146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் எப்படிக் கையாண்டன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: 146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அடக்குமுறை நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் மீதுமட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளுக்கு நேர்ந்த அடக்குமுறை. ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த கோணத்தில் இந்த விவகாரத்தை கையாளவில்லை, அதற்கான காரணம் என்ன?

து சரியான கேள்வி. 146 எம்.பி-க்கள் என்பவர்கள் 30 கோடி மக்களுக்கான பிரதிநிதிகள். அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது 30 கோடி மக்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல, 140 கோடி மக்களுக்கான பிரச்சினை. இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினையை ஏன் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி.

“எதிர்க்கட்சிகளே, ஏன் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் பந்த் அறிவிக்கவில்லை?” என்ற கேள்விகளை மணிப்பூர் விசயத்திலேயே நாம் முன்வைத்தோம். இப்போதும், “ஏன் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? சாலையை மறியுங்கள், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் பந்த் அறிவியுங்கள். இதுவரை இல்லாத வகையிலான அடக்குமுறை நடவடிக்கை நடந்திருக்கிறது. ஏன் நீங்கள் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவில்லை?” என்பதே எதிர்க்கட்சிகளை நோக்கிய நமது கேள்வி.

ஆனால் அதனை செய்யாமல், பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகின்ற எல்லோரும் பா.ஜ.க-வின் பாசிச அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு காலில் விழுந்து கெஞ்சி தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்கின்ற ஒரு வழிமுறைக்கு நாட்டு மக்களை இந்த எதிர்க்கட்சிகள் பழக்கப்படுத்துகின்றன. பட்டவர்த்தனமாக ஒட்டுமொத்த நாட்டையும் இந்துராஷ்டிரக் கட்டமைப்பிற்கு அடிபணிய வைக்கின்ற அயோக்கியத்தனத்தை எதிர்க்கட்சியினர் செய்கிறார்கள்.

அப்படியானால், பாசிச அடக்குமுறைகளைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சப்படுகிறார்கள் என்பதில்லை. இதனை ஒரே நோக்கம் கொண்ட, ஒரே நலன் கொண்ட இரண்டு நடவடிக்கைகள் என்றே புரிந்துகொள்ள வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில்தான் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. ஆகையால் அந்த எல்லையைத்தாண்டி எதிர்க்கட்சியினர் வெளியே வரமாட்டார்கள். அவ்வாறு வந்தால் அது மக்கள் கோரிக்கையாக மாறிவிடும். எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க