டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

16.08.2023

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே
குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் பொருளாளர் தோழர் முரளியை அச்சுறுத்தும் திருவாரூர் மாவட்ட போலீசை கண்டிப்பதுடன் தொடர்புடைய போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

திருவாரூர் – விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் தோழர் முரளி வைத்துள்ள பெட்டிக் கடையில் மதுவிலக்கு போலீசார் இரண்டு பேர் வந்து ” நீ சாராயம் விற்கிறாயா” என்று கேட்டுள்ளனர்.

படிக்க : மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!

தோழர் முரளி மக்கள் அதிகாரத்தில் இருப்பதாகவும் “சாராயத்துக்கு எதிரானவன் எப்படி சாராயம் விற்பேன்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பின் அந்த மதுவிலக்கு போலீசார் இருவரும் சென்றுவிட்டனர். ஆனால், இது குறித்து டி. எஸ்.பி இடம் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் “தவறுதலாக வந்து விட்டனர், இனிமேல் வர மாட்டார்கள்” என்று உறுதி அளித்துள்ளார்.

ஆனால் நேற்றைய தினம்(15.08.2023) தோழர் முரளி தன் கடையை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது, கொரடாச்சேரி போலீசு நிலையத்தில் இருந்து இரண்டு போலீசு (ஒருவர் சீருடையும் மற்றொருவர் சாதாரண உடையிலும் இருந்தனர்) வந்து கள்ளச்சாவி போட்டு கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

இதை பார்த்த தோழர் முரளி யார் என்று கேட்டபோது, “நீங்கள் சாராயம் விற்பதாக செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்த சோதனை செய்கிறோம்” என்று கூறியுள்ளனர். பிறகு போலீஸ் அந்த இடத்திலிருந்து சென்றுள்ளது. பூட்டி இருக்கும் கடையை திருட்டுத்தனமாக திறந்து பார்ப்பதற்கு போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடுவோர் மீது திருட்டுத்தனமாக மது விற்ற வழக்கு போட முயல்கிறது. இதன் மூலம் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது போலீசு.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாதிவெறி அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி போன்ற சங் பரிவார அமைப்புகளும் தங்குதடையின்றி செயல்படுகின்றன. மக்களுக்காகப் போராடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சேர்ப்பது, ரவுடிகள் பட்டியலில் சேர்ப்பது போன்ற அநீதியான நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட போலீஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தோழர் முரளி கோப்பு படம்

அதன் தொடர்ச்சியாகவே தோழர் முரளி மீது சட்டவிரோத மது விற்பனை என்ற பொய்யான காரணம் சொல்லி அச்சுறுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது திருவாரூர் மாவட்ட போலீஸ்.

தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் மக்களுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் குருசாமி,
மாநில இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க