Monday, September 16, 2024
முகப்புசெய்திஇந்தியாபாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான "காவி" டிடி நியூஸ்

பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்

தூர்தர்ஷன் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் பெயரளவிலான எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொண்டது. பகலில் ஒளிபரப்பாகும் எந்த டிடி நியூஸ் புல்லட்டினை எடுத்துக்கொண்டாலும் அது பிரதமர் மற்றும் அவரது பிரச்சாரப் பயணம் பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளது.

-

த்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தூர்தர்ஷனின் இந்தி மற்றும் ஆங்கில சேனல்களின் லோகோ மற்றும் எழுத்து வண்ணங்களை “ரூபி சிவப்பு” நிறத்திலிருந்து ”காவி” நிறத்திற்கு மாற்றியுள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 16 அன்று வெளியானது முதல், ஜனநாயக சக்திகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் “பிரகாசமான, கவர்ச்சிகரமான வண்ணத்தைப் பயன்படுத்துவது சேனலின் பிராண்டிங் மற்றும் காட்சி அழகியலைப் பற்றியது. இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன” என சப்பைக்கட்டு கட்டினார்.

டிடி நியூசின் லோகோவின் நிறம் மட்டும் காவியாக மாறவில்லை, அந்த சேனலே காவி சேனலாக சங்கி சேனலாக மாறியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. அது பாசிச மோடி அரசின் ஊதுகுழலாக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள  திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார், “பிரசார் பாரதி இப்போது ‘பிரசார’ பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பி.ஜே.பி-யின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன” என்று கூறியுள்ளார்.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


டிடி நியூஸ் மோடி, அமித் ஷா மற்றும் பிற பி.ஜே.பி-யின் மத்திய மாநில அமைச்சர்களின் செயல்பாடுகளையும் பேச்சுகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது. தேர்தல் அல்லாத சமயங்களில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு செய்தி ஊடகம் இவ்வாறு செயல்படுவதானது வழக்கமான ஒன்று தான்.

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் ‘நடுநிலையாக’ செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் பெறும் வகையில் அதைப் பயன்படுத்தக்கூடாது. 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்திய தேர்தல் ஆணையம் தூர்தர்ஷனை அனைத்து கட்சிகளுக்கும் “சீரான ஒளிபரப்பு நேர கவரேஜ்” (balanced air time coverage) வழங்காததற்காக கண்டித்திருந்தது. மேலும், ஒருதலைப்பட்சமான கவரேஜ் (partisan coverage) செய்து வருவதாகவும் எச்சரித்திருந்தது.

தூர்தர்ஷன் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் பெயரளவிலான எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொண்டது. பகலில் ஒளிபரப்பாகும் எந்த டிடி நியூஸ் புல்லட்டினை எடுத்துக்கொண்டாலும் அது பிரதமர், பிரதமர், பிரதமர் மற்றும் அவரது பிரச்சாரப் பயணம் பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீது கொண்ட ‘மதிப்பின்’ காரணமாக, மோடியின் உரைகள் நேரடி ஒளிபரப்பாகவோ அல்லது முழு காணோளியாகவோ ஒளிபரப்பப்படுவதில்லை; மாறாக சிறு சிறு பகுதிகளாக வெட்டப்பட்டு நாள் முழுவதும் ஒளிபரப்பப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து அமித் ஷா, பி.ஜே.பி தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற பி.ஜே.பி உயர்மட்ட தலைவர்களின் தேர்தல் பேரணிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அவர்களின் உரைகளின் துணுக்குகள் ’24 கி சுனாட்டி’ (24 ki Chunauti) சிறப்புப் பகுதியின் புல்லட்டின்களை நிரப்புகின்றன. நிகழ்ச்சிகளுக்கு முன்பும், நிகழ்ச்சியின் போதும், பின்பும் ‘மோடியின் உத்தரவாதம்’ (Modi ki Guarantee) என்ற பி.ஜே.பி-யின் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.


படிக்க: பாசிச மோடியும் ஊடக சுதந்திரமும்


தேர்தலின் போது பிரதமர், அவரது அமைச்சர்கள் அல்லது உயர்மட்ட அரசியல் தலைவர்களின் கூற்றுகள் செய்திகளில் வருவதென்பது பிரச்சினையல்ல. ஆனால் அதன் முழு கவனமும் ஆளும் பி.ஜே.பி அரசையே மையப்படுத்தி உள்ளது தான் அதன் சார்புத்தன்மையைக் காட்டுகிறது.

சான்றாக, கடந்த  ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தானின் (Banswara) பன்ஸ்வாராவில் மோடி பேசிய முஸ்லீம் வெறுப்புப் பேச்சை பகுதிகளாக வெட்டி டிடி நியூஸ் தொடர்ந்து ஒளிபரப்பியது.

பீகாரில் அமித் ஷா, மகாராஷ்டிராவில் நட்டா மற்றும் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் ராஜ்நாத் சிங்… என ஆளுங்கட்சியின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் டிடி நியூஸ் ஒளிபரப்பியது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூரின் ஒலி பைட்டுகள் (sound bytes), வயநாடு பி.ஜே.பி வேட்பாளர் கே. சுரேந்திரனுக்கு பிரதமர் எழுதிய கடிதம், ஜம்மு-காஷ்மீரில் பி.ஜே.பி தலைவருடனான நேர்காணல் ஆகியவையும் ஒளிபரப்பாகின. மோடி மகாவீரர் ஜெயந்தியைக் கொண்டாடியதும் ஒளிபரப்பாகியது.

ஆனால், எதிர்க்கட்சியினர் குறித்தான செய்திகள் மிக சொற்பமாகவே ஒளிபரப்பப்பட்டன. மோடி ராஜஸ்தானில் வெறுப்புப் பேச்சு பேசிய அதே நாளில் (ஏப்ரல் 21 அன்று) ராஞ்சியில் இண்டியா கூட்டணியின் பெரிய பேரணி ஒன்று நடந்தது. ஆனால், அது தூர்தர்ஷன் செய்திகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெறவில்லை. அந்நாள் பிற்பகல் வரை சில காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன.


படிக்க: ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!


ஏப்ரல் 22 அன்று இண்டியா கூட்டணியின் பேரணி குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் இடம்பெற்றன. ஆனால், டிடி நியூஸில் அலிகாரில் மோடி ஆற்றிய உரையும் ஏப்ரல் 21 அன்று மோடி ஆற்றிய உரையுமே இடம்பெற்றிருந்தன. மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 2006 ஆம் ஆண்டு உரையிலிருந்து “எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் – குறிப்பாக முஸ்லீம்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தான் (நாட்டின்) வளங்களின் மீதான முதல் பாத்தியதை” என்று குறிப்பிடும் பகுதியை டிடி நியூஸ் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது.

மக்களின் சொத்துகளை கணக்கெடுத்து காங்கிரஸ் பிடிங்கிக்கொள்ளும் என்று மோடி பொய் பரப்புரை செய்து கொண்டிருந்தார். டிடி நியூஸும் அதற்கு ஏற்ற வகையில், ஏப்ரல் 23 அன்று ‘நாட்டை எக்ஸ்ரே செய்வது’ குறித்து ராகுல் காந்தி ஆற்றிய உரையின் காட்சிகளையும், மோடி பேசியதையும் தொடர்ந்து நாள் முழுவதும் ஒளிபரப்பிக்கொண்டே இருந்தது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையுடன் ராகுல் காந்தியின் இந்த கருத்துக்களை இணைத்து ஒரு டிடி நியூஸ் தொகுப்பாளர், “இது ஒரு கம்யூனிச சிந்தனை (communist vichar dhara). இது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது” என்று கூறினார். கம்யூனிசம் மீது பாசிஸ்டுகளுக்கு அச்சம் இருக்கத் தானே செய்யும். அதைத் தான் அந்த தொகுப்பாளரும் வெளிப்படுத்துகிறார்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும் தூர்தர்ஷன் பாசிச பி.ஜே.பி-க்கு ஆற்றிவரும் ’கர சேவை’யின் சில துளிகள் மட்டுமே.

அரசு கட்டமைப்பில் ஊடுருவியுள்ள பாசிச கும்பல் அரசு ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. அனைத்திந்திய வானொலி (All India Radio) மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றை இயக்கும் பிரச்சார் பாரதி காவிமயமாக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கெனவே சென்றுவிட்டது. டிடி நியூஸ் சேனலின் புதிய ”காவி” நிற லோகோ, அந்த செய்தி ஊடகம் முழுமையாக காவிமயமாக்கப்பட்டதையே உணர்த்துகிறது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க