13.08.2023

நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!

விவசாயிகளின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆக கூடாதா?

பத்திரிகை செய்தி

ம்மி ரவி, உளவாளி ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவி என தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படும் ஆளுநர். மீண்டும் தன்னுடைய ஆணவ பேச்சால் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார். சென்னையில் கிண்டியில்,  நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலை ஆளுநர் ரவி சனிக்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் நடத்தியுள்ளார்.  2023 ஆம் ஆண்டில் ’நீட்’ தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.  கலந்துரையாடலின் போது சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை  ” நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். உடனே ஆளுநர் ரவி  கோபமாக ”நான் இருக்கும் வரை நடக்கவே நடக்காது, நீட் விலக்கு மசோதாவிற்க்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன்” என ஆவேசமாக பேசியுள்ளார். அந்த தந்தையின் குரல் தான் தமிழ்நாட்டு மக்களின் குரல்.

மேலும் அந்த தந்தை ”என்னுடைய மகள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டாள். ஆனால் எத்தனை ஏழை மாணவர்கள் இப்படி மதிப்பெண் எடுக்க முடியும். நாட்டில் உள்ள ஏழை மாணவர்கள் படிக்க முடியுமா? நீட் தேர்வால் ஏற்கனவே 15 உயிரை இழந்து விட்டோம். இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்.  என் மகளுக்கு  20 லட்சம் செலவிட்டுள்ளேன். மேலும் நான் மத்திய அரசின் வேலையில் இருப்பதால் என்னால் பணம் கட்ட முடியும். அனைவருக்கும் இது சாத்தியமா? என்றும் நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாட்டு மாணவர்கள்  பலர் சாதனைகளைப் படைத்துள்ளனர். நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாடு இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குகிறது. நீட் தேர்வுக்கு முன்பே மருத்துவ கட்டமைப்பும் மருத்துவ கல்லூரியின் கட்டமைப்புகளும் தமிழ்நாட்டில் நன்றாகத்தான் இருந்தது” என்று சேலம் மாணவியின் தந்தை கூற ஆளுநர் மேலும் கடும் கோபம் அடைந்தார்.  நீங்கள் சொல்வது தவறு. உட்காருங்கள் என சப்தமிட்டார். மாணவியின் தந்தையிடமிருந்து மைக்கும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களோ பெற்றோர்களோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆணவ பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல்  சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின்  கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். இவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது.

ஜனநாயக சக்திகளே , தமிழ்நாட்டின் 21 மசோதாக்களை முடக்கி கிடப்பில் போட்டு வைத்திருக்கும் ஆளுநரை எதிர்த்து நம் போராட்டங்களை வலுவாக தொடர்வோம்!

மாணவர்களே, ஆளுநர் ரவி என்பவர் ஆர்.எஸ்.எஸ்யின் பிரச்சாரகர், நம் கல்வி உரிமையை பறிக்கும் நபர், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வியின் கனவை அழிக்கும் ஆளுநர் ரவியை எதிர்த்து களம் இறங்குவோம்! நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம்! ஆளுநர் ரவியே வெளியேறு, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என முழங்குவோம்!


தோழமையுடன்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321