ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

டிசா ரயில் விபத்து நடைபெறாமல் தடுத்திருக்க முடியுமா? ஆம். கடந்த ஆண்டு இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பானது (Comptroller and Auditor General of India (CAG)) இந்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியது. இக்குறைபாடுகளைக் கருத்தில் கொண்டிருந்தாலே இக்கோர விபத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

கடந்த ஆண்டே, இந்த அமைப்பானது இந்திய ரயில்வே துறையில் பயன்படுத்தப்படுகிற தடைகள் மற்றும் இடர் கட்டுப்பாட்டு கருவிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஒன்றிய அரசை எச்சரித்திருந்தது. இந்த கருவியானது இந்திய ரயில்வே-யின் பல்வேறு துறைகளில், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சி.ஏ.ஜி அமைப்பானது கண்டறிந்த பல்வேறு குறைபாடுகளில்  பராமரிப்புக் குறைபாடுகளே முதன்மையானதாக இருக்கிறது. வெளிப்படையாகவே, ஒன்றிய அரசானது பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததே, பாலாசூரில் இந்த பேரழிவுமிக்க துயரச் சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.  இந்த சி.ஏ.ஜி அமைப்பானது, 2021- ஆம் ஆண்டுக்கான இந்திய தொடர்வண்டி துறையில் நிகழும் தடம் புரள்வு- என்ற தலைப்பில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ரயில்கள் தடம் புரள்வது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த கண்காணிப்பு நிறுவன முறைகள் என்ற ஒன்றே இல்லை என்று முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிடப்பட்டிருந்தது.

படிக்க : பகுதிநேர, தற்காலிக ஆசிரியர் முறைக்கு முடிவு கட்டு! | பு.மா.இ.மு. கண்டனம்

“கடந்த காலத் தவறுகளிலிருந்து, தவறுகளைத் திருத்திக் கொள்வதில் உள்ள குறைபாடுகளே, ரயில்கள் தடம் புரள்வதைத் தடுக்க முன்வைக்கப்படும் அறிக்கைகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன” என்று இந்த அறிக்கை கூறுகிறது.

“ஒவ்வொரு ரயில் விபத்திலும், ரயில்கள் தடம் புரள்வதற்கு ஒரு துறை சார்ந்த காரணிகளோ அல்லது கூட்டாக பல்வேறு துறை சார்ந்த காரணிகளோ காரணமாக அமைகின்றன. பெரும்பாலான ரயில்கள் தடம்புரண்டது என்பது ஒரே நேரத்தில் ஐந்து துறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளாலே நடந்தன. அந்த ஐந்து துறைகளாவன: 1. விதிகள் மற்றும் கூட்டு   நடைமுறை ஆணைகள் (Rules and Joint Procedure Orders (JPOs)), 2. பணியாளருக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை (Training/Counselling of staff),  3. செயல்பாடுகள் மீதான மேற்பார்வை ( Supervision of operations), 4. பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு  (Coordination and communication between staff of different departments) மற்றும் 5. திட்டமிட்ட ஆய்வுகள் (Scheduled Inspections)” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

“இந்த ரயில்வே நிர்வாகமானது, விசாரணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட விபத்து முன்தடுப்பு குறித்த கண்காணிப்பு ஆலோசனைகளை நிறைவேற்றுவதில்லை. இதே நிலைமைதான், இணைய கண்காணிப்பு சேவையான, பாதுகாப்பு தகவல் மேலாண்மை அமைப்பிலும் (Safety Information Management System ) நீடிக்கிறது “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தண்டவாள பராமரிப்பு அமைப்பு (Track Management System (TMS)) என்கிற இணைய வழி செயலியானது தண்டவாள பராமரிப்புச் செயல்பாடுகளை இணைய வழியில் கண்காணிப்பாதாகும். ஆனால், இந்த தண்டவாள பராமரிப்பு அமைப்பின் இணையதளமானது பயன்பாட்டிலேயே இல்லை” என்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.

மிக முக்கியமானது என்னவென்றால், தண்டவாள ஆய்வுகள் வெளிப்படையாகவே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. குறைபாடுடையவைகளாக அடையாளப்படுத்தப்பட்ட  350 தண்டவாளங்களில் வெறும் 181 மட்டுமே சரிசெய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த எண்ணிக்கையிலான தண்டவாள கார் (Track Recording Car) ஆய்வால் பெரும்பாலான தண்டவாளங்கள் தரமற்றதாக இருந்ததால், அந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரயில் போக்குவரத்திற்கும் ஆபத்தானதாக இருந்திருக்கிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் மட்டும் 217 ரயில் விபத்துகள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 75 ரயில்கள் தடம்புரண்டதால் ஏற்பட்டவையாகும் என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மேலும், 211 ரயில் விபத்துகள் சிக்னல் பிரச்சனையால் ஏற்பட்டவையாகும்.

படிக்க : மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய ரயில் பாதுகாப்பு நிதி அமைப்பின்  (Rashtriya Rail Sanraksha Kosh) வழிகாட்டுதல் நெறிமுறைக்கு எதிராக முக்கியவத்துவமற்ற வேலைகளுக்கு செலவு செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. நிதிப்பற்றாக்குறையால் ரயில் பாதுகாப்பு பணிகள் நிறுத்தப்பட்டன என்பதன் மூலம், ரயில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு நிதியின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்கிறது இந்த அறிக்கை.

சி.ஏ.ஜியால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கியமான மற்றொரு குறைபாடானது போதிய பணியாளர்கள் இல்லாததாகும். இந்திய ரயில்வே துறையானது காலிபணியிடங்கள் மற்றும் பெயரளவிற்கான அவுட்சோர்சிங் மூலமாகவே பாரமரிப்பு பணிகளை நிர்வகித்தது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோர ரயில் விபத்தின் குற்றவாளி ஒன்றிய அரசுதான் என்பதையும் மறைமுகமாக நிரூபிக்கிறது இந்த சி.ஏ.ஜி அறிக்கை (எமது கருத்து).

(குறிப்பு: மே 13 அன்று தெலுங்கானா டுடே-வில், “Odisha train accident was waiting to happen, indicates CAG report” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க