இஸ்ரேல் அரசு 10,000 இந்திய இளைஞர்களை எட்டு நாள் ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் போர்ப் பகுதிகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த ஆள்சேர்ப்பு இயக்கம் புனேவில் உள்ள அவுந்த் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதியன்று நிறைவடைந்தது.
ஆள்சேர்ப்பு இயக்கத்தை மேற்பார்வையிட 12 இஸ்ரேலிய அதிகாரிகளைக் கொண்ட குழு செப்டம்பர் 16 அன்று இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் காசா மீதான இனப்படுகொலைப் போரைத் துவங்கிய பிறகு இஸ்ரேலில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளிலிருந்த சுமார் ஒரு லட்சம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு வேலையில் இருந்து நீக்கிவிட்டது.
இந்நிலையில் அந்நாட்டின் கட்டுமானம், பெயிண்டிங், வெல்டிங் உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்காக, வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க இந்திய – இஸ்ரேல் அரசுகளுக்கிடையே 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் வேலையின்மை அதிகமுள்ள பா.ஜ.க ஆளும் மாநிலங்களான ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இளைஞர்களை நேர்முகத்தேர்வின் மூலம் இஸ்ரேல் நிறுவனங்கள் பணிக்கு எடுத்து வருகின்றன.
தற்போது வரை 4,800 இளைஞர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு கூடுதலாக செப்டம்பர் 18 அன்று 1500 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது.
படிக்க: லெபனான்: 500 பேரை படுகொலை செய்த போர்வெறி பிடித்த இஸ்ரேல்!
இந்நிலையில், கூடுதலாக 10,000 இளைஞர்களை வேலைக்கு எடுக்க இஸ்ரேல் முதலாளிகள் முடிவெடுத்துள்ளனர். இதனையும் இந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
காசா மீதான போரைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலின் தெற்கு எல்லை, துறைமுகம், தலைநகர் ஆகிய பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வளவு அபாயகரமான சூழலில் தான், இஸ்ரேலின் நலனைக் காக்க பாசிச மோடி அரசு முடிவெடுத்து இந்திய இளைஞர்களைப் பலி கொடுக்க தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
ஏற்கெனவே, இஸ்ரேலுக்கு ஆயுத உபகரணங்களை வழங்கிவரும் பாசிச மோடி அரசு தற்போது உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் பணிபுரிய இந்தியத் தொழிலாளர்களை தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறது.
இது பாலஸ்தீன தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒருபுறம் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறி நாடகமாடினாலும், மறுபுறம் தனது செயல்பாட்டின் மூலம் பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தி வருகிறது பாசிச மோடி அரசு.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram