மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!

மக்கள் குடியிருப்பு பகுதியிலே இந்த டாஸ்மாக் கடையானது அமைய இருப்பதால் ஊர் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரயிலடி கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் குடியிருப்பு பகுதியிலே இந்த டாஸ்மாக் கடையானது அமைய இருப்பதால் ஊர் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், மக்கள் நிறைவேற்றிய தீர்மானத்தைத் துளியும் மதிக்காத மாவட்ட நிர்வாகமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடையைத் திறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கீழத்தெருவில் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையானது ஏற்கெனவே திருவாரூர்- மன்னை பிரதான சாலையில் இயங்கிவரும் விளமல் டாஸ்மாக் கடைகள் ஆகும். அங்குப் போக்குவரத்துக்கு நெருக்கடியாகவும் முக்கிய அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாகப் போராடி வந்தது, டாஸ்மாக் கடையை மூட வக்கற்ற அரசு தன்னுடைய லாபநோக்கத்திற்காவும் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதற்தாகவும் விளமலுக்கு அருகே உள்ள தேவர்கண்டநல்லூர் ஊராட்சிக்கு டாஸ்மாக் கடையை மாற்றத் திட்டமிட்டுள்ளது. முதலில் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட தியான புரம் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவந்தது . தண்டலை ஊராட்சி மக்கள் மற்றும் தியான புரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக டாஸ்மாக் திறக்கும் முயற்சியை அங்குக் கைவிட்டது. அதன் தொடர்ச்சியாக தியான புரம் பகுதியை அடுத்த 100 மீட்டரில் உள்ள கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தற்போது மேற்கொண்டுவருகிறது.

படிக்க : பாசிசத்தை எதிர்த்து ஓரணியில் திரள்வோம்! | தோழர் தொல்.திருமாவளவன் | காணொலி

இரயிலடி கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை உடனே கைவிடக் கோரி ஊர் பொதுமக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று ஊர் பொது மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து 26-5-2023 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் மனுவின் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்காகச் செயல்பட்டு வருகிறது.

இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராடிவரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை மூடாமல் வேறு வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான காரணம், திருவாரூர் மாவட்டமானது அதிகமாக விவசாயம் நடைபெறக்கூடிய பகுதியாகவும் அதிக அளவு கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகவும் உள்ளது. இங்குப் பல ஆண்டுகளாக நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனத்தின் முயற்சியை முறியடித்துள்ளனர். அப்படிப்பட்ட மக்களின் போராட்டத்தையும், மக்களின் போராட்ட குணங்களையும் மழுங்கடிப்பதற்காகவே மாவட்டத்தின் எல்லா மூலைகளிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருகிறது அரசு. மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்தது மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவர், பெண்கள் என எல்லோரையும் போதைக்கு அடிமையாக்கி அரசின் கஜானாவுக்குக் கல்லாக்கட்டும் வேலையை அரசு செய்து வருகிறது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் செய்தி செய்தித்தாள்களிலிருந்து இன்னும் மறையாத அதே வேலையில் திமுக அரசானது ஊரின் எல்லா மூலைகளிலும் அரசு டாஸ்மாக் கடையைத் திறக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது சாராயம் குடித்து இறந்தாலும் அது அரசிற்கு வருமானத்தைக் கொடுத்து விட்டுச் சாக வேண்டுமென்ற எண்ணத்தில் திமுக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களை நம்பி இனி ஒருபோதும் பயனில்லை. மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மக்கள் அமைப்பாகத் திரண்டு வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் மட்டுமே மூட முடியும்.

வினவு களச்செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க