லெபனான் மீது இனவெறி இஸ்ரேலானது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 50 குழந்தைகள், 94 பெண்கள் உள்பட 558 பேரைப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இனவெறிபிடித்த இஸ்ரேல் நேற்று (செப்டம்பர் 23 அன்று) லெபனானுக்குள் 1600க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்கியது. தெற்கு லெபனானின் மீது தாக்குதலைத் தொடங்கி, பின்னர் கிழக்கில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதிவரை ஏவுகணை தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து லெபனானின் இன்று (செப்டம்பர் 24) சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நடந்த ஏவுகணை தாக்குதலில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உள்பட 558 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 1835 பேர் காயமடைந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
“இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் தெற்கு லெபனானில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்” என்று ஐ. நா அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ சால்ட்மார்ஷ் ஜெனிவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
படிக்க: அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் பாசிச இஸ்ரேல் அரசு
வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில் “தெற்கு லெபனானில் இருந்து மக்கள் வெளியேறும் இடத்தில் நான் இருந்தேன். மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கார்களில் தலைநகர் பெய்ரூட்டை நோக்கிப் புறப்படுவதைக் கண்டேன். நெடுஞ்சாலைகளில் கூச்சல் குழப்பத்துடன் அச்சத்தில் சென்று கொண்டிருக்கும் மக்கள் மீதும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது.
வெளியேறிக் கொண்டிருந்த மக்கள் ‘நாங்கள் இடம்பெயர்ந்து செல்கிறோம். ஆனால் இது எவ்வளவு தூரம் தொடரும் என் தெரியவில்லை’ என்றனர்.
போர்க்களங்களில் இடம்பெயர்தல் ஒரு ஆயுதமாகிவிட்டது. அப்பாவி மக்களை இங்கே செல்லுங்கள் அங்கே செல்லுங்கள் என்று நிர்பந்துப்பது ஒரு போர் உத்தி. இஸ்ரேலின் வடக்குப் பகுதி மீது லெபனானின் தாக்குதல் ஓயும்வரை தெற்கு லெபனானில் உள்ள உங்கள் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாது என்று ஹிஸ்புல்லாக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது” என்றார்.
நேற்று (செப்டம்பர் 23) இரவு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பள்ளிகள் மற்றும் பிற பொது இடங்கள் தற்காலிக தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதோடு காயமுற்றவர்களுக்கு இடமளிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் பணியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் கூறுகையில், “இஸ்ரேலின் ஏவுகணைகள் மருத்துவமனைகள், ஆம்புலன்சுகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களைக் குறிவைத்துத் தாக்கியது” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல் பற்றி ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிறுவனத்தின் (UNICEF) தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் கூறுகையில், “அதிகரித்து வரும் ஆபத்து எண்ணற்ற குழந்தைகளை அச்சுறுத்தியுள்ளது. வான்வழி மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் காரணமாகக் குழந்தைகளிடம் மனரீதியிலான பாதிப்புகளுக்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளன. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் “நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். நாங்கள் போரை விரும்பவில்லை. இந்த அனைத்து மோதல்களையும் இஸ்ரேல் உருவாக்குகிறது. மத்தியக் கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் உருவானால் அது உலகின் எந்த நாட்டுக்கும் பலனளிக்காது. இதனை நாங்கள் நன்றாக அறிவோம்” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: லெபனான் பேஜர் வெடிப்பு: அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு
நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி கூறுகையில், “லெபனான் போரை நாடவில்லை; லெபனான் மக்களும் போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போருக்கு வாருங்கள் என்று எங்களை அழைக்கிறது” என்று தெரிவித்தார்.
இனவெறி இஸ்ரேலானது கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவை படுகொலை செய்ததன் மூலம் ஈரானைப் போருக்கு அழைத்தது; கடந்த வாரம் லெபனானில் பேஜர்களை வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தது; மற்றும் செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஹிஸ்புல்லாவினைச் சேர்ந்த உயர் ராணுவ அதிகாரியினை சுட்டுக்கொன்றது ஆகியவற்றின் மூலம் லெபனான், ஈரான் அகிய இரண்டு நாடுகளையும் போருக்குள் இழுக்க முயல்கிறது. போர் வெறி பிடித்த இஸ்ரேல் அமெரிக்காவின் துணையோடு மத்தியக் கிழக்குப் பகுதியில் ஒரு தீவிரமான போரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram