Saturday, May 25, 2024
முகப்புசெய்திஇந்தியா"ஒரே நாடு ஒரே ஜெர்சி!" - காவிகளின் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி!

“ஒரே நாடு ஒரே ஜெர்சி!” – காவிகளின் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி!

பிசிசிஐ (BCCI) செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பொறுப்பேற்ற பின் இந்திய அணிக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வது; ஆடையைத் தேர்வு செய்வது; கிரிக்கெட் விளையாட்டின் போது தேசவெறி மற்றும் மத வெறியைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

-

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.

இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் நடராஜ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதேபோன்று கே.எல்.ராகுல், புவனேஸ்குமார், ரூத்ராஜ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை போட்டிக்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நீல நிறத்திலிருந்த ஜெர்சியில் தற்போது அதிகளவு காவி நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஜெர்சி மற்றும் உபகரணங்களுக்கான விளம்பரதாரர் உரிமத்தைப் பெற்றுள்ள அடிடாஸ் நிறுவனம் (Adidas) புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது. இது தொடர்பான வீடியோவை அடிடாஸ் (Adidas) தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, அதில், “ஒரே நாடு ஒரே ஜெர்சி!, புதிய இந்திய அணிக்கு டி20 ஜெர்சியை வழங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே ஐசிசி (ICC) 2023 உலக கோப்பை தொடரில் வீரர்கள் பயிற்சி செய்வதற்கான சீருடையை பிசிசிஐ (BCCI) முழுமையாகக் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்


பிசிசிஐ (BCCI) செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பொறுப்பேற்ற பின் இந்திய அணிக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வது; ஆடையைத் தேர்வு செய்வது; கிரிக்கெட் விளையாட்டின் போது தேசவெறி மற்றும் மத வெறியைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை ஈடுபடுவது என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-இன் காவி மயமாக்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சான்றாக, கடந்தாண்டு உலக கோப்பையை காவிக் கும்பல் மத வெறியைத் தூண்டுவதற்காக இடமாக மாற்ற முயன்றது. 2023 உலகக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டுப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து காவிக் கும்பல் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதும், மைதானத்திற்குள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியபடி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தும் காவி கும்பலின் சதித்திட்டத்தில் மண்ணை அள்ளி போட்டது.

கிரிக்கெட் இங்கிலாந்தின் பிறப்பிடம் என்று அழைக்கப்பட்டாலும் அதற்கான ரசிகர்களும் அதனைக் கொண்டாடுவதும் இந்தியாவில்தான் அதிகமாக நடைபெறுகிறது. அப்படிப்பட்ட கிரிக்கெட்டில் இன்று சீருடை காவி நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவிகளின் பிடியில் இந்திய அணி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஏனெனில், சீருடை நிறம் மாற்றம் என்பது சாதாரண நடவடிக்கை கிடையாது. கிரிக்கெட்டை விரும்புபவர்கள் அனைவரும் விளையாட்டின்போது வீரர்கள் அணிந்திருக்கும் ஆடையையும் விரும்புவார்கள். வீரர்கள் பயன்படுத்தும் ஜெர்சியை ரசிகர்களும் வாங்கி அணிவார்கள். எனவே, கிரிக்கெட்டை கொண்டாடுவதற்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் தேசப்பற்று என்ற பெயரில் மதவெறியை தூண்டுவதற்கு ஏதுவாக காவிநிறத்திற்கு ஜெர்சியை மாற்றியுள்ளது என்றுதான் இதை பார்க்க வேண்டியுள்ளது. மேலும், இதன் மூலம் இந்தியா, ஒரு இந்துத்துவ நாடு அதன் நிறம் காவி என மற்ற நாடுகளுக்கு அறிவிக்கிறது காவிக் கும்பல்.

எனவே, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தேசவெறியையும் மதவெறியையும் உருவாக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக வேண்டாம் மத வெறி! விளையாட்டில் வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க