Sunday, September 15, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்ஓட்டுக்கு பணம் கொடுப்பது - வாங்குவது சரியா?

ஓட்டுக்கு பணம் கொடுப்பது – வாங்குவது சரியா?

-

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: கட்சிகள் ஓட்டுக்குக் காசு கொடுக்கிறார்கள், மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும் என்று பல ஜனநாயக சக்திகள் கருதுகின்றனர். ஓட்டுக்குக் காசு கொடுப்பதால் மட்டுமே பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டும் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் களத்தை வடநாட்டு ஊடகங்களும் பா... உள்ளிட்ட பார்ப்பன கட்சிகளும் இழிவாகப் பேசுகின்றன. ஓட்டுக்குக் காசு கொடுக்கும் நிலைமை எப்போது மாறும்?

ந்தப் பிரச்சினையிலும், கேள்வியிலும் பலவிதமான பார்வைகள் அணுகுமுறைகள் உள்ளன. ஆகையால், தமது கட்சிக்கு ஓட்டுப் போட கட்சிகள் காசு கொடுப்பது, மக்கள் அதை வாங்குவது என்ற இந்தப் பிரச்சினையை பொதுவாக மதிப்பீடு செய்வது தவறாகும்.

இன்று, ஓட்டுக்குக் காசு கொடுக்கமாட்டோம் என்று சீமான் சொல்கிறார். ஒரு காலத்தில் இராமதாசும் அப்படி சொன்னவர்தான். கமல்ஹாசன், இப்போது விஜய் போன்ற பலரும் அவ்வாறு சொல்கிறார்கள். இது ஒரு ஃபேஷனான வார்த்தையாகத்தான் இருக்கிறதே தவிர, தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற உணர்வில் இருந்து வருகின்ற கருத்துகள் அல்ல. இதனை மக்களும் நன்கறிவார்கள்.

இந்திய தேர்தல் அரசியலில், ஓட்டுக்குக் காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்கின்ற தலைவர்களை நேர்மையான தலைவர்களாகக் கருதுவதும் ஓட்டுக்குக் காசு வாங்கும் மக்களைப் பிழைப்புவாதிகளாகக் கருதுவதும் தவறாகும். ஒட்டுக்குக் காசு கொடுப்பதன் பின்னணியை புரிந்துக்கொள்வதன் மூலம்தான் இதை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டைக் கொள்ளையிடுவதற்கேற்ப இந்திய நிலப்பிரபுக்கள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குகின்ற வகையில் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான், நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பு. 1947 அதிகார மாற்றத்திற்குப் பின்னர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டும் கொள்ளையிடும் வகையில் இருந்த இந்தக் கட்டமைப்பானது பல ஏகாதிபத்தியங்களும் கொள்ளையடிப்பதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது.

நிலப்பிரபுக்கள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் தங்களுக்கிடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் என்பது எந்தக் காலத்திலும் ஜனநாயகமாக இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை, தேர்தலின் போது, நாட்டை முன்னேற்றுவது குறித்து கட்சிகள் பேசினாலும், ஓட்டு வாங்குவது என்பது இந்த ஜனநாயக வழிமுறை அல்லாத பல்வேறு வழிமுறைகளில் நடந்தேறி வருகிறது.

இதில், முதன்மையானது, உள்ளூரில் அதிகாரம் செலுத்தும் நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள் சொல்பவர்களுக்குத்தான் ஏழை மக்கள், தலித் மக்கள் ஓட்டு போட வேண்டும், மாற்றி வேறொருவருக்கு ஓட்டுபோட்டால் தலித் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும், தலித் குடிசைகள் எரியும், அவர்கள் மீது கும்பல் வன்முறைகள் நடந்தேறும் என்கிற நிலைமையாகும். இதுதான், சுதந்திர இந்தியாவின் தேர்தல் நிலைமை. நிலப்பிரபுக்களின் கூலிப்படைகளால் தலித் மக்கள் மீது அடுத்தடுத்த படுகொலைகள் நடத்தப்படும் பீகாரில், 1989-இல் தலித் கூலி விவசாயிகள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு, ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டதையடுத்து, தன்வார்-பிட்டா கிராமத்தில் வாக்களிக்கச் சென்ற 22 தலித் கூலி விவசாயிகள் ரஜபுத்திர நிலப்பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்டது இதன் உச்சமான நடவடிக்கைகளில் ஒன்று. இன்றைக்கும் தலித் அமைப்புகள் பல கிராங்களில் கொடியேற்ற முடியாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

