தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சியமைக்குமா?

சந்திரசேகர் ஆட்சியின் மீது மக்களுக்கு நிலவும் அதிருப்தியை அறுவடை செய்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 13

தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இம்மாநிலத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு போட்டியாளராக கருதப்பட்ட பாரதிய ஜனதா கட்சி அப்படியே கீழிறங்கி மூன்றாம் இடத்துக்கு போய்விட்டது. பா.ஜ.க. தற்போது போட்டியிலே இல்லை என்று பல பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பி.ஆர்.எஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றும் அளவுக்கு ஓராண்டாக காங்கிரஸ் கட்சி அங்கு வேலை செய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவைப் பெருக்கிக்கொண்ட காங்கிரஸின் வெற்றியை தடுக்க முடியாத நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி உள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னால் மக்களுடைய கருத்துகளை அறிய நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சியை விட பி.ஆர்.எஸ். கட்சி ஒன்பது சதவிகிதம் அதிக ஆதரவைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால் அக்டோபர் முதல் வாரத்தில் ஏ.பி.பி. செய்தி இணையதளத்தின் “சி வோட்டர்” நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சி அந்த இடைவெளியை இட்டு நிரப்பி முன்னேறி இருந்தது. தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அந்த விகிதம் மேலும் அதிகமாகி இருந்தது.

சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்களுடைய கோபம் முதல்வர் சந்திரசேகர் மீது அதிகமாகி இருக்கிறது. 50.2 சதவிகித வாக்காளர்கள் அவருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளனர். கட்சியிலும் ஆட்சியிலும் குடும்ப ஆதிக்கம் அதிகமாகி விட்டது, மாநில நிர்வாகம் பண்ணையார்களுடைய காலத்தை நினைவுப்படுத்துகிறது என்று பலரும் சந்திரசேகருடைய ஆட்சியை விமர்சித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


படிக்க: தெலங்கானா: பாசிச மோடி அரசின் ஏமாற்று வாக்குறுதிகள்


சந்திரசேகர் ஆட்சியின் மீது மக்களுக்கு நிலவும் அதிருப்தியை அறுவடை செய்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

மாநில மக்கள்தொகையில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுடைய எண்ணிக்கைதான் அதிகம். பட்டியல் மக்கள் 16 சதவிகிதம், பழங்குடி மக்கள் 9 சதவிகிதம், முஸ்லிம்கள் 13 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவிகிதம். காங்கிரஸ் கட்சி இவர்களை குறிவைத்தே இலவச கவர்ச்சிவாத திட்டங்களை அறிவித்தது. இந்த பிரிவைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்காக ஆறு வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தது.

பி.ஆர்.எஸ். கட்சி பா.ஜ.க-வின் “பீ டீம்” என்ற பிரச்சாரத்தை தீவிரமாக தன்னுடைய ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும் மேற்கொண்டது காங்கிரஸ். இது பி.ஆர்.எஸ். கட்சிக்கு பலத்த அடியாக விழுந்தது. 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிகளை தீர்மானிக்கும் அளவுக்கு தெலங்கானா அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய முஸ்லீம் மக்களிடமும் காங்கிரஸின் பிரச்சாரம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவே கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன.


இரணியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க