கள். இந்த பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல். இதற்கெல்லாம் எங்கும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

ஏன் இவர்களின் முன்னோடி கோட்சே காந்தியை சுட்டுக்கொன்றுவிட்டுதான் ஒரு முஸ்லிம் என்பதை கையில் பச்சை குத்திக் கொண்டு பொய் பிரச்சாரத்தில் இறங்கினார்.

பொய் பித்தலாட்டம் கலவரத்தில் கட்சியை வளர்த்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

தி வயர் இணையதள சோதனையின்போது கைப்பற்றப்பட்ட லேப்டாப்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றில் கூட பல்வேறு கபடத்தனங்களை செய்து வயர் இணையதளத்தின் மீதும் ஆசிரியர்களின் மீதும் அடக்குமுறையை தீவிர படுத்துவார்கள்.

இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மக்களின் பிரச்சினைகளை பேசும் சமூக ஊடகங்களை ஒட்டுமொத்தமாக முடக்கும் வேலையை கூட துணிந்து இவர்கள் செய்வார்கள்.

இதைத்தான் இன்றைய ஆளும் வர்க்கமும் அரசு எந்திரமும் விரும்புகிறது. தங்களுடைய இந்துராஷ்டிர கனவுத் திட்டத்திற்கு  இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களும் அதை எதிர்த்து பேசுபவரை ஒடுக்குவதும் அவசியமாக உள்ளதால் இன்னும் மூர்க்கமாக அடக்குமுறையை ஏவுவார்கள்.

ஜனநாயக பாசிச எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி வயர் இணையதளத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவோம். வதந்திகளையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டுவோம்.

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க