Sunday, September 15, 2024
முகப்புசமூகம்நூல் அறிமுகம்கல்வி: காவிமயம் - கார்ப்பரேட் மயம்! | சிறுநூல்

கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்! | சிறுநூல்

கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில்  இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

-

வெளியீடு: கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்!

முதற்பதிப்பு: மே 2024

வெளியிடுவோர்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு

முன்னுரை:

மோடி ஆட்சிக்கு வந்த பின், பாடத்திட்டங்களில் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்தான விஷயங்களை நீக்கியது, திப்பு சுல்தானின் வரலாற்றை நீக்கியது என்று கல்வியையே பிற்போக்குக் கருத்துகள் நிறைந்ததாக, பாசிசமயமாக மாற்றி,  மாணவர்களை சாதி -மத வெறியர்களாகவும், மூடநம்பிக்கைகள் உடையவர்களாகவும் உருவாக்க முயற்சி செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்.

இன்னொரு பக்கத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள், கோச்சிங் நிறுவனங்கள், இணையவழிக் கற்பித்தல் நிறுவனங்கள் கொள்ளையைத் தீவிரப்படுத்துகிறது. இதற்கேற்ப புதிய புதிய நுழைவுத் தேர்வுகள், கொள்கைகளை அறிமுகம் செய்கிறது.

ஒன்றிய அரசு திணித்து வரும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்; ஐஐடி  முதல் ஜே.என்.யூ வரை பல பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் சாதி – மதவெறியர்களின் ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் என ஒன்றிய அரசின் கல்வித்துறை மீதான காவி – கார்ப்பரேட்மய நடவடிக்கைகள் தொடர்ந்து மாணவர்களைக் காவு வாங்கி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி ஹைதராபாத் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டாத மாநிலங்கள் கூட வெவ்வேறு சொற்றொடர்களைப் பயன்படுத்தி, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.


படிக்க: “ஒரே நாடு ஒரே ஜெர்சி!” – காவிகளின் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி!


ஆம், உண்மைதான். ஆரம்பத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என கூறிக்கொண்ட திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக  மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை அமைத்தது. அதன் பிறகு, தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வோம் என பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள்  பேச ஆரம்பித்தார்கள். இச்சூழலில் தான், புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை மாநில கல்விக் கொள்கையில் சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் நெருக்கடியை அம்பலப்படுத்தி, இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஜவகர் நேசன்  அதிலிருந்து வெளியேறினார்.

மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கு முன்பே, ‘இல்லம் தேடிக் கல்வி’ ‘வானவில் மன்றம்’ ‘எண்ணும் எழுத்தும்’ ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ ‘நான் முதல்வன்’ ‘உயர் கல்வியில் பொதுப் பாடத்திட்டம்’, எமிஸ் தகவல் சேகரிப்பு, போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களின் மூலம்  பள்ளிக் கல்வியில் நேரடியாகத் தொண்டு நிறுவனங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டு வந்து புகுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதன் விளைவாக, பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அரசின் அடிப்படைக் கட்டமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகள் ஓங்கும் நிலை உருவாகி வருகிறது.

புதிய கல்விக் கொள்கையானது, கல்வியில் காவி – கார்ப்பரேட்மயத்தைப் புகுத்தக்கூடிய  பேராபத்து மிக்கது; ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே பண்பாடு என்ற ஒற்றைத்துவ பாசிச நடவடிக்கைகள் அனைத்தையும் கல்வியிலும் புகுத்தக்கூடியது; இதன் மூலம் இந்தி சமஸ்கிருத திணிப்பு கட்டாயமாக்கப்படும்; மாநில அளவிலான பாடத்திட்டங்கள் வரலாறுகள், புறக்கணிக்கப்பட்டு பொய்யான வரலாறுகளும் அறிவியலுக்கு புறம்பான குப்பைகளும் திணிக்கப்படும் என்பதே மாநில அரசின் கருத்து. ஆனால், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ‘கலா உத்சவ்’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கலை திருவிழாக்கள் இந்தி – சமஸ்கிருதப் பண்பாட்டை முன்னிறுத்துபவையே.

மாநில அரசின் இந்தப் போக்குகளைக் கண்டுதான் மத்திய அமைச்சர் மகிழ்கிறார்.

ஒன்றிய  அரசு கல்வித்துறை மீது தொடுத்து வரும்  காவி-கார்ப்பரேட்மய  நடவடிக்கைகளும், அவை ஏற்படுத்தும் விளைவுகளும் சமூகத்தில் சீற்றத்தை ஏற்படுத்துகின்றன.


படிக்க: பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்


இதிலிருந்து உருவாகும் எதிர்க்கருத்துக்களுடன் இணைந்தும், அவற்றின் பலனை அறுவடை செய்து கொள்ளவும், நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பேசியது திமுக. ஆட்சிக்கு வந்த பின், நீட் தேர்வை ரத்து செய்ய நடத்தி வரும் பலகட்ட சட்டப் போராட்டங்கள் அனைத்தும் முட்டு சந்தில் நிற்பதை உணர்ந்தாலும், களப்போராட்டங்கள் உருவாகாமல் தார்மீகரீதியாக தடுத்து வருகிறது. இன்னொரு பக்கத்தில், புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

சட்டப் போராட்டங்கள் என்ற பெயரில் திமுகவுக்கு வால் பிடித்துச் செல்வதாலும், பிஜேபி எதிர்ப்பு என்பதற்காக திமுக அரசு கொண்டுவரும் கார்ப்பரேட்மயத் திட்டங்களை ஆதரிப்பதாலும் இழப்பு மக்களுக்கே என்பதை திமுகவை ஆதரிக்கும் ஜனநாயக சக்திகள் உணர வேண்டிய நேரமிது.

கல்வித்துறை எதிர்கொள்ளும் இந்த அபாயத்தை, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியும், புதிய ஜனநாயகம் இதழும், மக்கள் கல்விக் கூட்டியக்கம் போன்ற அமைப்புகளும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் புதிய ஜனநாயகம் இதழில் கடந்த ஈராண்டுகளாக வெளியிடப்பட்ட, கல்வித்துறை மீதான தாக்குதல்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.

இதுபோல் கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில்  இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

  • பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவோம்!
  • களப்போராட்டங்களுக்குத் தயாராவோம்!
  • கல்வித்துறை மீதான காவி – கார்ப்பரேட்மயத் தாக்குதல்களை முறியடிப்போம்!

நன்கொடை : ரூ.50.00
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9444836642

 

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க