Tuesday, October 15, 2024
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்கெஜ்ரிவாலை விசாரிக்க என்.ஐ.ஏ - மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்

கெஜ்ரிவாலை விசாரிக்க என்.ஐ.ஏ – மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிச அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்கமே இந்த சதி வழக்காகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

-

கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த
டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை!

மோடி – அமித் ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட
மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!

06.05.2024

கண்டன அறிக்கை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா பரிந்துரை செய்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவேந்திர பால் புல்லரை விடுதலை செய்வதற்காக காலிஸ்தான் ஆதரவு குழுவான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பிடம் இருந்து 2014 – 2022 வரை ரூபாய் 134 கோடி பணம் பெற்றதாகவும், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான உணர்வுகளை தூண்டுவதாகவும் அகில இந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஷூ மோங்கியா அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனா இந்த பரிந்துரையைச் செய்துள்ளார்.

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அறிவு ஜீவிகள் அனைவரையும் பொய்யாக கைது செய்து சிறையில் அடைக்கவே பாசிச மோடி அரசால் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது பல வகைகளில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.


படிக்க: தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!


எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கிய மோடி அமித்ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களின் முன் தோற்று, கோழையைப் போல் அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அவரையும் அக்கட்சியையும் மொத்தமாக அழிக்கும் நோக்கத்துடன் தற்பொழுது தடைசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்து நிதி வாங்கினார் என்ற ஒரு சதி வழக்கை திட்டமிட்டு அவர் மீது போட்டுள்ளது.

தனக்கு ஒத்து வராத, கீழ்படியாத அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் பொய் வழக்குகளையும் பல்வேறு சதி வழக்குகளையும் போட்டு அவர்களை சிறையில் அடைக்கும் சதியே இது.


படிக்க: சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்


யார் மீது வேண்டுமானாலும் எவ்விதமான வழக்குகளையும் பதிவு செய்யலாம். அதற்கு எவ்விதமான ஆதாரங்களும் தேவையில்லை. கைது செய்துவிட்டு அதற்குப் பிறகு எல்லா விதமான பொய்யான சான்றுகளையும் பாசிச பிஜேபி ஆட்சியாளர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்கமே இந்த சதி வழக்காகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பல், அமைதியான முறையில் ஒரு போதும் செயல்படாது என்பதையே கெஜ்ரிவால் மீதான நடவடிக்கை உள்ளிட்டு அனைத்து பாசிச நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன.

இதற்கு எதிரான செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் தேர்தல் மேடைகளில் மட்டும் மேற்கொள்ளாமல் வீதிகளில் மக்களை திரட்டி மக்கள் எழுச்சிகளை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க