பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: பொன்முடியின் கைது விவகாரத்தை எப்படி பார்ப்பது? இது ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை, பா.ஜ.க. இதை வைத்து அரசியல் செய்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம் தி.மு.க. அமைச்சர்கள் பலரும் ஊழல்வாதிகளாக உள்ளார்களே, இதுவும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விசயம்தானே?
பாசிச அடக்குமுறை நிலவுகின்ற தருவாயில், அதாவது எதிர்க்கட்சிகளையெல்லாம் ஒழித்துக்கட்டுகின்ற நடவடிக்கைகளை பாசிச பா.ஜ.க. மேற்கொண்டுவரும் நேரத்தில், பொன்முடி ஊழல் செய்தாரா? இல்லையா? என்று வாதத்தைக் கொண்டுவந்து நிறுத்துவது பா.ஜ.க-வின் நடவடிக்கைகளுக்கும் பாசிச அடக்குமுறைகளுக்குமே முகாந்திரத்தை உருவாக்கிக் கொடுக்கும். எனவேதான், இதை பேசுவதற்கான தருணம் இதுவல்ல என்கிறோம். ஆனால், அதற்காக பாசிச எதிர்ப்பில் ஊழலின்மை, நேர்மை குறித்தெல்லாம் பேசக்கூடாது என்பது அயோக்கியத்தனமானது. பாசிச எதிர்ப்பில் நிற்பவர்கள் ஊழல்வாதிகளாக இருக்க முடியாது. ஊழல்வாதிகளால், பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியாது. மக்களுக்கு நேர்மையாக, மக்கள் பக்கம் நிற்பவர்களால்தான் பாசிசத்தை வீழ்த்தமுடியும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் ஊழலை பற்றி பேசுபவர்கள் சொந்தமுறையில் அக்கட்சிகளை அம்பலப்படுத்தட்டும். மாறாக, பாசிச கும்பல் முன்வைக்கின்ற நிகழ்ச்சிநிரலுக்குள் சென்று பேசுவது பாசிச அடக்குமுறைகளுக்கு துணைபோவதன்றி வேறில்லை.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube