Tuesday, October 15, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுவெளியீடு அல்ல, மாபெரும் போராட்ட ஆயுதம்!

வெளியீடு அல்ல, மாபெரும் போராட்ட ஆயுதம்!

முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்த வெளியீட்டை முழுமையாகப் படித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

-

ன்பார்ந்த ஜனநாயக சக்திகளே, நண்பர்களே!

ஒரு சிறு வெளியீடு, ஜனநாயக சக்திகள் அனைவராலும் இன்று விரும்பி வாங்கப்படுகிறது என்றால், அது, “பாசிச பா.ஜ.க.வைத் தேர்தலில் வீழ்த்துவது எப்படி?” என்ற வெளியீடுதான்.

இதுவரை, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பாக எத்தனையோ வெளியீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பார்ப்பனிய எதிர்ப்பு, மறுகாலனியாக்க எதிர்ப்பு, சாதித் தீண்டாமை எதிர்ப்பு என ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக எமது அமைப்புகள் சார்பாக கொண்டுவரப்பட்ட வெளியீடுகள் பல. இவற்றில் சில இலட்சக்கணக்கான படிகள் கூட மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. தோழர்கள் பேருந்துகள், இரயில்களில் ஏறி பிரச்சாரம் செய்தும், கடைவீதிகள், குடியிருப்புகள் என ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வினியோகிப்பதன் மூலமே இவை நடந்தேறியுள்ளன.

இன்று, “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்ற மைய முழக்கத்தின் கீழ் சுமார் இரண்டு ஆண்டுகளாக எமது தோழமை அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முதல் நிகழ்வாக, 2022 செப்டம்பரில் சென்னையில் ஒரு மாநாடு நடத்தினோம். அதன் பொருட்டு ஒரு சிறு வெளியீடு கொண்டுவந்தோம். அதனைத் தொடர்ந்து, 2023 மே மாதம் மதுரையில் ஒரு மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டை ஒட்டி, “சுற்றி வளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீடு கொண்டுவந்தோம்.


படிக்க: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்


இதன் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியவுடன், மற்ற எல்லா கட்சிகளுக்கும் முன்னதாக, எமது தோழமை அமைப்புகள் சார்பாக, “வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” என்று முன்வைத்து மேற்கொண்ட பிரச்சார இயக்கமானது பல இலட்சக்கணக்கான மக்களிடம் சென்றது.

பாசிச பா.ஜ.க.வைத் தேர்தலில் வீழ்த்துவது என்பது கடினமானது. மக்கள் களத்தில் அதனை மோதி வீழ்த்தும் போராட்டம் இல்லாமல், தேர்தலில் வீழ்த்த முடியாது என்பதையும், பா.ஜ.க.வைத் தேர்தலில் வீழ்த்துவது என்பது அது கொண்டுவந்த காவி-கார்ப்பரேட் அடிப்படையிலான சட்ட திட்டங்கள் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும்; அத்துடன், பாசிசம் அரங்கேறி வருவதற்கு காரணமான இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மக்களுக்கான ஜனநாயகமாக மாற்றியமைக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற ஒரு மக்கள் எழுச்சிக்குத் தயாராக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் இயக்கத்திற்கான பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டமாக, “பாசிச பா.ஜ.க.வைத் தேர்தலில் வீழ்த்துவது எப்படி?” என்ற இச்சிறு வெளியீடையும் கொண்டுவந்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.

இந்த வெளியீடு கொண்டுவந்த உடன், இது பெருவாரியான ஜனநாயக சக்திகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது என்றால் மிகையல்ல.


படிக்க: கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?


முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்த வெளியீட்டை முழுமையாகப் படித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

“இந்தியா” கூட்டணிக் கட்சிகள் மீது இந்த வெளியீட்டில் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன.

”இந்தியா” கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து இந்த வெளியீடு ஓட்டுக் கேட்கவும் இல்லை. ஆனால், சமூகத்தில் நடக்கும் எதார்த்தத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். இந்த வெளியீடு அந்த எதார்த்தத்தை மக்கள் கண்முன்னே எடுத்துக் காட்டுகிறது. அதனால்தான் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இது பெருத்த ஆதரவைப் பெற்றுள்ளது.

“மோடியின் பத்தாண்டுகால ஆட்சியை, “அம்பானிக்கும் அதானிக்கும் அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கோ இருண்ட காலம்” இந்த இரண்டுவாக்கியங்களிலேயே அனைத்தையும் விளக்கியுள்ளீர்கள்” என்று மே 17 இயக்கத் தோழர் ஒருவர் கூறினார்.

“நாங்கள் இதுநாள் வரை சொல்லத்தயங்கியதை இந்த வெளியீடு தைரியமாக சொல்கிறது” என்று பாராட்டுகின்றனர். பா.ஜ.க.வைப் பற்றி இந்த வெளியீடு, “இந்திய மக்களின் முதல் எதிரி”என்று நெற்றிப் பொட்டில் அடித்தார் போல தெளிவாக விளக்குகிறது என பலரும் கூறினர்.

தி.மு.க. மீது எங்களுக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், அதனை எப்படி சொல்வது என இதுநாள் வரை தயங்கிக் கொண்டிருந்தோம். இந்த வெளியீடு சரியான வகையில் அதனை வெளிப்படுத்தியுள்ளது என்று பலரும் இந்த வெளியீட்டை வாங்கிப் படித்தனர்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தி.மு.க.வின் இளந்தொண்டர் ஒருவர், இந்த வெளியீட்டின் முதல் சில பக்கங்களைப் படித்துவிட்டு, “யார் சார் இவங்க, இந்த மாதிரி பொளந்து கட்டுறாங்க” என்று வியந்து கூறியதுடன், தனது நண்பர்கள் அனைவரையும் படிக்க வைத்தார்.

மேலும், இத்தலைவர்கள் பலரும் வெளியீட்டை வாங்குவது மட்டுமல்ல, தமது தரப்பில் 50, 100 படிகளைப் பெற்று தங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

ஆகையால், ஜனநாயக சக்திகளே, தோழர்களே, நண்பர்களே, தாங்களும் தங்களால் இயன்ற அளவு இந்த வெளியீட்டை வாங்குங்கள்! தங்களது நண்பர்களுக்கும் பரப்புங்கள்!

ஆம், இது ஒரு வெளியீடு அல்ல, மாபெரும் போராட்ட ஆயுதம்!

தோழமையுடன்,
வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
போராட்டக் கமிட்டி.

ம.க.இ.க – மக்கள் அதிகாரம் – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு
தமிழ்நாடு – புதுவை
99623 66321

(இக்கட்டுரையில் சில தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்ததால் ஏப்ரல் 28 அன்று திருத்தப்பட்டுள்ளது.)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



  1. தோழர் அவர்களுக்கு வணக்கம் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது என்ற புத்தகத்தை நன்றாக படித்தேன் இதில் பாசிச பாஜகவின் அனைத்து துறைகளிலும் செய்யப்பட்ட ஊழல்களை தோலுரித்துக் காட்டி உள்ளீர்கள் படிக்கப் படிக்க ஆர்வமாக உள்ளது இந்த இரண்டு அல்லது மூன்று முறை கண்டிப்பாக நான் படிப்பேன் இதனை மக்களுக்கும் தெரியப்படுத்துவேன் நானும் ஐந்து புத்தகங்களை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்துள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க