03.05.2024
சேலம் மாவட்டம், ஓமலூர் தீவட்டிப்பட்டியில்
தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை!
கலவரத்துக்கு காரணமான ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்!
ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்!
கண்டன அறிக்கை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி வட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையக்கூடாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழா பாதியில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கோயில் மூடப்பட்டது.
இந்த பிரச்னை தொடர்பாக நேற்று ( 2.05.2024) காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள், கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வரக்கூடாது என தடை விதிக்க முடியாது. அனைவரும் சென்று வழிபடும் வகையில்தான் அரசு வழி வகுத்துள்ளது என்றனர். இதுதொடர்பாக ஊரில் கலந்து பேசி நாளை (இன்று) முடிவு எடுப்பதாக தெரிவித்து விட்டு சென்றுள்ளனர்.
படிக்க : மே தினத்தில் சூளுரைப்போம்! | தோழர் யுவராஜ் | வீடியோ
தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிப்பதை அரசு தடுக்காது என்பதை அறிந்த ஆதிக்க சாதி வெறியர்கள் திட்டமிட்டு நேற்று கலவரத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இதில் தீவட்டிப்பட்டியில் உள்ள பல கடைகள் எரிக்கப்பட்டும் அடித்து நொறுக்கப்பட்டும் சேதம் அடைந்துள்ளன. கலவரம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 31 பேரை இதுவரை போலீசு கைது செய்துள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்று சொல்வதற்கு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது நாள் வரை அப்படிப்பட்ட இழிவான ஒரு நிலைமை இருந்தது என்றால் அதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டது, சமூக நீதியில் முன்னேறிவிட்டது என்றெல்லாம் பெருமை பொங்க பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடக்கூடாது என்ற அவலமும் நிறைவேறி உள்ளது.
படிக்க : பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்தக் கலவரம் என்பது திட்டமிட்டதாகும். இதற்குக் காரணமான ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட வேண்டும். ஆதிக்க சாதி வெறியை தூண்டிவிட்டு வயிறு வளர்க்கும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தமிழ்நாடு அரசு முற்றாக தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும்
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321