கால்பந்து : முதலாளித்துவ ஆண்டைகளுக்கான சர்வதேச களம்!

ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஆதிக்கத்திற்காகத்தான் இன்று கால்பந்து எனும் விளையாட்டு விளையாடப்படுகிறது.

டந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் வெற்றியும், அந்நாட்டின் முன்னணி வீரர் மெஸ்ஸியும், அந்நாட்டில் நடக்கும் கொண்டாட்டங்களும் சமூக ஊடகங்களில் பிரதான செல்வாக்கு செலுத்தின. தலைநகரான பியூனஸ் அயர்ஸில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அர்ஜென்டினாவின் வெற்றியும், மெஸ்ஸியும் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம்.  இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கூட கொண்டாட்டங்கள் களைகட்டின. இலவச பிரியாணி கொடுத்து இவ்வெற்றியை கொண்டாடின சில உணவகங்கள். கால்பந்துப் போட்டிக்கு தொடங்குவதற்கு முன்பே மெஸ்ஸிக்கு மிகப்பெரிய கட்அவுட், கடலுக்கடியில் கட்அவுட் என ’வெறித்தனமாக’ கால்பந்து ரசிகர்கள் கொண்டாடியதையும் பார்த்தோம்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைப் பற்றி ஏகபோக முதலாளித்துவ நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குறிப்பிடும்போது இப்படியொரு நெருக்கடியை கடந்த 25 ஆண்டுகளில் கூகுள் சந்தித்ததில்லை என்று கூறினார். அந்தளவுக்கு உலக மக்களின் கவனம் கால்பந்தின் மீது திட்டமிட்டு குவிக்கப்பட்டிருந்தது.

படிக்க : புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!

சரி ஏன் கால்பந்தாட்டம் இந்தளவுக்கு கொண்டாடப்படுகிறது? கால்பந்து வீரர்கள் கொண்டாடப்படுகின்றனர்? விளையாட்டு என்ற காரணத்திற்காக மட்டுமா? இயல்பாக இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கின்றனவா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கால்பந்து என்பது ஒரு உலகளாவிய அரசியல் விளையாட்டு. பல ஆயிரம் கோடிகளை அள்ளித்தரும் விளையாட்டு என்பதுதான்.

இந்த உலகக் கோப்பையை நடத்தியது கத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய கால்பந்து மைதானங்கள் மற்றும் புதிய மெட்ரோ, விமான நிலையம், சாலைகள் ஆகியவற்றிற்கான பிரம்மாண்ட கட்டுமானப் பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்த வேலைகளில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டவர்களில் 6000 க்கும் மேற்பட்டோர் எந்த உரிமையுமற்ற, கடுமையான வேலைநிலைமைகளின் காரணமாக இறந்துள்ளனர். பல லட்சம் கோடிகள் மதிப்பிலான இந்தக் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்களின் இரத்தம் வரைமுறையின்றி உறிஞ்சப்பட்டிருக்கிறது.

கத்தாரின் அமீர் குடும்பத்தின் செழிப்பான வாழ்க்கைக்காக புலம்பெயர் தொழிலாளர்களின் பிணங்களின் மீது இந்த கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.

இது ஒருபக்கம் என்றால், உலகக் கோப்பைகளை நடத்தும் ’பாரம்பரியமிக்க’ பன்னாட்டு கால்பந்து சங்கங்களது கூட்டமைப்பான பிப்ஃபா (FIFA) எனும் ஏகபோக நிறுவனத்தின் ஊழல் வரலாறு கற்பனைக்கு அப்பாற்பட்டதாக விரிகிறது.  2015 லேயே பிப்ஃபா (FIFA) சந்தி சிரித்தது. அப்போதைய பிப்ஃபா (FIFA)-வின் தலைவரான செப் பிளட்டர்,  2010 உலகக் கோப்பையை நடத்துவதற்கு தென்னாப்பிரிக்காவிடம் 1 கோடி டாலர் லஞ்சம் பெற்றதாகவும், 2018 ல் ரஷ்யாவிலும், 2022 ல் கத்தாரிலும் உலகக் கோப்பையை நடத்த வாய்ப்பளிக்க அந்தந்த நாடுகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தல், லஞ்சம், நிதித்துறை மோசடி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பிப்ஃபா (FIFA)-வின் தலைமை அதிகாரிகள் மீது அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. 1000 கோடி ரூபாய்க்கு மேலாக லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பிப்ஃபா (FIFA)-வின் அதிகாரிகள் ஸ்விட்சர்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவையெல்லாம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளில் ஒரு சதவீதம் கூட இல்லை. பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் ஆண்ட்ரூ ஜென்னிங்ஸ் பிஃபாவின் ஊழல் முறைகேடுகள், லஞ்ச வாவண்யம் குறித்து நூற்றுக்கணக்கான பக்கங்களில் புத்தகமாக எழுதும் அளவுக்கு நாறுகிறது பிப்ஃபா (FIFA)-வின் வரலாறு.

2015 லேயே இந்த நிலைமை என்றால் தற்போது அதைவிட பலநூறு மடங்கு ஊழல் சாம்ராஜ்யம் விரிந்திருக்கும் என்றுதானே பொருள்.

