ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 14
தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த முஸ்லீம் மக்கள், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்; காங்கிரஸ் கட்சிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். பல பத்திரிகைகள் மக்கள் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் அதையே நமக்கு உணர்த்துகின்றன.
மேலும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லீமின் கட்சியின் மீதும் குறிப்பிடத்தக்க அளவில் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர்கள் காங்கிரஸிற்கே தங்களுடைய ஆதரவை தெரிவிக்கின்றனர். அதாவது பி.ஆர்.எஸ். கட்சியின் மீதும் ஓவைசி கட்சியின் மீது முஸ்லிம் மக்களுக்கு உள்ள அதிருப்தி காங்கிரஸின் வாக்குவங்கியை அதிகரிக்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள மேரோஸ் இரானி கஃபே உரிமையாளர் முகமது அலி குல்சார் “காங்கிரசும் வாழும் எங்களையும் வாழவிடும்” என்று கூறுகிறார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தாரூஜ், இந்த தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிப்பதாக கூறுகிறார். மற்றவர்கள் பிரிவினை பற்றி பேசுகிறார்கள். ஆனால் வளர்ச்சிக்காக காங்கிரசு தான் நிற்கிறது என்று அவர் கூறுகிறார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த பாரத் ஜோடா யாத்திரை முக்கிய பங்காற்றியுள்ளது. ராகுல் காந்தி யாத்திரையில் இந்து முஸ்லீம் நல்லுறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தெலங்கானா முஸ்லிம்களை ஈர்ப்பதில் இது முக்கிய பங்காற்றியது என்று கூறியது ஸ்க்ரால் இணையதளம்.
படிக்க: தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சியமைக்குமா?
“ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதர். அவரது இமேஷ் வேண்டுமென்றே கெடுக்கப்பட்டது. நான் அவரை பாதயாத்திரையில் பார்த்தேன். அவரைப் பார்க்க பா.ஜ.க ஆதரவாளர்கள் கூட வந்தனர்” என்று கூறுகிறார், சையத். “ராகுல் மக்களிடம் அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு அவற்றை சரிசெய்ய முயற்சிக்கிறார்” என்று கூறுகிறார், அமீன்.
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி மீது முஸ்லிம் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பி.ஆர்.எஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியின் “பீ” டீமாக செயல்படுகிறது என்ற பிரச்சாரம் தான். காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பி.ஆர்.எஸ் கட்சி பீ டீமாக செயல்படுவதை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்துள்ளது.
மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தங்கள் நலனுக்கு எதிரானது என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளனர். மீண்டும் தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். வெற்றி பெற்றால், அந்த ஆட்சி தங்களுக்கு எதிராக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து தான் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் காங்கிரஸிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஆனால் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்துத்துவ கருத்துகளை பிரச்சாரம் செய்வதையும், ஆட்சியில் இருக்கும் போது முஸ்லிம் மக்களின் மீதான சங்கப் பரிவாரங்களின் தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததை பற்றியும் தெலங்கானா முஸ்லிம் மக்களுக்கு தெரியவில்லை.
திப்பு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube