நெல்லை மேலப்பாளையத்தில் 01.05.2024 அன்று மாலை 5.30 மணிக்கு நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக மே தின ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி பகுதி வாழ் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் உரிமை மீட்பு களம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, பூர்வீக தமிழர் கட்சி, மே 17 இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், ஜனநாயக சக்திகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர் தோழர் செல்வம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார். தனது உரையில், மே தின வரலாறு பற்றியும் பாசிசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.
படிக்க : சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்
பாசிச பாஜக இந்திய நாட்டின் சட்டங்கள் ஒவ்வொன்றாக திருத்தி நாட்டை பாசிச பாதையில் கொண்டு செல்வதையும் அதை முறியடிக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் வலியுறுத்தி அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கட்சிகளும் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் முத்து வளவன், சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, மக்கள் விரோத சட்ட திட்டங்கள் போன்றைவை மக்களை வாழவிடாமல் தடுக்கிறது என்பதனை விளக்கி பேசினார்.
திராவிட தமிழர் கட்சி, நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் கரு முகிலன், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டதும் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டு உரிமைகள் மறுக்கின்ற பாசிச மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்று கூறினார்.
தமிழ் புலிகள் கட்சி, நெல்லை மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் SRN பாண்டியன், அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பதும் தொழிலாளர் உரிமைகள் பறிப்பதும் நடைபெறுகிறது. பாசிச மோடி அரசை எதிர்க்க வேண்டும் என்று உரையாற்றினார்.
தமிழர் உரிமை மீட்பு களம் நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் சண்முக ராஜ் கலந்து கொண்டார். காண்ட்ராக்ட் பணி முறை குறித்தும் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும் பூர்வீக தமிழர் கட்சி தோழர் பாலமுருகன் உரையாற்றினார். மே 17 இயக்கத் தோழர் புருஷோத்தமன் தனது உரையில் பாசிச பாஜக வீழ்த்தப்பட வேண்டிய அவசியம் பற்றி விளக்கி பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் தனது உரையில் காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் வரலாற்று பங்களிப்பு பற்றியும் தேசிய இன பிரச்சனை பற்றியும் அதை கையில் எடுத்து நம்முடைய விடுதலையை நோக்கி நாம் நகர வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி பேசினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் தனது உரையில், இந்திய நாட்டில் மறுகாலனியாக்கம் புகுத்தப்பட்ட பின் சட்டங்கள் திருத்தப்படுவது அதற்கு தோதாக பாசிசம் அரங்கேற்றப்பட்டு இருப்பதையும், அது நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பின் வழியாகவே அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது என்பதையும், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டி அமைக்கும் போது தான் பாசிசம் மீண்டு வராமல் நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.
படிக்க : மோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி மனு | இராமநாதபுரம்
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் சுற்றி இருந்த பெரியோர்கள் அனைவரும் கூட்டத்தை கவனித்தனர். கூட்டம் முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது பாஜகவை தேர்தலில் வீழ்த்துவது, இந்தியா கூட்டணியின் நிலை பற்றி நம்முடன் விவாதித்த, உணர்வுபூர்வமாக பேசிய பகுதிவாழ் இஸ்லாமிய நண்பர் ஒருவர் நமது நிலைப்பாடு சரி என்று ஏற்றுக் கொண்டார். தனது பங்களிப்பாக தானாக முன்வந்து நிதியளித்தார். மேலும் திமுக நிர்வாகி ஒருவர் இன்றைக்கு கம்பெனி விடுமுறை என்பதால் தற்செயலாக இங்கே வந்தேன். உங்கள் பேச்சை கேட்டேன். மிக சிறப்பாக இருந்தது என தனது கருத்தை பதிவு செய்தார்.
தொழிலாளி வர்க்கம் போராடி பெற்றெடுத்த உரிமையை நிலைநாட்டுவதும், பாசிசம் வீழ்த்தப்படுவதும் வேறுவேறல்ல என்பதை பகுதியில் நடைபெற்ற இந்த மே தின ஆர்ப்பாட்டம் உறுதியாக எடுத்துக் கூறியது.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605