தலித் மக்களின் பிரதிநிதித்துவம் தேர்தல் அரசியல் அரங்கில் எதிரொலிப்பதை தடுக்க முடியாத நிலைமை உருவானதுடன் இணைந்ததுதான் ஆதிக்கச் சாதியினர் கட்சி தொடங்கி தங்களது சாதி வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள முனைவதாகும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகமான மக்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனரோ அதற்கேற்ப கட்சிகள் வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்ற நிலைமைதான் இன்றும் செல்வாக்கு செலுத்துகிறது.


படிக்க: உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா?


அதிகார பலமும், சாதி பலமும் செல்வாக்கு செலுத்த முடியாத பொதுவான மக்களுக்குத்தான் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் முறை ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. 1990-களுக்கு முன்பு டீ-வடை கொடுத்ததும்,  சாராயம் கொடுத்தும் ஓட்டுவாங்கியதானது படிப்படியாக வளர்ந்து இலவசப் பொருட்கள் கொடுப்பது, காசு கொடுப்பதாகப் பரிணமித்து, இப்போது 10,000-20,000 ரூபாய் வரை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

இதில், தமிழ்நாட்டிற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது கொடுக்கப்படும் பணத்தின் அளவு மட்டுமே. மற்றபடி அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் முறை உள்ளது.

என்னதான் இருந்தாலும் காசுக்காக ஓட்டுப் போடுவது இழிவானதல்லவா என்று நம்மில் பலருக்கு கேள்வியெழலாம்?

ஆனால், நம்மில் பலரும், படித்தவர்களும், நடுத்தர வர்க்கப் பிரிவினரும் காசு வாங்கி ஓட்டுப் போடுவதில்லை, நேர்மையான அரசியல்வாதிகள் காசு கொடுத்து ஓட்டு வாங்குவதில்லை என்று கருதுகிறோம். அப்படியெனில், உரிமையை நிலைநாட்டுவதற்குதான் தேர்தல் என்று புரிந்து கொண்டு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் போன்ற உழைக்கும் மக்களில் ஒரு சிறு பிரிவினர், அதிகபட்சம் 10-20 சதவிகித வாக்காளர்கள்தான், கட்சிகள் அறிவிக்கும் வாக்குறுதிகளையும் அவர்களது கடந்தகால நடைமுறைகளையும் பார்த்து வாக்களிக்கின்றனர். இதில் கூட கடன் தள்ளுபடி, ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பு போன்ற சில உடனடி நலன்களை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர்.

மற்றபடி, காசு வாங்காமல் ஓட்டுப் போடுவதாகக் கருதப்படும் பெரும்பான்மையான மக்கள் சாதி, மதம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பார்த்துதான் ஓட்டுப் போடுகின்றனர்.

சீமான் கும்பலும், பார்ப்பன ஊடகங்களும் சொல்வதைப்போல, மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுவதால்தான் நாட்டைக் கொள்ளையடிக்க விரும்புகிறவர்கள், ஊழல் அரசியல்வாதிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்வதெல்லாம், பிரச்சினையை தலைகீழாக விளக்குவதாகும்.

தேர்தல் என்பது எந்தவகையிலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்லை, அடக்குமுறைகளைத் தடுக்கப் போவதும் இல்லை என்ற நிலையில், தங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தேர்வு செய்வதுதான் தேர்தல் என்றாகிவிட்ட நிலையில், காசு கொடுக்காமல் ஓட்டு வாங்குவதன் இன்னொரு வடிவம்தான், பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியல். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக இந்துமத போதையை ஏற்றிவிடுகிறது, சங்கப் பரிவார கும்பல்.

அதாவது, இனத்தைச் சொல்லி ஓட்டுவாங்குவது, சாதியைச் சொல்லி ஓட்டு வாங்குவது, இந்து மதவெறியூட்டி ஓட்டுவாங்குவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி ஓட்டுவாங்குவது ஆகியவை நிலப்பிரபுத்துவ-பண்ணையாதிக்க அடிமைத்தனமாகும். காசு கொடுத்து ஓட்டு வாங்குவது தனியார்மய-தாராளமயத்தினால் உருவான காரியவாதமாகும். இவை இரண்டிற்கும் ஜனநாயகத்திற்கும் தொடர்பில்லை.


