Saturday, September 14, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுவிருதுநகர் கல்குவாரி வெடி விபத்து - அரசே முதன்மை குற்றவாளி!

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து – அரசே முதன்மை குற்றவாளி!

தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முக்கியமான காரணம் எந்த கல்குவாரிகளும், பட்டாசு ஆலைகளும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை என்பது தான்.

-

டந்த மே 1 அன்று விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே டி.கடம்பன்குளம் கிராமத்தில் காலை எட்டு மணி அளவில் கல்குவாரி அமைந்துள்ள பகுதியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பெரியதுரை, கருந்தசாமி, குருசாமி ஆகிய மூன்று கூலி தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

டி.கடம்பன்குளம் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல் குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்தை வைப்பதற்கான குடோன் ஒன்று இக்கிராமத்தில் உள்ளது. குவாரி மற்றும் வெடி மருந்து குடோன் ஆகியவற்றில் 30 பேர் வரை வேலை செய்து வருகின்றனர்.

தற்போது விபத்து ஏற்பட்டுள்ள வெடி மருந்து குடோனில் இருந்து தான் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள கல் குவாரிகளுக்குத் தேவையான வெடி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.


படிக்க: தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?


வெடி மருந்து குடோனில் மருந்துகளை ஏற்றி, இறக்கும் பணிகளில் 4 சரக்கு வாகனங்களும் 8 பணியாளர்களும் ஈடுபடுவது வழக்கம். மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் மூன்று தொழிலாளர்கள் மட்டும் வெடி மருந்து இறக்கி வைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது திடீரென அந்த வெடிமருந்து குடோன் வெடித்துச் சிதறியது.

இந்த வெடி சத்தமானது கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தாண்டி கேட்டதாக மக்கள் கூறுகின்றனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீடுகளில் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளது.

இதற்கு முன்னதாக, பல நாட்கள் இதே போன்ற வெடிச்சதங்கள் கேட்டு மக்கள் பலமுறை பீதி அடைந்துள்ளனர். இதற்கு முன்பே பல நேரங்களில் குவாரிகளில் வெடி வைப்பது வீடுகள் இடிவது போல் இருக்கும் அளவுக்கு அதிர்வுகளை ஏற்படும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே அச்சத்தில் இருந்த மக்களுக்கு இந்தச் சம்பவம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!


குவாரி உரிமையாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசு தெரிவித்துள்ளது. கல்குவாரியில் விதிமீரல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வி.ப.ஜெயசீலன் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முக்கியமான காரணம் எந்த கல்குவாரிகளும், பட்டாசு ஆலைகளும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை என்பது தான். தொழிலாளர்களின் உயிரை ஒரு பொருட்டாகவே இவர்கள் கருதுவது கிடையாது. குவாரி முதலாளிகளும் அரசு அதிகாரிகளும் இணைந்து நடத்தும் படுகொலைகள் தான் இது போன்ற சம்பவங்கள்.

எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் தான் பல குவாரிகள் இயங்குகின்றன என்பது அரசுக்கு தெரியாததல்ல. கல் குவாரி முதலாளிகளுடன் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் கூட்டு வைத்துக் கொண்டு தான் வெளியே பம்மாத்து காட்டுகின்றனர். எனவே, இது போன்ற விபத்துகளில் அரசு தான் முதன்மை குற்றவாளி.


அமுதவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க