இன்னொரு பக்கம் பார்த்தால், தற்போது நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வெற்றி உலகம் முழுக்க முற்போக்கு பேசும் பலராலும் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய மெஸ்ஸி கால்பந்தின் கடவுளாக வழிபடப்பட்டார். ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கெதிராக அர்ஜெண்டினா பெற்ற வெற்றியைக் கொண்டாட வேண்டும், வரவேற்க வேண்டும் என்றெல்லாம் அதற்கு பொழிப்புரைகள் எழுதப்பட்டு அதில்  முற்போக்கு அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வியந்தோதிக் கொண்டிருந்தனர்.

உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு என்பதெல்லாம் ஒரு இழவும் இல்லை. நுகர்வுக்  கலாச்சார வெறியுணர்வுதான் இதன் மூலம் ஆழமாக திணிக்கப்படுகிறது. அதற்கு பலியாவதால்தான் இத்தகைய வாதங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அடிடாஸ், பூமா, நைக் போன்ற பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்களுக்கு உடைகளையும், உபகரணங்களையும் ஸ்பான்சர் செய்கின்றன. இதன் மூலம் தங்களது அபரிமிதமான லாபத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்கின்றன. அதற்காகத்தான் மெஸ்ஸி, ரொனால்டோ போன்றோரை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

கால்பந்துக் கடவுள் என கொண்டாடப்படும் மெஸ்ஸி ஒரு ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி கால்பந்து விளையாட்டின் மூலமும், விளம்பரங்களின் மூலமும் வருமானம் பெறுகிறார். விளையாட்டின் மூலம் சம்பாதித்த 4 மில்லியன் யூரோக்களுக்கு வரி கட்டாமல் ஏமாற்றியதற்காக 2016-ல் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்ட யுனெஸ்கோ  அறக்கட்டளையின் வருவாயில் 48 சதவீதம் மெஸ்ஸியின் நன்கொடையில் இருந்து வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அர்ஜெண்டினா எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  பெரும்பாலானோர் ஏழ்மையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் இவ்வெற்றியும், மெஸ்ஸியும் வானளாவ கொண்டாடப்படுவது அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களின் நலனுக்கானதே ஒழிய வேறொன்றுமில்லை.

இன்று மெஸ்ஸி அர்ஜெண்டினாவின் ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல, உலக ஆளும் வர்க்கங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் செல்லப்பிள்ளை. ஒரு விளையாட்டு வீரனை வெறும் வீரனாக மட்டும் பாருங்கள் என்று சொல்ல முடியுமா? அவன் யாருக்காக பயன்படுகிறான், யாருக்காக செயல்படுகிறான் என்பதைப் பார்க்க வேண்டுமல்லவா.

2014-ல் கால்பந்தை அதிகம் கொண்டாடும் மற்றொரு தென்னமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியை எதிர்த்து, இதனால் பயனடையும் ஊழல் மிகுந்த ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி பரந்த அளவில் அந்நாட்டின் உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடியதை நாம் அறிவோம்.

நான்காம் தொழில்நுட்ப புரட்சி மற்றும் உலகமயம் என்ற ஏகபோக சுரண்டலின் காலகட்டத்தில் ஒரு விளையாட்டு என்பது விளையாட்டிற்குரிய நற்பண்புகளை இழந்து பெரும் வியாபாரமாக தலையெடுத்து நிற்கிறது.

இத்தகைய ஏகபோக முதலாளித்துவ காலகட்டத்தில் விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் மீதான இரசிகர்களின் வெறித்தனம் என்பது ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

பண்டைய ரோமாபுரியில் மக்களை கேளிக்கையில் மூழ்கடிக்க கிளாடியேட்டர் எனும் அடிமைகளை சாகும் வரையில் சண்டையிட வைப்பார்கள். வருடம் முழுவதும் இந்தப் போட்டிகள் நடக்கும். இதற்காக பிரம்மாண்டமான மைதானங்களை பெரும் பொருட்செலவில் எழுப்பினார்கள். இன்றோ, முதலாளித்துவ ஆண்டைகளின் லாபத்திற்காக கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

படிக்க : உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!

ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஆதிக்கத்திற்காகத்தான் இன்று கால்பந்து எனும் விளையாட்டு விளையாடப்படுகிறது. இதற்காகத்தான் நுகர்வு வெறி அளவு கடந்து ஊட்டப்படுகிறது. அதில் நாம் திளைத்திருக்கும் வேளையில் நமது எதிர்காலத்தை அழிப்பதுதான் அவர்களது நோக்கம்.

உலகளாவிய அளவில் மக்களின் வாழ்நிலையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் செல்வம் குவிவதும், மறுபக்கம் ஏழ்மையும் எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறதோ அதற்கேற்ப கால்பந்து எனும் விளையாட்டை ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் தமது ஆதிக்க நோக்கத்திற்கேற்ப விளையாடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொண்டு உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் கொடூரமான ஏகாதிபத்திய சுரண்டலுக்கெதிரான போராட்டத்தை களத்தில் நடத்த வேண்டும். அதுவே முதன்மையானது. அப்படிப்பட்ட உன்னதமான போராட்டத்தின் மூலமாகத்தான் கால்பந்து விளையாட்டையும் மீட்க முடியும். உழைக்கும் மக்கள் தங்களுக்கான எதிர்காலத்தையும் அடையமுடியும். குறுக்கு வழி ஏதுமில்லை

இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க