கடந்த ஜூன் 16 ஆம் தேதி அன்று காலை 9.00 மணி அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (Kanchanjunga Express) மீது சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ரங்கபாணி (Rangapani) மற்றும் சதேர்ஹாட் (Chatterhat) ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நடந்துள்ளது. முன்னதாக, அதிகாலை 5.50 மணி முதல் ராணிபத்ரா ரயில் நிலையம் மற்றும் சதேர்ஹாட் சந்திப்பு இடையேயான தானியங்கி சிக்னல் பழுதடைந்து இருந்துள்ளது. வழக்கமாக தானியங்கி சிக்னலில் பழுது ஏற்பட்டால், ரயில் சிக்னலை கடக்க சம்பந்தப்பட்ட ரயில்வே நிலைய மேலாளர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை ரயில் ஓட்டுநருக்கு அளித்த பின்பே ஓட்டுனரால் (லோகோ பைலட்) ரயிலை இயக்க முடியும்.
கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலை பொறுத்தவரை பழுதான சிக்னலை கடக்க ராணிபத்ரா ரயில் நிலைய மேலாளர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்தே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்திலிருந்து ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது. அதேபோல், சரக்கு ரயில் பழுதான சிக்னலை கடக்க TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை எந்த ரயில் நிலைய மேலாளரும் கொடுக்கவில்லை என்றும் பழுதான சிக்னலில், ஒரு ரயிலுக்குப் பின் செல்லும் மற்றொரு ரயில் செல்லும்போது 10 கி.மீ வேகத்திலேயே ஒவ்வொரு சிக்னலையும் கடக்க வேண்டும் என்றும், சரக்கு ரயிலின் ஓட்டுனர் விதிகளை மீறி பழுதான சிக்னலை கடந்து சென்றதாக ரயில்வே துறை கூறியுள்ளது.
இவ்வாறு, ரயில்வே தொழிலாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டதே ரயில் விபத்திற்கு காரணம் என்று அவர்களின் மீது பழியை போட்டுவிட்டு, விபத்திற்கு முக்கிய காரணமான தானியங்கி சிக்னலில் ஏற்பட்ட பழுதை ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைத்துள்ளது.
படிக்க: இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!
இந்த ரயில் விபத்தை போல தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இதற்கு முன்னரும் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பஹா நகர் பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும், அருகிலிருந்த தண்டவாளங்கள் மீதும் சிதறி விழுந்தன. சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வந்த ஹவுரா விரைவு ரயிலும் சிதறிய கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோரவிபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரை இழந்தனர். மேலும் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பான்மையான மக்கள், முன்பதிவுசெய்யாத பெட்டியில் முண்டிமோதிக் கொண்டு சென்ற அடித்தட்டு உழைக்கும் மக்களே ஆவர். இந்த விபத்திற்கு ரயில் சிக்னல் மற்றும் தடம் மாற்றுவதற்கான மின்னணு அமைப்புமுறையில் (எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டம்) ஏற்பட்ட கோளாறு தான் காரணம் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல, கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி கர்நாடகாவில் ஹோசர்துங்கா ரோடு ரயில் நிலையத்தில் தானியங்கி சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை உருவானது. ஆனால் ஓட்டுநரின் சமயோசித செயற்பாட்டால் அங்கு பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் பீகாரில் உள்ள ஆனந்த் விஹார் டெர்மினல்-காமக்யா சந்திப்பில் நார்த் ஈஸ்ட் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் பக்சரின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படிக்க: ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
இவ்வாறு, மோடியின் ஆட்சியில் ரயில் விபத்துகள் தொடர் நிகழ்வாகிவிட்டது. இந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே துறையில் 1990-களில் உருவாக்கப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதே காரணமாகும். அக்கொள்கைகளை ரயில்வே துறையில் மோடி-அமித்ஷா கும்பல் மிகத் தீவிரமாக அமல்படுத்தி கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை படிப்படியாக நிறுவி வருகிறது. விமானக் கட்டணத்திற்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படும் வந்தே பாரத், கவுரவ் பாரத் ஆகிய ரயில்கள் எல்லாம் ரயில்வே துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவுவது என்ற அடிப்படையில் இருந்துதான் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் மட்டும் ரயில்வே துறைக்கு மோடி அரசு, 2.45 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்துள்ளதாக கூறுகிறது. அந்த நிதியை ரயில்வே துறையின் பராமரிப்புகளும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் செலவு செய்து இருந்தாலே மேற்கு வங்கத்தில் ஏற்பட்டது போன்ற கோரமான ரயில் விபத்துக்களை தவிர்த்து இருக்க முடியும். ஆனால் மோடி அரசு அந்த நிதியை ரயில்வே துறையை கார்ப்பரேட் மயமாக்குவதற்காகவே செலவு செய்து வருகிறது.
ஆகவே, ரயில்வே துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டாத வரை தொடர் நிகழ்வாகிவரும் ரயில் விபத்துகளையும் கொத்துகொத்தாக மக்கள் உயிரிழப்பதையும் நாம் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, ரயில்வே துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டுவதற்கான போராட்டத்தை, ரயில்வே துறையில் காண்டிராக்ட் முறையை புகுத்துவது, ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக போராடி வரும் ரயில்வே தொழிலாளர்களுடன் இணைந்து நாம் கட்டியமைக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube