பெரும்பான்மையான உடல்கள் மிகக் கடுமையாக சிதைந்து, நசுங்கி அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தன. பலியானவர்களின் குடும்பத்தினர்கள், சிதறிய உடல்களிலிருந்து தங்கள் குடும்பத்தினரின் உடல் அல்லது உடல் உறுப்புகள் எது என்பதை மரபணு பரிசோதனை மூலம்தான் அடையாளம் காண முடியும் என்ற அவலநிலை. ஒரு உடலுக்கு பலர் உரிமை கோரும் வலிமிகுந்த துயரச் சம்பவம். ஆம், 40 ஆண்டுகளில் நடைபெற்றிராத மிகக் கோரமான ரயில் விபத்து, ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலாசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பஹா நகர் பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும், அருகிலிருந்த தண்டவாளங்கள் மீதும் சிதறி விழுந்தன. சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வந்த ஹவுரா விரைவு ரயிலும் சிதறிய கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோரவிபத்து, இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். நாட்டு மக்களால் மறக்கப்பட முடியாத துயரச் சம்பவமாகும். இந்த விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 900-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பான்மையினர், முன்பதிவுசெய்யாத பெட்டியில் நெருக்கடியாக முண்டிமோதிக் கொண்டு சென்ற அன்றாடங்காய்ச்சி உழைக்கும் மக்கள்.
தார்மீக ரீதியாக இந்த விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக் கூடும்; ரயில்வேயில் சம்மந்தப்பட்டவர்கள் அல்லது வெளிநபர்களுக்கு தொடர்பிருக்கலாம். எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். பாசிஸ்டுகளின் இந்த பிணந்திண்ணி அரசியல் நமக்கு அறுவெறுப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்துகிறது. விபத்து நடந்த இடத்திற்கு புகைப்படமெடுப்பதற்காகச் சென்ற சுயவிளம்பர வெறிப்பிடித்த மோடி, “விபத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிப்போம்” என்று வசனம் பேசுகிறார்.
படிக்க: ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!
குற்றவாளியே, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என்று பேசுவது கேலிக்கூத்தாகும். 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் பல்வேறு அரசுத் துறைகளையும் சீரழித்து, ஒழித்துக்கட்டிவருவதை நாம் அறிவோம். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை இதுகாறும் இல்லாத அளவிற்கு மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருவது மோடி ஆட்சிக் காலத்தில்தான். ரயில்வே துறையை தனியார்-கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதற்காக மோடி அரசு மேற்கொண்டுவரும் சதிச் செயல்கள்தான் ஒடிசா ரயில் கோரவிபத்துக்கு காரணமே ஒழிய, பயங்கரவாதிகள் நிகழ்த்திய சதிச் செயல்கள் அல்ல.
திட்டமிட்டு சீரழிக்கப்படும் ரயில்வேதுறை!
மோடி ஆட்சியில் ரயில்வேதுறை முறையாக பராமரிக்கப்படாமல் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டு வருவதற்கு அண்மையில் வெளியாகியுள்ள அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளே சான்றுகளாக உள்ளன.
ரயில் சிக்னல் மற்றும் தடம் மாற்றுவதற்கான மின்னணு அமைப்புமுறையில் (எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டம்) ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் ஒடிசா ரயில் விபத்து நடந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சொல்லிவைத்தாற்போல, ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பிலிருந்து ஒன்றிய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி கர்நாடகாவில் ஹோசர்துங்கா ரோடு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நல்வாய்ப்பாக லோகோ பைலட்டின் (ஓட்டுநர்) சமயோசித செயற்பாட்டால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிதான் ஒன்றிய அமைச்சகத்துக்கு தென்மேற்கு ரயில்வே தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்று கவனத்திற்கு வந்தும் மோடி அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட விபத்து தடுப்புக்கான நிதி ரூபாய் 943 கோடியில் ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தியும் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு ரயில்வேயின் செலவினக் கணக்கு புத்தகங்களில் உள்ள தரவுகளின் மூலம்தான் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒடிசாவில் விபத்து நடந்த ரயில் நிலையமும் தென்கிழக்கு ரயில்வேயின் கீழ்தான் இயங்கி வருகிறது.
2017-ஆம் ஆண்டு அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்பாபு, வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ஆண்டுதோறும் 4,500 கி.மீ தூரம் தண்டவாளம் பழுதடைவதாகவும், அதில் ஏறக்குறைய 2,500 கி.மீ தண்டவாளம் மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில்வே துறையால் அமைக்கப்பட்ட “டாக்ஸ் போர்ஸ்” என்ற அதிகாரிகள் குழு, ஆண்டுதோறும் 200 ரயில் நிலையங்களில் சிக்னல் கட்டமைப்பு பழுதடைவதாகவும், அவற்றுள் 100 மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இவையனைத்துக்கும் நிதிப்பற்றாக்குறையே காரணமாகச் சொல்லப்பட்டது.
படிக்க: ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது – அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை
கடந்த ஆண்டு ஒன்றிய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கை, ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பாக செலவழிக்கப்பட வேண்டியவற்றுக்கு உரியவகையில் செலவழிக்கப்படவில்லை என்றும், பெரும் எண்ணிக்கையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதையும் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.
மொத்தம் 68,043 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிகப்பெரியதான நம் நாட்டின் ரயில்வே துறையை, தனிக்கவனம் செலுத்தி பராமரிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டுவந்த ரயில்வே தனி பட்ஜெட்டை 2017-ஆம் ஆண்டே சதித்தனமாக முடிவுக்கு கொண்டுவந்தது மோடி அரசு.
ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பொருட்டு, ரயில் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டில் 2022-23 ஆண்டு 14 சதவிகிதத்தை குறைத்துவிட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது குற்றம்சாட்டுகிறார் முன்னாள் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையாளர் ஸ்ரீதர் வி. மேலும் இதுபோல மோடி ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக குறைத்துவருவதையும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். பாலாசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் ரத்தம் நிதியமைச்சரின் கைகளில் வழிவதாகவும் அவர் மிகக் கடுமையாக சாடுகிறார்.
இவ்வாறு நிதிஒதுக்கீட்டை குறைத்து ரயில்வே துறையை சீரழிப்பதற்காகத்தான் 2017-ஆம் ஆண்டு ரயில்வே துறைக்கான தனிபட்ஜெட்டை முடிவுக்கு கொண்டுவந்தது மோடி அரசு.
ரயில் மோதலை உணர்திறன் (சென்சார்) அடிப்படையில் கண்டறிந்து தடுக்கக் கூடிய கவச் என்ற கருவி பொருத்தப்படாததும் ஒடிசா ரயில்விபத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கருவி மொத்த ரயில்வழித்தடங்களில் வெறும் 2 சதவிகித வழித்தடங்களிலேயே பொருத்தப்பட்டுள்ளது. கவச் என்ற இக்கருவி, “நேருக்கு நேராக மோதக்கூடிய ரயிலை மட்டும்தான் தடுக்கும், பாலாசோர் ரயில்விபத்து தடம்மாறும்போது ஏற்பட்டது” என்று நியாயவாதம் பேசுகிறது மோடி அரசு. இத்தகைய சொத்தை வாதங்களின் மூலம் தனியார்மயமாக்க நடவடிக்கைகள்தான் ஒடிசா ரயில்விபத்துக்கு காரணம் என்பதை மூடிமறைக்கிறது.
கார்ப்பரேட்மயமாகும் ரயில்வே துறை!
ரயில் நிலையங்கள், ரயில்வே வழித்தடங்கள், ரயில் என்ஜின் – ரயில் பெட்டி தயாரிப்பு உள்ளிட்டு ரயில்வே துறையின் பல்வேறு அங்கங்களும் இன்று படிப்படியாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.
அதிக வருவாய் ஈட்டித் தரும் வழித்தடங்களில் ரயில்களை இயக்க தனியார்களுக்கு “பாரத் கவுரவ்” திட்டத்தின் கீழ் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இத்திட்டத்தின் கீழ் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு நான்கு வழித்தடங்களில் ரயிலை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், 150 சுற்றுலா ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா.
மோடி அரசு மிகவும் படோடோபமாக அறிவித்து செயல்படுத்திவரும் திட்டம் வந்தே பாரத். அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்கத் திட்டமிட்டிருக்கிறது மோடி அரசு. இது மிகப்பெரிய கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டமாகும்.
வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகள், என்ஜின்கள், சீட்டுகள் முதலியவற்றை தயாரிப்பதற்கு பல பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது மோடி அரசு; இந்த தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிறுவனமான ஐ.சி.எஃப்-வின் கட்டமைப்புகளையும் நமது ரயில்வே தொழிலாளர்களையும் பயன்படுத்திக் கொண்டுதான் அதை உற்பத்தி செய்கிறார்கள். “நீ அரசி கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன், இருவரும் ஊதிஊதிச் சாப்பிடலாம்” என்ற கதையாக “தனியார்-அரசு கூட்டுத்திட்டம்” என்ற பெயரில் மிக அயோக்கியத்தனமான கார்ப்பரேட் கொள்ளை திட்டத்தை அமல்படுத்திவருகிறது மோடி அரசு.
படிக்க: ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்
தற்போது மோடியின் நண்பரான அதானி குழுமமும் ரயில்வே துறையில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்துவரும் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட “டிரெயின்மேன்” (Trainman) என்ற இணையதளத்திலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். இந்த இணையதளத்தை “ஸ்டார்க் எண்டர்பிரைசஸ்” எனும் நிறுவனம் நடத்தி வந்தது. தற்போது இந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் அதானி குழுமம் வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், “ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அரசு வந்த பிறகுதான் ரயில்வே துறையை மேம்படுத்திவருவதாக பல்வேறு கவர்ச்சிகரமான தரவுகளை அடுக்கியிருந்தார். 2014ஆம் ஆண்டுவரை ரயில்வே துறையின் முதலீடு என்பது 45 ஆயிரம் கோடிகளாகத்தான் இருந்தது என்றும், தற்போது அது 2.45 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும் பெருமை பொங்கியிருந்தார்.
அது உண்மைதான். ஆனால், இந்த நிதி ரயில்வே துறையின் கட்டமைப்புகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் செலவு செய்வதற்கான நிதி அல்ல. வந்தே பாரத், கவுரவ் பாரத் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளாகும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பாலும், நாட்டு மக்களின் வரிப்பணத்தாலும் கட்டி வளர்க்கப்பட்ட மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை விலைகொடுத்து வாங்குவதற்கு எந்த கார்ப்பரேட்டுகளிடமும் நிதி இல்லை. மேலும், அடிக்கட்டுமானச் செலவினங்களை அரசிடம் தள்ளிவிட்டு, லாபத்தை மட்டும் கொள்ளையிடுவதற்கு முயற்சிக்கிறார்கள். அரசே பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மாமா வேலைபார்க்கும் இந்த கொள்கைக்குப் பெயர்தான் மறுகாலனியாக்கம். இக்கொள்கை ஏற்படுத்தியிருக்கும், ஏற்படுத்தப்போகும் பேரழிவின் ஒரு சாட்சியம்தான் ஒடிசா ரயில்விபத்து!