படிக்க: எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?


ஆகையால், சாதி, அதிகாரம், மதம் ஆகியவற்றைக் காட்டி ஓட்டு வாங்குபவர்களும் இந்திய அரசியல் அமைப்பும் தேர்தலும் ஜனநாயகமானவை என்று இன்னமும் கருதிக் கொண்டிருப்பவர்களும்தான் ஓட்டுக்கு காசு கொடுப்பதைக் குற்றம் சொல்கிறார்கள்.

இப்படிக் கூறுவது, ஓட்டுக்குக் காசு வாங்குவதை நியாயப்படுத்துவதாக தோன்றலாம். ஆனால், இந்திய தேர்தல் முறையில் எது நியாயம், எது அநியாயம் என்பதுதான் நமது முதன்மையான கேள்வி.

மேலே குறிப்பட்டதுபோல, இந்திய ஜனநாயகம் என்பதே கார்ப்பரேட் முதலாளிகள் மக்களைக் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்டதாகும். எந்தக் கட்சிக்கும் இதில் கொள்கை வேறுபாடு கிடையாது. அதிகார பலம், பண பலம், சாதி ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் இந்த அரசியலின் அடிப்படையில் நடக்கும் தேர்தலில் அவை அனைத்தும் வெளிப்படத்தானே செய்யும். அதனால்தான், சமூகத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள், போலித்தனம், ஏமாற்று, மோசடி, பாலியல் வக்கிரங்கள், சாதி ஆதிக்கங்கள் அனைத்தும் தேர்தலிலும் வெளிப்படுகிறது.

இதில், ஓட்டுக்கு காசு வாங்குவதை மட்டும் குற்றம் என்று சொல்வதன் மூலம் என்ன சொல்லவருகிறார்கள் என்பதுதான் நமது கேள்வி. அப்படியெனில், மதவெறியைத் தூண்டி ஓட்டுக் கேட்பதையோ, சாதிவெறித் தூண்டி ஓட்டுக் கேட்பதையோ ஏன் இதே அளவிற்கு எதிர்ப்பதில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அப்படியெனில், காசு, சாதி, மதம் ஆகியவற்றுக்காக ஓட்டுப் போடும் நிலைமை எப்போதுமே மாறாதா? நேர்மையான தேர்தல் எப்போதுதான் நடக்கும்? என்று கேட்டால், நாட்டின் அரசியல் அதிகாரத்திற்காக நடப்பதுதான் தேர்தல். இப்போது இருக்கும் தேர்தல்முறை என்பது கார்ப்பரேட் அரசியலுக்குத்தான் உகந்ததாக உள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், அவர்களுக்கு துணைபுரிகின்ற உள்ளூர் ஆதிக்கச் சக்திகளுக்கானதாக உள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு தொழில்முன்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட நாட்டின் கோடான கோடி மக்களுக்கான கட்டமைப்பாக இந்தியாவின் அரசியல் கட்டமைப்பும் அதற்கான தேர்தலும் இல்லை. இவர்களது பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் அரசியல் கட்டமைப்பு இல்லை.

அவ்வாறு உழைக்கும் மக்களுக்குத் தேவையான உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையிலான அரசியல் அமைப்பை உருவாக்கும் போது, அதற்காகப் போராடும் போது, அந்த அரசியல் அமைப்புக்கான தேர்தலில்தான் சாதி, மதம், காசு, அதிகாரம் ஆகியவற்றிற்கு இடமில்லாத, உண்மையில் ஜனநாயக பூர்வமான தேர்தலை நடத்த முடியும். இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்டமைப்புக்கான தேர்தலில் இந்த ஜனநாயக வழிமுறைகளை எதிர்ப்பார்ப்பது சாத்தியமில்லை.

ஆகையால், தேர்தல் ஜனநாயகமாக நடக்க வேண்டும் என்பதைவிட, அரசியல் அமைப்பு ஜனநாயகமானதாக இருக்க வேண்டும் என சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க