லெபனான் நாட்டில் கடந்த செப்டம்பர் 17 அன்று பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியாகி உள்ளதாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வைத்திருந்த பேஜர்களும் வெடித்துள்ளன.
பேஜர்கள் வெடித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், நேற்று (செப்டம்பர் 18) வாக்கி டாக்கிகளும், வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் சோலார் தகடுகளும் வெடித்துள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 3,250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பேஜர்கள் வெடித்து இறந்த ஹிஸ்புல்லா அமைப்பினரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டோரின் வாக்கி டாக்கிகளும் வெடித்துள்ளன.
இந்த வெடிப்புகளால் ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த பயங்கரவாதத் தாக்குதல் அப்பாவி லெபனான் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் “நாம் என்ன பேசுகிறோம், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை இஸ்ரேல் ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. அதை வைத்து எப்போது வேண்டுமானாலும் நம் மீது தாக்குதல் நடத்தப்படலாம். அதனால் நம் அமைப்பினர் யாரும் செல்போன் பயன்படுத்த வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்திருந்ததையடுத்து மொத்த அமைப்பினரும் செல்போனில் இருந்து பேஜருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் மாறியிருந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமல்ல லெபனானில் பொதுமக்கள் பலருமே பேஜர் பயன்படுத்தி வருகின்றனர்.
படிக்க: ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா – இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு
மத்திய கிழக்காசிய நாடான லெபனானை சேர்ந்தது ஹிஸ்புல்லா அமைப்பு. ஹிஸ்புல்லா என்பதற்கு “கடவுளின் கட்சி” என்று பொருள். இது ஒரு ஷியா முஸ்லீம் அமைப்பாகும். முன்னதாக, தெற்கு லெபனானில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பை 2000-ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா வெற்றிகரமாகப் போராடி அகற்றியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் தொடங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தான் தற்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் – லெபனான் தாக்குதலுக்கு அடிப்படை. பாலஸ்தீனத்திற்கு லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ராக்கெட் குண்டுகள், ஏவுகணை தாக்குதல்கள் உள்ளிட்ட வான்வெளித் தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடிக்கும் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் என அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்வதன் காரணமாக, லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் எதாவது வெடிப்புகள் நடக்கலாம் என்ற அச்சத்தால் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் வயர்லெஸ் சாதனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டு விடுப்பிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
படிக்க: காசா: ‘பாதுகாப்பு’ வளையப் பகுதியிலும் கொடூரத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
தற்போது வெடித்துள்ள பேஜர்கள், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் அனைத்தையும் வாங்கும்போதே, அதில் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பால் அதியுயர் வெடிமருந்துகள் ரகசியமாக நிரப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த பேஜர்கள் “கோல்ட் அப்பொலோ” நிறுவனத்தின் லோகோவைக் கொண்டிருந்ததால் தைவானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அந்த தைவான் நிறுவனம் தங்களுக்கும், பேஜர் வெடிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. தற்போது அது ஹங்கேரியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அப்பாவி லெபனான் மக்களைப் படுகொலை செய்துள்ள இஸ்ரேலின் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்த வெடிப்புகளுக்குக் காரணம் இஸ்ரேல் தான் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது. மேலும் ஐ.நாவும், பல உலக நாடுகளும் இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram